இனிது இனிது வாழ்தல் இனிது!

கொஞ்சம் பால்ய காலத்துக்குள் போய் திரும்புவோமா? உங்கள் குழந்தைப் பருவத்தில் பச்சைக் குதிரையை தாண்டி விளையாடிய அனுபவம் உண்டா? ஒருவர் குனிந்து கொள்ள, இன்னொருவர் ஓடி வந்து குனிந்திருப்பவரின் முதுகைத் தாண்டி குதிக்கிற அந்த விளையாட்டு எத்தனை சுவாரஸ்யமானது! தூரத்திலிருந்து ஓடி வருகிற நபர், எங்கே உங்களைத் தாண்ட முடியாமல் போய் தோற்றுவிடுவாரோ என்கிற பயத்திலும் பதை பதைப்பிலும், அவர் நெருங்கி வரும் போது, இன்னும் கொஞ்சம் குனிந்து நட்பை ஜெயிக்க வைத்த அனுபவம் பலருக்கும் இருக்கும். விளையாட்டில் ஜெயிக்க வைத்த அந்த மனோபாவம், வாழ்க்கையை ஜெயிக்கவும் உதவும். எப்படி என்கிறீர்களா? கணவனோ, மனைவியோ – இருவரில் யார் அவரவர் துறையில் உயரம் தொட விரும்புகிறாரோ, அவருக்கு இன்னொருவர், குனிந்து மேலே உயர உதவலாம். அதனால் என்ன பலன்? இருவரும் ஒருவரை ஒருவர் இன்னும் அதிகம் நேசிக்க முடியும். ஒருவரை ஒருவர் ஆகர்ஷிக்க முடியும். மகிழ்ச்சியைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ள முடியும். இருவருமே இதை காதலுடன் செய்கிற போது, இருவருமே மிகச்சிறந்த நபர்களாக பரிமளிக்க முடியும். மைக்கேல் ஏஞ்சலோ என ஒரு பிரபல சிற்பியைப் ற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்… அவரிடம் ‘எப்படி இத்தனை அற்புதமாக உங்களால் சிலைகளை வடிக்க முடிகிறது?’ எனப் பல பேர் கேட்டார்களாம். அதற்கு அவர், ‘நீங்கள் எல்லோரும் வெறும் கல்லை மட்டுமே பார்க்கிறீர்கள். நான் ஒவ்வொரு கல்லிலும் ஒரு உருவத்தைப் பார்க்கிறேன். தேவையற்ற பகுதியை மட்டும் வெட்டி எறிகிறேன். அவ்வளவுதான்’ என்றாராம். உறவுகளை அணுகும்போதும் நமக்கு இப்படியொரு பார்வைதான் அவசியப்படுகிறது. பெரும்பாலும் நம் துணையிடம் உள்ள நெகட்டிவ் விஷயங்களைத்தான் நாம் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறோம். அதைத் தவிர்த்து, நல்ல விஷயங்களை மட்டுமே பார்க்கப் பழகினால் துணையிடம் உள்ள மிகச்சிறந்த குணங்களையும் திறமைகளையும் வெளிக்கொண்டு வர முடியும். உங்கள் துணை உயரம் தொட கால அவகாசம் விதிக்காதீர்கள். ‘நீ எப்பவுமே இப்படித்தான். உன்னால இதையெல்லாம் பண்ணவே முடியாது. நீ எதுக்குமே லாயக்கில்லை’ என எதற்கெடுத்தாலும் மண்டையில் குட்டாமல், விமர்சிக்காமல், அவர்கள் விரும்பிய இடத்தை அடைய உங்களால் முடிந்த அளவு ஊக்கம் கொடுங்கள். பச்சைக்குதிரை விளையாட்டு ஆடுவது சுலபம். ஆனால், அந்த டெக்னிக்கை வாழ்க்கையில் பின்பற்ற, சில அடிப்படை குணங்கள் அவசியம். * அதில் முதன்மையானது பொறுப்பு. நமது வாழ்க்கையில் எப்போது என்ன கஷ்டம், துன்பம் வந்தாலும், அதற்கு அடுத்தவரை மிகச்சுலபமாக காரணம் காட்டி விடுகிறோம். நமது வாழ்க்கையில் நிகழ்கிற எல்லாவற்றுக்கும் நாமே பொறுப்பு என்கிற பக்குவம் வந்தால், துணையை கைதூக்கி விடுவதில் சிக்கல் இருக்காது. * அடுத்தது நம்பிக்கை. இது சற்றே வித்தியாசமான நம்பிக்கை. அடுத்தவரை நம்புவதைவிட, நம்மை நாமே நம்புகிற திடம். நம்மால் நிச்சயம் நம் துணைக்கு உதவ முடியும் என்கிற நம்பிக்கை. கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு, நாமும் வளர்ந்து, துணையையும் வளரச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை. * மூன்றாவதாக விருப்பம். நம் துணை அடுத்தடுத்த உயரங்களுக்குப் போக உதவினால், ஒருவேளை அவர் நம்மை விட்டு விலகி விடுவாரோ என்கிற பயத்தையும் மீறி, அவருக்கு உதவ நினைக்கிற விருப்பம். * கடைசியாக வெளிப்படையான மனது. உங்கள் துணை, உங்களிடம் தனது பயம், தயக்கம் உள்ளிட்ட எல்லா உணர்வுகளையும் வெளிப்படையாகப் பேசிப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இருக்க வேண்டும் உங்கள் அணுகுமுறை. ‘நாம பாட்டுக்கு மனசுல உள்ளதையெல்லாம் வெளிப்படையா சொல்லிட்டு, நாளைக்கு காலை வாரி விட்டுட்டா?’ என்ற அவநம்பிக்கை ஒரு சதவிகிதம்கூட இருக்கக் கூடாது. இந்த நான்கையும் பழகிக் கொண்டாலே, உங்கள் துணையை உயர்த்திவிட நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்றுதான் அர்த்தம். வாழ்க்கையில் எப்போதுமே எந்த விஷயத்திலும் நாமாக ஒரு அடி எடுத்து வைக்கத் தயங்குவோம். அதுவே நம் கைப்பிடித்தோ, தோள் தட்டியோ உற்சாகமும், ஊக்கமும் கொடுத்து யாராவது பக்கத்தில் இருந்தால் பல அடிகள் தைரியமாகக் கடப்போம். கணவன்-மனைவிக்கு இடையிலான இந்த பச்சைக்குதிரை விளையாட்டு டெக்னிக் அப்படித்தான். இது இருவருக்கும் பொருந்தும். நம்பர் 1 இடத்தில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் பலதுறைப் பிரபல ஆண்கள் பலரிடமும் வெற்றிக்குக் காரணம் கேட்டுப் பாருங்கள். மனைவியையே காரணம் காட்டுவார்கள். அவரது புரிதலும் ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் தனக்கு அந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது என்பார்கள். இந்தப் புரிதலும் ஒத்துழைப்பும் ஒருவழிப்பாதையாக இல்லாமல், இருவருக்கும் பொதுவாக இருப்பின் இன்னும் சிறப்பு. உங்களுக்கு உதவிய மனைவிக்கு, அந்த நன்றியைத் திரும்பச் செலுத்த சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருங்கள். எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? விளையாட்டோ, வாழ்க்கையோ – உங்கள் எதிராளி தயாராக இருந்தால் மட்டுமே பச்சைக் குதிரையை தாண்ட முடியும். கட்டாயப்படுத்தி குனிய வைப்பதோ, தாண்டச் சொல்வதோ தவறு. விருப்பப்பட்டு செய்கிற எந்த காரியத்திலும் அலுப்பு தட்டுவதில்லை. பச்சைக் குதிரை டெக்னிக்கை உங்கள் வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களுக்குமான ஒரு கொள்கையாக வைத்துக் கொண்டு வாழப் பழகினீர்களானால், அது தரும் ஆனந்த அனுபவத்தை அணு அணுவாக ரசிப்பீர்கள்! பச்சைக் குதிரையை தாண்ட பழகுவோமா? வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க விளையாட்டுக்கே விதிமுறைகள் தேவைப்படுகிற போது, வாழ்க்கை மட்டும் விதிவிலக்கா என்ன? ஒரு செடியை நடுகிறோம். தினம் அதற்குத் தண்ணீர் விட்டு, உரமிட்டுப் பராமரித்தால்தான் அது ஆரோக்கியமாக வளரும். செடிக்கும் கொடிக்குமே இந்த அக்கறையும் பராமரிப்பும் அவசியப்படுகிற போது, உறவுகளின் ஆரோக்கியத்துக்கும் அது அவசியமில்லையா? உங்கள் துணையும் நீங்களும் உறவை வளர்க்கும் பச்சைக் குதிரையை தாண்டும் டெக்னிக்கை பழக சில வழிமுறைகள் இங்கே… *உங்களுக்கும், உங்கள் துணைக்கும் ஏதேனும் கருத்து வேறுபாடு உண்டாகும் போது, உடனே நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக, உங்களுக்கென யாருமே இல்லாததாக உணர்வீர்கள்தானே? அது தவறு. அதற்குப் பதில், உங்கள் துணை எப்போதும் உங்களுக்காக இருப்பார் என்பதை நம்புங்கள். * இருவருக்கும் வாக்குவாதம்… சின்னதாக ஏதோ தவறு நடந்து விடுகிறது. ‘எல்லாத்துக்கும் நீதான் காரணம்’ என்பதில் தொடங்கி, ‘கல்யாணம் பண்ணினதே தப்பு’, ‘நமக்கு வாய்ச்சது சரியில்லை’, ‘இந்த உறவே வேஸ்ட்’ என்கிற அளவுக்கு கன்னாபின்னாவென கற்பனையாக நச்சு கலந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டு, நடந்த தவறுக்கு உங்கள் துணையைக் காரணம் காட்டிப் பேசுவதை நிறுத்துங்கள். * சண்டை வந்தால் போதும்… நம் ஆட்களுக்கு முதல் வேலையாக, தன் துணையிடம் பேச்சைத் துண்டித்துக் கொள்வதுதான் வழக்கம். துணையே வலிய வந்து பேச முயற்சித்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். அதற்குப் பதில், துணையின் நல்ல குணங்களைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்களேன்… மாற்றத்தை உடனடியாக உணர்வீர்கள். * தம்பதிக்குள் சிக்கல் வர முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று துணையைவிட தானே உயர்ந்தவர் என்கிற உயர்வு மனப்பான்மை… அல்லது தான் எதற்குமே லாயக்கில்லாதவர் என்கிற தாழ்வு மனப்பான்மை. இந்த இரண்டுமே உறவின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. கணவன்-மனைவி உறவில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்கிற வேறுபாடுக்கு இடமே இருக்கக் கூடாது. இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல தோழர்கள். * அடுத்தவர் நம்மை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அனேகம் பேருக்கு உண்டு. நமது சந்தோஷத்தை ஏன் இன்னொருவர் கைகளில் கொடுத்துவிட்டுக் காத்திருக்க வேண்டும்? அது நம் கைகளில்தான் இருக்கிறது. கணவன் – மனைவிக்கிடையே உண்டாகிற கருத்து வேறுபாடு களுக்கோ, சண்டைகளுக்கோ நமது சந்தோஷத்தை இழக்க வேண்டியதில்லை. இழந்த சந்தோஷத்தை அவர்களே வந்து திருப்பித் தரட்டும் என்று எதிர்பார்க்கவும் தேவையில்லை. சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காத மனப்பான்மை, பச்சைக் குதிரையை தாண்ட விரும்புவோருக்கு அடிப்படையானது. (வாழ்வோம்!)

No Responses

 1. கோமதி அரசு
  கோமதி அரசு October 28, 2013 at 6:42 pm | | Reply

  அருமையான பல கருத்துக்களை கொண்ட நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.
  இவைகளை கடைபிடித்தால் வாழ்தல் இனிது தான்.
  நன்றி.

 2. Ravindhiran
  Ravindhiran October 28, 2013 at 8:14 pm | | Reply

  முன்பு மின் அஞ்சல் மூலமாக படித்த உங்களுக்காக பகுதி தற் போது இணைய வழியாக படிக்க வேண்டியதாகிறது ஏன் இந்த மாற்றம்

 3. mdmadhan
  mdmadhan October 29, 2013 at 6:38 pm | | Reply

  அருமையான பல கருத்துக்களை கொண்ட நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.\

Leave a Reply

%d bloggers like this: