உண்ணாவிரதம்: ஒளிந்திருக்கும் உண்மைகள்!

“உண்ணாவிரதம்”…
இப்போது நாடெங்கும் உச்சரிக்கப்படும் மந்திரச் சொல். சுதந்திர போராட்டத்துக்குப் பிறகு சமீப காலமாகத்தான் உண்ணாவிரதம் மீண்டும் ஒரு போராட்ட முறையாக ஏற்கப்பட்டு அனேக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
உண்ணாவிரதம் என்பது எளிதான போராட்டமல்ல. அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் போராளி கள் பல விஷயங்களை கவனிக்க வேண்டும்.
உடல் நலம்,
உயிருக்கு பாதுகாப்பு,
உண்ணாவிரதத்தின் நியாயம்,
மக்களின் ஆதரவு,
உண்ணாவிரதத்தால்பலனடைவோர் எண்ணிக்கை,
அது நிறைவேறக் கூடிய சாத்தியக்கூறுகள் என பல விஷயங்கள் அதில் அடங்கியுள்ளது.
உண்ணாவிரதம் என்பது தனிப்பட்ட ஒருவரின் பிரச்சினைக்காக இல்லாமல், பொதுநல பிரச்சினைக்காக இருக்கும்போது மட்டுமே அது வலிமை பெறுகிறது. அதுவே நாட்டுநலன் எனும் போது மக்கள் சக்தியும் இணைந்து பெரும் புரட்சியாகவே உருவெடுக்கிறது. புனித காரியமாகவும் போற்றப்படுகிறது.
சுதந்திரத்திற்காக பல்வேறு வகையில் பலர் போராடியபோது, சாத்வீகமான முறையில் காந்திஜி மேற்கொண்ட உண்ணாவிரதங்களும், அகிம்சை போராட்டங்களும் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அதன் வெற்றிதான் நாம் இப்போது அனுபவிக்கும் சுதந்திரம்.
உண்ணாவிரதம் சாதாரணமானதல்ல. ஒரு பாவமும் அறியாத ஒருவர் பலருக்காக உண்ணாவிரதம் இருக்க முற்படும்போது, அது சம்பந்தப்பட்டவர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். உண்ணாவிரதம் இருப்பவரின் கோரிக்கையை பரிசீலிக்க வைக்கும். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியையும் அவருக்கு கொடுக்கும்.
காரியங்கள் வெற்றி பெற, மற்றவர்களின் கவனத்தை நம்மை நோக்கி ஈர்க்க, தன்னுடைய முயற்சியில் முழுப்பலன் பெற, காலதாமதமின்றி பலன் கிடைக்க உண்ணாவிரதம் ஒரு சிறந்த போராட்ட முறைதான்.
சில உண்ணாவிரதங்கள் பொதுநலன் போல தோன்றினாலும் எந்த பலனுமின்றி முடிந்துவிடும். காரணம் உள்நோக்கம் தெளிவானதாக இல்லாமல் இருப்பதுதான்.
சிறிது காலத்திற்கு முன், கங்கை நீரை தூய்மைப்படுத்தக்கோரி நிகமானந்தா உண்ணா விரதம் மேற்கொண்டார். நல்ல விஷயம்தான். இவருடைய உண்ணாவிரதம் வெற்றி பெற்று கங்கை நதி தூய்மை அடைந்துவிட்டதைப்போல ஒட்டு மொத்த இந்தியர்களும், கற்பனை செய்து சந்தோஷப்பட்டுக் கொண்டனர். ஆனால் உண்ணாவிரதம் வெற்றி பெறவில்லை.
இவருடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத தர்மசங்கடமான நிலை அரசுக்கு ஏற்பட்டது. கங்கை நதி என்பது ஒரு மாநில அரசுக்கோ, ஒரு அமைப்புக்கோ சொந்தமானது அல்ல. இந்திய தேசமே உரிமைக் கொண்டாடும் பெருமைக்குரியது.
கங்கை நதி அசுத்தம் அடைந்ததற்கு பல காரணங்கள் உண்டு.
* பெருகிவரும் ஜனத்தொகை.
* கங்கை நதிக்கரையில் உருவாகி வரும் நகரங்கள்.
* ஆண்டுதோறும் கூடும் பல லட்சக்கணக்கான யாத்ரீகர்கள்.
* ஆசிரமங்கள், கோவில்கள், யாகசாலைகள், கடைகள் போன்றவற்றின் பயன்பாடு.
* புனித நீராடல், இறுதி சடங்குகள் செய்வது.
இப்படி பல்வேறு காரியங்களுக்கும் பயன்பட்டு சுத்தத்தை இழந்து கொண்டிருக்கும் கங்கை நதியின் தூய்மை பற்றி சிந்திக்கவே தலை கிறு கிறுக்கிறது. அதை சுத்தப் படுத்துவது அரசால் உடனடியாக இயலாத காரியம். அதனால், நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும் சாத்தியக் கூறுகள் இல்லாத காரணத்தால் அந்த உண்ணாவிரதம் தோல்வியில் முடிந்தது.
உண்ணாவிரதத்தின் கொள்கை மிக எளிதானது. தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் ஒரு மனி தன் உண்மையில் தன்னை வருத்திக் கொள்ள வில்லை. சம்பந்தப்பட்ட எதிர் அணியினரை வருத்துகிறான். இதுதான் உண்மை. அதனால் ஒரு மனிதனுக்குள் இருக்கும் மனிதத் தன்மையை வெளிக் கொண்டுவர உண்ணாவிரதம் உதவுகிறது.
மற்ற போராட்டங்கள் எதிராளியின் பலத்தோடு மோதக் கூடியது. உண்ணாவிரதம் எதிராளியின் மனதோடு மோதிப் பார்ப்பது. மற்ற போராளிகளை எளிதில் வீழ்த்திவிடலாம். உண்ணாவிரத போராளிகளை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது. மற்ற போராட்டங் களில் வன்முறையும் சேர்ந்துவிடும். உண்ணாவிரதம் இன்முறைப் போராட்டம்.
இது எல்லை மீறிய செயல் இல்லை. ஒரு நியாயத்திற்காக போராடும் போராளியின் மன உறுதியை இது பலப்படுத்துகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி சாத்வீக யுத்தத்தில் ஈடுபடும் இவர்களை காலம் கதாநாயகனாக்கிவிடுகிறது!

Leave a Reply

%d bloggers like this: