எதைப் பொறுத்து கடன் கொடுப்பார்கள்?

 

`நானும் பாங்க் பாங்கா ஏறி இறங்குறேன்… யாரும் கடன் கொடுக்க மாட்டேங்கிறாங்க…’ என்று சிலர் புலம்புவார்கள்.
அவர்கள், `கடன் நிலை தகவல் அறிக்கை’யின் (`கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்’- சுருக்கமாக `சி.ஐ.ஆர்.’) அடிப்படையில்தான் ஒருவருக்குக் கடன் கொடுப்பதா, இல்லையா என்று வங்கிகள் தீர்மானிக்கின்றன என்பதை அறியாதவர்கள்.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் சார்பில் `சி.ஐ.ஆர்.’கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடன் கொடுப்பது குறித்து முடிவெடுப்பதில் `சி.ஐ.ஆர்.’ தான் வங்கிகளுக்கு வேதம். ஆனால் இதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மிகச் சமீபமாகத்தான் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்பத் தங்கள் வங்கி நிலை, நிதித் தொடர்புகளைப் பராமரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
கடன் நிலை தகவல் அறிக்கையைப் புரிந்துகொள்வதன் மூலம், எந்த நேரத்தில் கடனுக்கு விண்ணப்பிப்பது, கடன் ஒப்புதலுக்கான வாய்ப்பை எப்படி அதிகரித்துக்கொள்வது எனத் தெரிந்துகொள்ளலாம். எனவே, கடன் கொடுப்பவர்கள் இந்த அறிக்கையில் முக்கியமாக எவற்றைக் கவனிக்கிறார்கள் என்று பார்க்கலாம்…
தவணை செலுத்திய பட்டியல் (பேமன்ட் ஹிஸ்டரி)
உங்களுக்கான சி.ஐ.ஆரில் கணக்குப் பிரிவில் இது இடம்பெறும். இதுவரை செலுத்தியிருக்கும் தவணைத் தொகைகள், மாத, வருட விவரங்கள் இங்கு இடம்பெற்றிருக்கும்.
கடைசி மாதத்தில் தவணைத் தொகை எத்தனை நாள் தாமதத்தில் (அப்படி இருந்தால்) செலுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரமும் இருக்கும். அதுகுறித்து, `000′ தவிர வேறு ஏதாவது குறிப்பிட்டிருந்தால் கடன் கொடுக்கும் நிறுவனம் `நெகட்டிவாக’ கருதும். 3 மாதங்கள் வரை இந்தப் பட்டியல் இருக்கும். சமீபகால மாதங்கள் முதலிலும், பழைய மாதங்கள் அதைத் தொடர்ந்து வரிசையாகவும் இடம்பெற்றிருக்கும்.
நடப்பு கடன் இருப்பு
சி.ஐ.ஆர். கணக்குப் பிரிவில் காணப்படும் இன்னொரு விவரம், நீங்கள் பெற்றுள்ள பல்வேறு கடன்களில் செலுத்த வேண்டிய தொகைகளைச் சுட்டிக் காட்டும். அதன் மூலம் உங்கள் கடன் சுமையை உணர முடியும். ஒவ்வொரு கடனிலும் செலுத்த வேண்டிய தொகையைக் கூட்டுவதன் மூலம், தற்போது உங்களால் எவ்வளவு தவணை செலுத்த முடியும் என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கணக்கிடுவார்கள். அப்போது அவர்கள் உங்களின் நடப்பு வருமானத்தையும் கணக்கில்கொள்வார்கள். இயல்பாகவே, நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையின் அளவு குறையும்போது, புதிய கடனுக்கான ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
புதிய கடன் வசதிகள்
உங்களுக்குச் சமீபமாக புதிய கிளைக் கடன் வசதிகள் அளிக்கப்பட்டிருந்தால் மாதாந்திர தவணைத் தொகையும் அதிகரித்திருக்கும். அப்படி ஏதாவது கிளைக் கடன் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கவனிப்பார்கள். எனவே நீங்கள் பெற்ற ஒரு புதிய கடன் வசதி, மேலும் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும்.
விண்ணப்பித்த விவரங்கள்
நீங்கள் சமீபமாக பல கடன்களுக்கு விண்ணப்பித்திருந்தால், புதிதாகக் கடன் பெறும் வாய்ப்புக் குறையும். உங்களின் அந்தப் பழக்கம், நீங்கள் `கடன் பசி’யில் இருக்கிறீர்கள் என்பதையும், கடன் பெற வேண்டிய தலைபோகிற அவசரத்தில் நீங்கள் உள்ளதையும் காட்டிக் கொடுத்துவிடும்.
கடன் கொடுப்போர், உங்கள் கடன் விண்ணப்பத்தை அலசும்போது ரொம்பக் கவனமாக இருப்பார்கள். எனவே, நீங்கள் ஒன்றிரண்டு வருடங்களில் வீட்டுக் கடன் அல்லது வேறு கடன் பெறத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை உங்கள் சி.ஐ.ஆர். நிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
கன்னாபின்னாவென்று கடன் பெறும் வழக்கத்தை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது ரொம்பவே நல்லது.

No Responses

  1. ஜோதிஜி
    ஜோதிஜி September 18, 2012 at 4:00 pm | | Reply

    இதில் சொல்லப்பட்ட சிஆர் ஐ பற்றி இன்னும் தெளிவாக ஒரு தனிப் பதிவாக வெளியிடுங்க. உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகின்றேன். இணைப்புகள் கொடுக்கலாம். பொதுப்படையான விசயங்களை கொடுத்து இருக்கீங்க. சமீபத்தில் எனது வங்கி இந்த ரிப்போர்ட் படி சில தகவல்களை சொன்னார்கள். மேற்கொண்டு விவரங்கள் அவர்களுக்கே தெரியவில்லை.

Leave a Reply

%d bloggers like this: