பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!

புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின், வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர் ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான். ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை. பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம் போய்விட்டது. பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது. வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. ஆக அவற்றை பொருத்த ஏதுவாக என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார்.
வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர், பிறகுஉள்ளே அழைத்து சென்றார். அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன. ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார். இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி கொண்டிருந்தார்.
காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில் ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு சென்றார்?
அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றாள் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில் இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன்.
இது உணர்த்துவது என்ன?
பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. õக நாம்தான் சில நேரம் அதனை விலக்கி வைக்க வேண்டும்.
ஆபீஸில் பிரச்னையா? பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா? அதனை மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில் தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும். அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

நன்றி-மங்கையர்மலர்

One Response

  1. Meha Nathan
    Meha Nathan April 10, 2013 at 10:08 am | | Reply

    சுவையான தகவல்..நன்றி..

Leave a Reply

%d bloggers like this: