ஒரே நாளில் இரண்டு இடங்கள் – வெப்பம் தணிக்கலாம் வாங்க!

தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாக தேவதானப்பட்டியிலிருந்து 6-வது கிலோ மீட்டரில் கொடைக்கானல்-பழனிமலை அடிவாரத்தில் ரம்மியமாக அமைந்திருக்கிறது மஞ்சளாறு அணை.
போகும் வழியிலே பிரசித்தி பெற்ற மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயில் முன்பாக ஓடும் மஞ்சளாறு.
“U’ வடிவில் அமைந்த மஞ்சளாறு அணையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள். சுற்றிலும் மூன்று பக்கமும் உயர்ந்த அடர்ந்த பசுமையான மலைகள்.
கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்த இந்த அணைக்கு இருட்டாறு, தலையாறு, மூலையாறு என மூன்று மலையருவிகளில் இருந்து வரும் நீர் தேங்கி நிற்கும்.
தென்மேற்கு, வடமேற்கு பருவ காலங்களில் நீர் நிரம்பி மலைகளை முட்டி மோதி விளையாடும்.
தலையாறு அருவி பசுமை மலைகளுக்கு இடையே பாறையில் சறுக்கி விழுவது மேகக் கூட்டங்களுக்கு இடையே ரம்மியமாக இருக்கும்.
தலையாறு அருவியின் அடிவாரத்தில்தான் காமாட்சி அம்மன் பிறந்த “அம்மா மச்சு’ கோயில் அமைந்துள்ளது.
கொடைக்கானல் செல்லும் பயணிகள் “மலைச் சாலையில் நின்று டம் டம் பாறை அருகே டவரில் ஏறி ரசிக்கும் முதல் பசுமைப் பள்ளத்தாக்கு இந்த மஞ்சளாறு அணைதான். காலை முதல் மதியம் வரை இந்த அழகை ரசித்துவிட்டு மதியத்துக்கு இன்னொரு இடம் போவோம் வாருங்கள்.’

மஞ்சளாறு டேமிலிருந்து கிளம்பி தேவதானப்பட்டி வழியாக பெரியகுளம் நகருக்கு முன்பே வடக்குப் பக்கம் கும்பக்கரை அருவி வரவேற்கும்.
இயற்கையாய் உற்பத்தியாகி கொடைக்கானல் சாரலில் குதித்து வரும் ஆரோக்கிய அருவிதான் கும்பக்கரை அருவி.
குதித்து, சறுக்கி, தவழ்ந்து தேங்கி ஓடிவரும் இந்த அருவியின் பல்வேறு அமைப்புகள் குடும்பத்தோடு குளியல் போட்டு மகிழ சிறந்த இடம்.
இது பெண்கள், குழந்தைகள் நீந்தி, தண்ணீருக்குள் உட்கார்ந்து குதித்து பாதுகாப்பாக குளிக்கும் சகல குளியல் வசதி கொண்ட அருவி.
நம் உச்சந்தலையில் குதித்து சூடு குறைக்கும் அருவிக்குளியலும் படு சூப்பர்.
ஆக, ஒரே நாளில் இரண்டு சுற்றுலாவாக குடும்பத்தோடு சுற்றி வரலாம். சுற்றுப்புற தேனிமாவட்ட மக்களுக்கு சுருக்குப் பையில் காசு இருந்தால் போதும்.
வெளி மாவட்ட விருந்தாளிகள் வந்து போக, அரசு பஸ், ஆட்டோ வசதி உள்ளது. பெரிய குளத்தில் இருந்து காபி செலவுதான் கட்டணம்.
உடனே கிளம்பலாம் வாங்க!

Leave a Reply

%d bloggers like this: