தனிமையா…? `சிக்கன் சூப்’ குடிங்க!

`தனிமையில் வாடுகிறீர்களா…? `சிக்கன் சூப்’ பருகுங்க’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

`சிக்கன் சூப்’, உருளைக்கிழங்கு மசியல், பாலாடைக்கட்டியுடன் `மக்ரோனி’ போன்றவை நலமளிக்கும் உணவுகள். தனிமையால் ஏற்படும் வெறுப்பை, விரக்தியை அவை போக்கும் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

உளவியல் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் அவர்கள் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த உணவுகள் ஒருவேளை ரத்த நாளங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சலிப்பான உணர்வுகளைத் தணிய வைக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நன்றாக இருக்கும் அல்லது திருப்திகரமான உணர்வைத் தரும் என்று உறுதி கூறுகிறார்கள்.

இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரும், பபலோ பல்கலைக் கழக மாணவருமான ஜோர்டான் டிராய்சி, “எனது குடும்பத்தைப் பொறுத்தவரை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது” என்கிறார்.

இவருடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டவர் ஷிரா கேப்ரியல். சமூகவியல் விஷயங்களில், மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர் அல்லாத விஷயங்களைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஒருவருக்கு நெருக்கமானவர், அன்புக்குரியவர் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை நலமளிக்கும் உணவும் ஏற்படுத்துமா என்று டிராய்சி யோசித்திருக்கிறார்.

“நாங்கள் செய்த ஆய்வில், பொதுவாக நலமளிக்கும் உணவுகள், நமக்குப் பிடித்தவர்கள் விரும்பிச் சாப்பிடுபவை என்று தெரியவந்துள்ளது” என்கிறார் டிராய்சி.

“குறிப்பிட்ட உணவுகளைப் பற்றி நினைப்பது அல்லது சாப்பிடுவது, நமக்கு நெருக்கமானவர்களை ஞாபகப்படுத்துகிறது. நாம் பிறருடன் எப்போதும் தொடர்பு வைத்திருக்கிறோம் என்று உணர மக்கள் பல வழிகளை வைத்திருக்கிறார்கள் என்பதை எங்கள் ஆய்வு உணர்த்துகிறது” என்று முடிக்கிறார், ஜோர்டான் டிராய்சி.

Leave a Reply

%d bloggers like this: