மனிதன் மாறி விட்டான்!-4

அடுத்தவர்களை ஏமாற்றுவதற்காகச் சில குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம்.  அவற்றை நம்பி சிலர் வழி தவறி விடுவதும் உண்டு.  நிதி மோசடிகள் இப்படித்தான்.  ஒத்துழைப்பது போல ஏமாற்றுவதும், மகிழ்ச்சியாக இருப்பதுபோல நடிப்பதும் இந்த வகையறாக்களே.  இது மனிதர்களிடம் மட்டும் இல்லை, விலங்குகளிடம் உண்டு.  பலசாலியான குரங்கு பக்கத்தில் இருக்கும்போது  ஓர் உணவுப் பொருளில் அக்கறை இல்லாதது போல நடக்கிற சில குரங்குகள், அந்த பலசாலியான குரங்கு வேறுபக்கம் திரும்பியதும் அதைச் சட்டென்று  மின்னல் வேகத்தில் எடுத்து விழுங்கி விட்டு அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொள்வது உண்டு.  அதைப் போலவே சில இளம் ஆண் யானை,  சீல்கள் (கடல் நாய்) பெண்களைப் போல பாவலா காட்டி பெண் கூட்டத்துக்குள் புகுந்து அக்கூட்டத்தின் தலைமைப் பெண் சீலோடு உறவு வைத்துக்கொள்வதும் உண்டு.  எனவே ஏமாற்றுவது மனிதனுக்கு மட்டும்  உள்ள ஏகபோக சொத்து அல்ல என்று ஆறுதல் அடையலாம்.

மனிதன் உடலைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியது அவன் சிந்திக்கத் தொடங்கியபோது ஏற்பட்ட சிலிர்ப்பான  உணர்வு. விலங்குகளின் உடலுக்குள் இருக்கும் பாகங்கள் அவனுக்கு மாமிசப்பட்சிணியாக ஆனபோது தெரிய ஆரம்பித்தன.  அவன் கும்பலைச் சார்ந்தவர்கள் விலங்குகளுக்குப் பலியாகும்போதும், அவை சாப்பிட்டு மீதமிருக்கும் பாகங்களை அவன் பார்க்க நேர்ந்தபோதும் தெளிவு உண்டானது.  அப்போதுதான் உடலைப் பற்றிய புரிதல் அவனுக்குப் பிடிபட ஆரம்பித்தது.  அவனுடைய கைகளைப் பயன்படுத்தும் விதங்களை இன்னும் அவனால் மெருகேற்ற முடிந்தது. காடுகளில் திரிந்தபோது அவன் அதிகமான நோய்களைச் சந்திக்கவில்லை. நிலையாகத் தங்கிய பிறகு அவன் உடல், குறைபாடுகளுக்கு ஆளாகத் தொடங்கியது.

தொடக்கத்தில் நோய் வாய்ப்படும்போது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளே அதற்குக் காரணம் என்று நினைத்தான்.  கிரேக்கர்கள் அப்பல்லோ என்கிற தெய்வத்தின் அம்புகளிலிருந்துதான் நோய்கள் தோன்றுவதாகவும் அவருக்கு ஏற்படும் கோபத்தைத் தணிக்கப் பலியிடுவது அவசியம் என்று நினைத்தார்கள்.

எல்லா கிரேக்கர்களும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  அவருடைய  கருத்துக்கு தேல்ஸ் என்கிற ஞானி சவால் விட்டார்.  ஏதோ ஒரு காரணத்தால்தான் நோய் ஏற்படுகிறது என்கிற வாதத்தை அவர் முன் வைத்தார்.  எதையும் பகுத்தறிவு கொண்டு பார்க்க வேண்டும் என்பது அவருடைய கோட்பாடு. 

அல்க்மேயன் என்கிற கிரேக்க அறிவு ஜீவி ஒருவர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.  அவர்தான் முதலில்  விலங்குகளை அறுத்து அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள ஆரம்பித்தார்.  கண்களின் நரம்புகளைக்கூட விவரிப்பு செய்தார்.  அவரையே உடற்கூறு இயலின் முதல் மாணவன் என்று குறிப்பிடலாம். 

உயிரியலின் அறிவு சார்ந்த வாதங்கள் ஹிப்போக்கிரட்டஸ் என்பவரிடமிருந்து தொடங்கின. கடவுளுக்கும், மருத்துவத்துக்கும் சம்பந்தமில்லை என்பது அவருடைய வாதம். பலி கொடுப்பதைவிட நோயாளிக்கு  ஓய்வு கொடுப்பதுதான் அவசியம் என்று அவர் கருதினார்.  தூய்மையாக இருப்பினும், நல்ல காற்றை சுவாசிப்பதன் மூலமாகவும், எளிய உணவின் மூலமாகவும் நோயாளியைக் குணப்படுத்த முடியும் என்பதே அவர் சொன்ன வழிமுறை.  இயற்கையே ஒருவனைக் குணப்படுத்துவதுதான் நல்லது என்பது அவருடைய மருத்துவமுறை.  இன்று மருத்துவர்கள் வாசிக்கும் ஹிப்பாக்கிரட்டிக் உறுதிமொழி  என்பது அவர் எழுதியதல்ல. பின்னால் யாரோ எழுதி அவருடைய நாமகரணம் சூட்டப்பட்ட பிரகடனம் அது.

வலிப்பு நோயைக்கண்டு மக்கள் பயப்படுவதுண்டு.  ஏதோ ஒரு தெய்விக சக்திதான்
மனிதனின் உடலைப் பிணைத்திருப்பதாக அவர்கள் எண்ணினார்கள்.  அதற்கு புனித நோய் என்றுகூட பெயருண்டு.  ஆனால் ஹிப்போக்கிரட்டஸ், புனிதநோய் என்கிற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.  வலிப்புக்கும்  தெய்விகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவர் நிரூபித்தார்.

உயிரியலைப் பற்றிய பாய்ச்சல் அரிஸ்டாட்டில் மூலம் நிகழ்ந்தது.  அவர் உலகை உயிரற்றவை, உயிருள்ளவை என்று பிரித்தார்.  தாவரங்கள், விலங்குகள், மனிதன் என்று உயிருள்ளவை மூன்று வகைப்படும் என்றார்.  தாவரங்கள் நகர முடியாது, விலங்குகள் இடம் பெயரும்.  மனிதனே சிந்திக்க முடிந்தவன். விலங்குகளை சிவப்பு ரத்தம் இருப்பதாகவும், அது இல்லாததாகவும் பிரித்தார்.  அவற்றின் தர ஏணியை அவர் வடிவமைத்தார்.  அவரையே விலங்கியலின் தந்தை என்றும் குறிப்பிடவேண்டும். உலகத்தில் முதல்  உயிரியல் பூங்காவை நிறுவியவர் அவர்.

கேலன் என்கிற கிரேக்கர் மருத்துவத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்தவர்.  கிளாடியாட்டஸ் என்கிற விளையாட்டை அருகில் இருந்து கவனித்து மரணமடைபவர்களுடைய உடல் பாகங்களைப் பற்றி அதிகமாக அவர் அறிந்துகொண்டார். நாய், ஆடு போன்ற விலங்குகளை அறுவைச் சிகிச்சை செய்து உடலைப்பற்றி அவர் அறிந்துகொண்டார்.  இறுதியாக அவர் குரங்கை அறுத்து அது எப்படி மனிதனைப்போல இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆரம்பித்தார். கேலன் மனித உடலின் வெவ்வேறு உறுப்புகளைப் பற்றி விரிவாகப் புத்தகங்கள் எழுதினார். 

இடைப்பட்ட காலத்தில் மத நம்பிக்கைகளின் காரணமாக உடல் குறித்த புரிதல் பெரிய அளவில் நிகழவில்லை.  ஆனால் இந்தியாவில் சுஷ்ருதா, சராக்கா போன்ற மருத்துவ மேதைகள் பல்வேறு விதமான வழிமுறைகளையும், சிகிச்சை முறைகளையும் இயற்கையிலிருந்து உருவாக்கினார்கள்.  ஆனால் அவற்றின் ஆவணங்கள் பெரிய அளவில் கிடைக்காமல் போய்விட்டன.  இருந்தாலும், கண்புரை அறுவைச்சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை உலகுக்களித்தது இந்தியாதான். 

அசோகர் காலத்தில், உலகத்திலேயே முதன்முதலில் இந்தியாவில்தான் விலங்குகளுக்கான மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.  மேற்கில் தொய்வு ஏற்பட்டபோது அரோபியாவில் அரிஸ்டாட்டில், கேலன் என்பவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டு அவைகுறித்து விளக்க உரைகளும் எழுதப்பட்டன.  பாரசீக மருத்துவர் அலி அல்ஹுசைன் இபின்சினா என்பவர் அபிசின்னா என்கிற பெயரில் பல புத்தகங்கள் எழுதினார். 

உடற்கூறு பற்றி இத்தாலியிலிருந்த மொன்டினா டா லுசி என்பவர் நிறைய அறுவைச்சிகிச்சைகளைச் செய்து 1316-ம் ஆண்டு முதல் புத்தகத்தை எழுதினார்.  அவருடைய புத்தகத்தில் இருந்த  பல தவறுகளை அவரால் களைய முடியவில்லை.

லியோனாடோ டாவின்சி ஓவியராக மட்டுமில்லாமல் உடற்கூறுகள் பற்றியும் பல ஆய்வுகளைச் செய்தவர்.  கண்கள், இதயம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் விளக்க அவற்றின் செயல்பாடுகளை விவரித்து சித்திரங்கள் தீட்டினார். அவருடைய படைப்புகள் அவருடைய சமகாலத்தினருக்குத் தெரியாமலேயே போய்விட்டன என்பதுதான் வருத்தமான நிகழ்வு. 

வெசாலியஸ் என்கிற பெல்ஜியாவைச் சேர்ந்த உடற்கூறு அறிஞர் மிகத்தெளிவான புத்தகம் ஒன்றை எழுதினார்.  அதற்கு மனித உடலின் வடிவமைப்பு என்று பெயர். அதுதான் முதல் துல்லியமான புத்தகமாகக் கருதப்படுகிறது. அவர் நடத்திய பொது உடற்கூறு அறுவைகள் சட்டவிரோதமாகக் கருதப்பட்டு, அதற்காக அவர் புனித யாத்திரை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார். போனவர் திரும்பி வரவேயில்லை.

உடலின் முக்கிய அம்சம் ரத்தம். மனித உடலின் எடையில் 14-ல் ஒருபாகம்  ரத்தத்துக்குச் சொந்தம். பெண்களைவிட அதிகம் ரத்தம் ஆண்களுக்கு. ஒரு கிலோ
உடல் எடைக்கு 79 மில்லி லிட்டர் ரத்தம் ஆணுக்கும், 65 மில்லி லிட்டர் ரத்தம் பெண்ணுக்கும் இருக்கிறது.  சராசரி எடையுள்ள ஆணுக்கு 5.5 லிட்டர் ரத்தமும், சராசரி அளவுள்ள பெண்ணுக்கு 3.5 லிட்டர் ரத்தமும் இருக்கின்றன. உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு பாகமும் ரத்தத்தால் தோய்ந்திருக்க வேண்டும். உடலில் திரவமயமான திசு ரத்தம்தான். நம் உடலில் 60 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது.  உயிரின் தொடர்ச்சி கடலில் நிகழ்ந்ததால் இதில் வியப்பு இல்லை.  நிலத்திலும், நீர்ப்பின்னணியில் செல்கள் வேதியியல் மாற்றங்களை எதிர்கொள்வதற்காக இந்த ஏற்பாடு.  சில பிராணிகளுக்கு உடலில் 99 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. 

ரத்தத்தில் 80 சதவிகிதம் தண்ணீர்தான். சிறுநீரகமும் 80 சதவிகிதம் தண்ணீரைக்கொண்டது. மூளையின் கிரே மேட்ரியிலும் 85 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது.  கடலிலிருக்கிற மாதிரியே சில தன்மைகள் ரத்தத்துக்கு உண்டு.  சோடியம், குளோரைடு போன்ற வேதியியல் பொருட்கள் கடலிலிருப்பதைப்போலவே இருப்பதால் உப்புத்தன்மை ரத்தத்துக்கு உண்டு. ரத்தம் என்கிற ஒன்று உடலிலிருந்து வெளியாவதை காயத்தின்போதும், தாக்குதலின்போதும் உணர்ந்திருந்தாலும் அது எவ்வாறு மனித உடலில் செயல்படுகிறது என்பது புதிராகவே இருந்தது. இதயம் எப்படிப் பணியாற்றுகிறது என்பது கிரேக்கர்களுக்கு சரியாகப்பிடிபடவில்லை. இதயம் என்பது ரத்தத்தை பம்ப் செய்கிற ஒரு கருவிதான்.  ஆனால் அந்த ரத்தம் எங்கிருந்து வருகிறது, எங்கு செல்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை.  வெய்ன்களைப் பற்றி மட்டுமே அவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். அவர்களுக்கு ஆர்ட்டரி பற்றித் தெரியவில்லை. 

ஹிரோஃபிலஸ் என்பவர் இரண்டு வகைப்பட்ட குழாய்களும் ரத்தத்தை எடுத்துச் செல்வதை விளக்கினார்.  கேலன் ரத்தச் சுழற்சியைப் பற்றிய தவறான புரிதலை முன்வைத்தார். இதயத்தின் வலது பக்கத்துக்கு சில ரத்தக் குழாய்கள் ரத்தத்தை எடுத்துச் செல்வதாலும், பிறகு அது இடது பக்கம் செல்வதாகவும் வலது இடது பக்கப் பிரிவுகளுக்கு இடையே சின்னச் சின்ன ஓட்டைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  அதையும் அறிஞர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். கேலன் குறிப்பிட்டதை குறைகூற யாருக்கும் துணிச்சல் இல்லை.

ரத்தம் பற்றிய ஆராய்ச்சியே மருத்துவத்தின் மகத்தான உயரத்தை அடைய உதவியது. அதுவே மனித மாற்றத்தின் அடிப்படை. அது திருப்பங்கள் கொண்ட திகில் கதை.

No Responses

 1. namkural
  namkural July 18, 2014 at 10:46 am | | Reply

  Dear Admin,
  You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…
  To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/
  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% – 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural
  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/
  நன்றிகள் பல…
  நம் குரல்

Leave a Reply

%d bloggers like this: