ஆரோக்கிய சுற்றுலா: (பூலாம்பட்டி நீர்த்தேக்கம்)


மேட்டூர் அணைக்கு தம்பி என்று சொல்லும் அளவிற்கு பரந்து கிடக்கிறது பூலாம்பட்டி நீர்த்தேக்கம்)
காவிரிக் கரையோரம் மலை அதனையொட்டி கடல் போல் தண்ணீர். தென்னை மரங்கள். கேட்கவா வேண்டும்… அளவான பசுமை, இதமான படகுப் பயணம் என அச்சு அசலாக கேரளா போலவே உள்ளது நம்ம சேலத்துப் பக்கமுள்ள பூலாம்பட்டி. இப்படியொரு அழகான இடமா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. காவிரி, தனது பயணத்தில் மேட்டூரில் இளைபாறிவிட்டு, அடுத்த 15-வது கிலோ மீட்டரில் பயணத்தின் நடுவே டீ குடிக்க நிற்பது போல் நின்று செல்லும் இடம்தான் பூலாம்பட்டி 20 ஆண்டுகளுக்கு முன்பு பாக்யராஜ் “பவுனுபவுனுதான் படம் முழுவதையும் பூலாம் பட்டியில் எடுத்த பின்பு இந்த இடம் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. அந்தப்படத்திற்காக விடப்பட்ட விசைப்படகுதான் இங்கு விடப்பட்ட முதல் விசைப்படகு அதன்பிறகு விஜய்யின் நினைத்தேன் வந்தாய் அருண்பாண்டியனின் “முற்றுகை  என சினிமாக்காரர்களின் லொகேஷனாகிவிட்டது பூலாம்பட்டி. எடப்பாடியிலிருந்து நான்கு ரூபாய் கொடுத்து பூலாம்பட்டிக்கு பஸ் ஏறியதுமே தூரத்திலிருக்கும் பூலாம்பட்டி மலை அழகாக நம்மை வரவேற்கிறது. வழியெங்கும் சிற்றூர்களும் ஏரிகளும் தோப்புகளும் துரவுகளும் வந்து வந்து செல்கின்றன. மேட்டூர் அணையின் தம்பி என்று சொல்லும் அளவிற்கு பரந்துவிரிந்து கிடக்கிறது. நீர்த்தேக்கம், குளிக்க ஏற்ற இடம், உற்சாகக் குளியலுக்குப் பின் படகுச்சவாரி ஆள் ஒன்றுக்கு 30 ரூபாய். குரூப்பாக செல்பவர்கள் மொத்த படகையும் ரூ.500-க்கு வாடகை பேசி எடுத்துக் கொள்கிறார்கள். 1கி.மீ தூரத்திலுள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தை படகு அடைந்து மீண்டும் திரும்பி பூலாம்பட்டிக்கு வரும், நதியில் ஒரு கடல் பயணம் என்ற திருப்தியுடன் கரையிறங்கினால் காவிரியில் பிடித்த மீனைப் பொரித்துத் தருகிறார்கள். ஒரு கிலோ 150 ரூபாய்தான். ஆற அமர உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஒரு குளியலைப் போட்டுவிட்டு ஊர் திரும்பினால் குறைந்த செலவில்
குட்டி கேரளா சென்று வந்த திருப்தி ஏற்படும். எப்படி செல்வது?: சேலம் டூ எடப்பாடி-12ரூ, எடப்பாடி டூ பூலாம்பட்டி – ரூ.4 , தங்குவதற்கு சேலத்தில் ரூம்போட்டுக் கொள்ளலாம்.

Leave a Reply

%d bloggers like this: