மனிதன் மாறி விட்டான்!-3

யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ, அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது!

இந்த உண்மையை எளிமையான உதாரணம் மூலமாக விளக்குகிறேன். ஸ்டான்லி மில்லர், ஹெரால்ட் யூரே… ஆகிய இருவரும் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ஏராளமான பரிசோதனைகளைச் செய்தவர்கள். மீத்தேன், அமோனியா, ஹைட்ரஜன், தண்ணீர் ஆகிய நான்கையும் கண்ணாடிக் குடுவைகளில் வைத்து அவர்கள் ஒரு பரிசோதனைச் செய்தனர். இது நடந்து அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. சுமார் ஏழு நாட்கள் அந்தச் சோதனை நடந்தது. அவற்றின் முடிவில், கார்பன் பற்றி சில கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள்.

10 சதவிகித கார்பன் கனிமங்கள் தன்னிச்சையாகப் பலவற்றோடு கலந்து உயிர் தோன்றுவதற்குத் தேவையான சர்க்கரை, கொழுப்பு, நியூக்ளிக் அமிலங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றன என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பு.  இத்தனைக்கும் மீத்தேனில் மட்டும்தான் கார்பன் இருக்கிறது. கார்பன் எதுவோடு வேண்டுமானாலும் கலக்கும் சக்தி கொண்டது என்று கண்டுபிடித்தார்கள். பூமியில் இரண்டு விழுக்காடு மட்டும்தான் கார்பன் இருக்கிறது. நம் உடலிலோ அது 20 விழுக்காடு. பூமியில் கார்பனைப்போல எத்தனையோ மடங்கு சிலிக்கான் இருக்கிறது. ஆனால், கணினியில் சில்லு செய்யப் பயன்படுத்தும் சிலிக்காவை, மனிதனின் செல்லைச் செய்ய இயற்கை தேர்ந்தெடுக்கவில்லை. யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது என்று இதனால்தான் சொல்கிறோம்!

அந்நியர்களோடும் அந்நியோன்யமாகப் பழகுபவர்களே இயற்கையை அனுசரித்து வாழ முடியும். மனிதன் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் கைக்கொண்டு கும்பலாக வாழும்போது, அவனுடைய ஆற்றல் பன்மடங்காகப் பெருகியது. மற்ற உயிரினங்கள் தோற்றுப் போனதற்கும் மனிதன் வெற்றி பெற்றதற்கும் மூன்று அடிப்படைக் காரணங்கள் உண்டு.   

ஒரு சிங்கம் காட்டைப் பற்றி ஓர் அங்குலம் விடாமல் அறிந்து வைத்திருந்தாலும், அதை அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்திவிட்டுச் செல்ல முடியாது. அதன் அத்தனைத் திறமையும் அதன் மரணத்தோடு சமாதியாகிவிடுகிறது. மனிதன் அவனுடைய அறிவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. அதற்குக் காரணம் மற்றவற்றுக்கு இல்லாத நம்முடைய பேசும் ஆற்றல். ஆயுதங்கள் செய்த ஆதி கால நியான்டர்தல் மனித​னுக்கும் நமக்கும் 99.9 சதவிகிதம் மரபுக்கூறுகள் ஒத்துப்போகின்றன.  அவற்றின் மூளை நம்முடையதைவிட கொஞ்சம் பெருசுதான். எஞ்சிய 0.1 விழுக்காட்டு ஜீனில் எப்படி இவ்வளவு பிரமாண்டமான விளைவுகள் ஏற்பட முடியும்? அந்த தம்மாத்தூண்டு மரபணு மாற்றம், நம்முடைய நாக்கிலும் குரல்வளையிலும் ஏற்படுத்திய  பரிணாம வளர்ச்சியே இந்தப் பாய்ச்சலுக்குக் காரணம். 

நாக்கு வேறுபட்டு குரல்வளை வித்தியாசப்பட்டு விதவிதமான ஓசைகளை எழுப்பும் திறமை நமக்கு வாய்த்தபோது, நம்மால் பேசுவதற்கான ஒரு மொழியை அடைய முடிந்தது. அப்போது நாம் நம்முடைய அறிவை அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்திவிட்டுச் செல்ல முடிந்தது. எனவே, சென்ற தலைமுறை கற்றதையும் படிக்கட்டாக வைத்துக்கொண்டு இந்தத் தலைமுறை  அதன் மேல் ஏறி நின்று இன்னும் உயரமாகக் காட்சியளித்தது. மொழியும் ஒருமித்த கற்றலும் நம் மேன்மைக்கு முதல் இரண்டு காரணங்கள். மூன்றாவது காரணம், மனிதன் நேரத்தை உருவாக்கியது.

இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள 100 பொருள்களைக் கொண்டு உலக வரலாற்றை நெய்ல் மெக்ரிகர் என்பவர் எழுதியிருக்கிறார். அதில் அவர் ‘ஓல்டுவை கைக்கோடரி’ என்கிற தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பொருளை மூன்றாவது அம்
சமாகச் சேர்த்திருக்கிறார். 

ஓல்டுவை கைக்கோடரி சகலவிதமான பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட பொருள். அரைக்கவும் கிழிக்கவும் மசிக்கவும் நறுக்கவும் வெட்டவும் உடைக்கவும், அந்த ஒரே ஒரு பொருள் ஒரு கட்டத்தில் நம் முன்னோர்களால் கையாளப்பட்டது. அந்த கைக்கோடரியில் இருக்கிற முக்கிய நுட்பமே அது சொல்லும் சூசகத் தகவல்கள்​தான்.

கல்லால் ஆன ஒரு பொருளை உண்டாக்கும்போது, நம் நரம்பு மண்டலம் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிய வேண்டும். அப்படி ஒரு பொருளை இப்போது நாம் செதுக்கினால்கூட, நம் மூளையின் ஒரு பகுதி மட்டும் அதிகமாக சுறுசுறுப்படைகிறது. இப்போது நாம் பேசும்போது எந்தப் பகுதி மூளையில் இயங்குகிறதோ, அந்தப் பகுதிதான் அப்படியொரு கைக்கோடரியைச் செய்யும்போது இயங்குகிறது. எனவே, மனிதன் உழைக்கத் தொடங்கியபோதுதான் உரைக்கவும் தொடங்கினான் என்பது, அதிசயமான அறிவியல் நுணுக்கம். அப்போதுதான் அவன் பேச முயன்றிருப்பான்.

இரண்டு கால்களால் நிற்கத் தொடங்கிய​போது கைகளுக்குக் கிடைத்த விடுதலையை அவன் கற்கருவிகள் செய்யப் பயன்படுத்தினான். அவன் வேட்டையாடுபவனாகவும் சேகரிப்பாளனாகவும் இருக்கிறபோது, பசியை ஆற்றவே அவன் முழு நேரமும் விரயமாகிவிட்டது. அவனுடைய ஆயுதங்களில் முன்னேற்றமும் வேட்டையாடுதலில் வீரியமும் கலந்தபோது, சமூக ஒற்றுமை தொடங்கியது. 

குரங்குகள் பழுத்த பழங்களைப் பறித்தால், அடுத்தவற்றுக்குக் கொடுக்காமல் அவையே உண்டுவிடும். ஏற்காடு செல்பவர்களில் சிலர் வாழைத்தாரை வைத்துக்கொண்டு ஜீவகாருண்யம் படைத்தவர்களைப்போல வழியில் தென்படும் குரங்குகளுக்கு பழங்களைப் போட்டவண்ணம் செல்வார்கள். ஒரே குரங்கே ஓடி ஓடி வந்து எல்லா இடங்களிலும் மற்றவற்றை முந்தி பழங்களை அபகரித்துக்கொள்ளும். அவற்றில் சில வாகனங்களில் அடிபட்டு இறந்துபோவதும் உண்டு. காட்டு விலங்குகளுக்கு ஊட்ட முயற்சிப்பது உன்னதமான செயல்பாடு அல்ல. பகிர்ந்துகொள்ளும் பழக்கம் குரங்குகளிடம் இல்லாததால்தான், சிலரை குரங்கு என்று திட்டுகிறோம்.     

மாமிசப் பட்சிணிகள் உணவைப் பகிர்ந்துகொள்கின்றன. ஒரு புலி  காட்டெருமையை வேட்டையாடினால் தனக்கு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு இடத்தைக் காலிசெய்கிறது. சிங்கம் வேட்டையாடினால் மீதியை கழுதைப்புலிகள் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. அவற்றுக்குப் பிறகு நரிகள். அவை விட்டவற்றை வல்லூறுகள். எஞ்சி இருக்கும் எலும்புகள், எறும்புகளுக்கு. மற்றவை மண்ணில் மக்கி உரமாகின்றன.

மனிதன் மாமிசம் உண்ணும்​போதுதான், கொரிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு திவ்யமாக சாப்பிடக் கற்றுக்கொண்டான். மிச்சம் இருப்பதைப் பகிர்ந்து​கொண்​டான். அப்போது அவனுக்கு நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் அவனுடைய அறிவைக் கூர்மைப்படுத்தினான். ஆயுதங்களைச் செம்மைப்படுத்தினான்.       

அவன் சிந்திக்கத் தெரிந்ததால் வேறுபட்டான். அவன் மனமே அவனைப் படைப்பின் மையமாக ஆக்கியது. பார்ப்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. பறவைகள் பழத்தைத் தின்பதோடு நிறுத்திக்கொண்டன. அவை எப்படி முளைக்கின்றன என்கிற உந்துதல் ஆறாம் அறிவின் காரணமாக அவனுக்கு ஏற்பட்டது. மிருகங்கள் புல்லைத் தின்பதோடும், புலாலைத் தின்பதோடும் மகிழ்ச்சியடைந்தன. மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கினான். மனிதன் நிலையாகத் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்து 10,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

அவன் வளர்க்கும் பயிர்களைச் சாப்பிட காட்டு மிருகங்கள் அவன் வளாகத்தில் கால் எடுத்து வைத்தன. அவற்றை வளர்ப்பு மிருகங்கள் ஆக்கினான். அவற்றின் மாமிசமும் பாலும், சேமித்து வைக்கும் தானியங்களும் அவனுக்கு இளைப
்பாற நேரம் தந்தது. இதுநாள் வரை 12 மணி நேரம் செய்த வேலையை, நான்கு மணி நேரத்தில் அவன் செய்ய முடிந்தது. எட்டு மணி நேரம் மிச்சமானது. இப்படித்தான் மனிதன் நேரத்தை உருவாக்கினான். வேறு எந்த மிருகமும் நேரத்தை உருவாக்க முடியாது.

மனிதன் இன்றுகூட நேரத்தை உரு​வாக்கும் முயற்சியிலேயே தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். இன்று விஞ்ஞானம் எவ்வளவு செறிவாக நேரத்தை உருவாக்க முடியும் என்றுதான் அக்கறை செலுத்தி வருகிறது.  விமானம், ரயிலைவிட அதிக நேரத்தை உருவாக்குகிறது. மின்னஞ்சல், தபாலைவிட அதிக காலத்தை மிச்சம் பிடித்துக் கொடுக்கிறது. இயந்திரங்கள் உற்பத்தி முறையை விரைவுபடுத்தி நேரத்தை உருவாக்குகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், நம் அத்தனை கண்டுபிடிப்பு​களுமே நேரத்தை உருவாக்குபவையே! குழந்தை குறைப் பிரசவமாகிவிட்டால், வெளியே உள்ள இங்க்குபேட்டர் மூலம் நம்மால் செயற்கை கருப்பையை உருவாக்க முடியும்.  இந்த வசதிகள் எல்லாம் விலங்குகளுக்கு இல்லை. இதுதான் மனிதனை உலகமெங்கும் பரவி விரிய வைத்தது. 

குரங்குகளைத் தவிர மற்ற விலங்குகளுக்கு இனிப்பின் சுவை தெரியாது. ஒரு நாய்க்கு அரை கிலோ சாக்லேட் போட்டால், அது அத்தோடு காலி. எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு வாரம் வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் வளர்க்கும் பூனைக்கு ஒரு டஜன் வாழைப்பழத்தைப் போட்டுவிட்டுப் போனார்.  ஊரில் இருந்து திரும்பி வந்து கதவைத் திறந்தால், ஒரே அழுகல் நாற்றம். வீட்டை விட்டு ஓடிய பூனை அதற்குப் பிறகு திரும்பி வரவே இல்லை.

குரங்குகளோடு மரபணு ஒத்திருப்பதால், நமக்குப் பழங்களின் சுவையும் தெரியும். விலங்குகளை வேட்டையாடி பச்சையாக தொடக்கத்தில் உண்ணும்போது, அவற்றின் உடல் சூட்டை அவன் உணர முடிந்தது. சூடாக இருக்கும்போதே சாப்பிட்ட அவன், நாளடைவில் சைவ உணவையும் சூடாக சாப்பிடக் கற்றான். பழங்களைத் தின்ற பழைய மரபணுவால், அவனுக்கு துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு என்ற அத்தனை சுவை மொட்டுகளும் வந்ததோடு, ஆவி பறக்கச் சூடாக உண்ணும் பழக்கமும் வந்தது. 

மனித உடலில் இன்னும் புலப்படாத மர்மங்கள் இருக்கின்றன. மற்ற விலங்குகளுக்கு அவற்றின் உடலில் இருக்கும் உறுப்புகளின் விவரம் தெரியாது.   சின்ன காயம் ஏற்பட்டால், அவை கிருமிகளின் வசப்பட்டு மண்டையைப் போட்டுவிடும். மனிதன் மட்டும் அவன் உடலை அறிய ஆரம்பித்தது விசித்திரமான பயணத்தின் தொடக்கம்!

No Responses

  1. T.Bala subra manian
    T.Bala subra manian July 13, 2014 at 5:16 pm | | Reply

    thanks…

Leave a Reply

%d bloggers like this: