பூமித்தாயின் அணிகலன்களை சேதமின்றி காப்போம்!

ந்த உலகம் அழகானது. அழகான இந்த உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் வாழ வழி இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது இந்த பூமி. அதனால்தான் பூமியை தாய் என்கிறோம். தாயாக இருப்பதால்தான் உயிர்கள் அனைத்திற்கும் பாகுபாடின்றி உணவளிக்கிறது, இந்த பூமி. உயிர்களுக்கு உறைவிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் இயற்கை அமைந்துள்ளது.

இயற்கையை புரிந்து கொண்டு உயிரினங்கள் வாழ்கின்றன. அதனால் அவை இயற்கையை அழிக்க முற்படுவதில்லை. ஆனால் அந்த அறிவும், உணர்வும் மனிதனிடம் மிக குறைவாகவே இருக்கிறது. ஆறறிவு கொண்ட மனிதன் வாரி வழங்கும் இயற்கையை வறண்டு போகச்செய்கிறான். இதை ஒரு அழிவின் தொடக்கம் என்று சொல்லலாம்.

மாசுபட்ட இயற்கை மனிதனுக்கு உதவாது. காசுக்காக அழிக்கப்படும் இயற்கை, காசு கொடுத்தாலும் மீண்டும் திரும்பவராது. மனித மனங்களுக்குள் தேவைகள் திணிக்கப்படும்போது அவை ஆசைகளாக உருவாகி, விரைவாகவே பேராசையாகிவிடுகிறது. அந்த பேராசை தீயில் மெல்ல மெல்ல இயற்கை அழிக்கப்படுகிறது. அதை உணரும் நேரத்தில் நம்மை சுற்றி பேரிழப்புகள் பல நிகழ்ந்திருக்கும்.

மனிதனைத் தவிர இந்த பூமியில் வாழும் எந்த உயிரினமும் இயற்கையை அழிப்பதில்லை. கொடூரமான சிங்கம், புலி கூட பசிக்கும்போது மட்டுமே பிராணிகளை வேட்டையாடுகிறது. கண்ணில்படும் உயிரினங்களை எல்லாம் அது அழித்துவிட்டு செல்வதில்லை. தனது உடல் தேவைக்கு மட்டும் அது இயற்கையிடம் அனுமதிபெற்று அழிக்கிறது. மனிதன் மட்டும் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் இயற்கையை சீண்டி பார்க்கிறான்.

கடலோர பகுதிகளில் இருக்கும் சவுக்கு காடுகளை கண்மண் தெரியாமல் அழித்ததன் விளைவு, சுனாமியால் நாம் பேரழிவை சந்தித்தோம். இயற்கைக்கு மனிதன்மேல் எந்த கோபமும் இல்லை. மனிதனின் இயற்கை மீதான முரட்டுத்தனம்தான் அவனுக்கு வினையாக முடிகிறது. விலங்குகளின் இருப்பிடமான காடுகளை அழிப்பதால் அது இருக்க இடமின்றி ஊருக்குள் புகுந்து விடுகிறது. மனிதன் காடுகளை அழிப்பது, அவனுக்கே அழிவாக மாறுகிறது.

நம்மை சுற்றி இருக்கும் இயற்கை நமக்கு சொந்தம். அதை நாம் சவுகரியங்களுக்காகவும், பணத்திற்காகவும் அழிப்பது, நம் வீட்டுக்கூரையில் நாமே தீ வைத்துக்கொள்வது போன்றதாகும். தற்போது நமது வீட்டுக்கு தீவைத்துக்கொண்டு நாமே குளிர் காய்வதுபோல் இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

அறிவியல் வளர்ச்சியும் இயற்கையை அழிக்கிறது. நவீன கண்டுபிடிப்பான பூச்சிக்கொல்லி மருந்துகள், இருதலைக்கொள்ளியாக இயற்கையையும் அழிக்கிறது. மனிதனையும் அழிக்கிறது. அறிவியலின் அசுர வளர்ச்சி பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் மண்டலத்தில் துளைகளை ஏற்படுத்தி புற ஊதாக்கதிர்களை பூமிக்கு அனுப்பி, பூமியை வெப்ப மண்டலமாக மாற்றி, இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறது.

`பிக்கினி’ என்னும் பவளத்தீவில் அணுகுண்டை வெடித்து சோதனை செய்தார்கள். அதனால் கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, பல கோடி டன் எடையுள்ள நீர் மேலே எழும்பியது. வானை நோக்கி சிதறிய அதன் அதிர்ச்சியில் மேகங்கள் குளிர்ந்து மாதக்கணக்கில் பேய் மழையாக கொட்டியது. அதனால் ஏற்பட்ட சீதோஷ்ண மாற்றத்தால் கடலடியில் வாழ்ந்த உயிரினங்கள் அழிந்தன.

அந்த பகுதியில் தொடர்ந்து எழும்பும் உயரமான அலைகள் அந்த கடற் பகுதியையே, ஆபத்தான இடமாக மாற்றிவிட்டது. ஆக மனிதனை அழிக்க பரிசோதிக்கப்படும் அணுகுண்டுகள் இயற்கையை துவம்சம் செய்துகொண்டிருக்கின்றன. இயற்கையை பேரழிவை நோக்கி இழுத்து செல்லும் விஷயங்களில் பிளாஸ்டிக்கும் ஒன்று. மட்காத இந்த பிளாஸ்டிக், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக முடிவது மட்டுமின்றி நிலப்பரப்பையே மாசுபடுத்தி நிலத்தடி நீரை பூமிக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.

இயற்கையின் அழிவால் இன்று பல உயிரின வகைகளே இல்லாமல் போய்விட்டன. இன்னும் பல மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன.

இயற்கையை நேசித்த ரவீந்தரநாத் தாகூர் அதனை வரமாக நினைத்து பூஜித்தார். மனிதர்களை இயற்கையை நோக்கி பயணிக்க வைத்தார். இந்திய மண்ணின் இயற்கை வளங்களை பொக்கிஷமாக வர்ணித்தார். விந்திய, ஹிமாசல, யமுனா கங்கா… என்று இயற்கை போகும் பாதையில் எண்ணத்தை செலுத்தி இவையே தெய்வம் என்று குறிப்பிடுகிறார்.

கேட்கும் வரம் தரும் தெய்வமாக இயற்கை இருக்கும்போது அதை காக்கும் மனிதர்களாக நாம் உருவெடுக்கவேண்டும். அழகான இயற்கை நம்மை வாழ வைக்கிறது. பூமித்தாயின் அழகுமிக்க அணிகலன் இயற்கை. இதை மாசுபடுத்தாமல் வாழ்வதுதான் மனிதனுக்கு பெருமை.

No Responses

  1. முத்து ஐயர்
    முத்து ஐயர் February 10, 2012 at 1:31 pm | | Reply

    பறக்கும் கிளிகளும் மற்ற பறவைகள் பலவும் பழத்தைத் தூக்கிச் சென்று வேறோரிடத்தில் உண்டு விட்டு அப்பழக் கொட்டையைப் போடும் வேறோரிடத்தில் மரம் வளர உதவுகிறது. நம்முள் எத்தனைபேர் இதுபோல் ஆண்டுக்கு ஒருமரமாவது வளர கன்று நட்டுள்ளோமா? இல்லை விதைவிதைத்துள்ளோமா? ஆறறிவுபடைத்த நமக்கு இதுவொரு மானக் கேடான விஷையம். கேவலம் ஒரு மண் புழுகூட பயிர் வளர உதவுகிறது. வண்டுகள் செடிக்குச் செடிச்சென்று மதுவை உண்டு அதன் கால்களில் மகரந்தத்தை எடுத்துச் சென்று வேறொரு செடிக்கு உதவுகிறது. ஆக தாங்கள் கூறியதுபோல் மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளும் மனிதனுக்காக வாழிகிறது. ஆனால் மனிதன் மட்டும் எனோ மற்ற ஜீவன்களைக் கொன்றோ அல்லது வதைத்தோ வாழ்கிறான். என்னே மனிதகுலம். இந்த ஈனப் பிறவியைப் போற்றி பாடல் ஒன்றுவேறு இருக்கிறது “அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது” என்று. என்ன கொடுமை ஐயா? இந்த மானிடப் பிறவியில்தான் அத்தனை பாவங்களையும் செய்கிறோம் என்பது மட்டும் எனக்குத் திண்ணம் என்றே தோன்றுகிறது………..முத்து ஐயர்

Leave a Reply

%d bloggers like this: