மனிதன் மாறி விட்டான்!-6

உடலின் வளர்ச்சி ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வொரு மாதிரி, பல் முளைப்பதில் இருந்து பாத அமைப்பு வரை. நான்கு முழங்கால்கள் உள்ள பிராணி யானை மட்டும்தான். ஆனாலும், பாவம் அது மட்டும்தான் எம்பிக் குதிக்க முடியாது. மனிதனுக்கு இரண்டு முறை பற்கள் விழுந்து முளைக்கின்றன. யானைக்கு ஆறு முறை, சுறா மீன்களுக்கு வாழ்வின் இறுதி வரை விழுந்து விழுந்து முளைக்கின்றன. நாம் கடைசி வரை ஒரே எலும்புக் கூட்டோடு இருக்கிறோம். சிங்கி இறால் போன்றவை அடிக்கடி வெளிப்புற எலும்புக்கூட்டில் புதிய ஒன்றை வளர்த்துக்கொண்டு உதறி எறிகின்றன. மனிதனுக்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள சில வயிற்றுப் பை உள்ள மார்ஸ¨பியலுக்கும் மாத்திரமே மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) ஏற்படுகிறது.  அதில் பெண் இனத்துக்கு அல்ல; ஆண் இனத்துக்குதான். மனிதர்களில் பெண்களுக்கு மெனோபாஸ் தோன்றுவதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. 200 பவுண்டு உள்ள கொரில்லாவுக்கு நான்கு பவுண்டு உள்ள குட்டி பிறக்கிறது. ஆறாயிரம் கிலோ உள்ள யானைக்கு, 100 கிலோ உள்ள கன்று பிறக்கிறது.  ஆனால், 100 பவுண்டு உள்ள பெண்ணுக்கு ஏழு பவுண்டு எடை உள்ள குழந்தை பிறக்கிறது. விகிதாசாரப்படி பார்த்தால் ஏழு சதவிகிதம். அப்போது அதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படும்.

மனிதக் குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல. அவை சுயமாக நிற்பதற்குத் தாக்குப்பிடிக்கும் வரை தூக்கிப் பிடிப்பது தாயின் கடமை. எனவே தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டே இருந்தால், பெண் இனமே அழிந்துவிடும் என்பதற்காக இயற்கையின் கொடையே மெனோபாஸ். நியான்டர்தல் மனிதர்கள், நிற்பதற்கு முன்பே இறந்துபோனார்கள். இதற்கு அடுத்து வந்தவர்கள் 60 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்தது, மெனோபாஸ் ஏற்பட்டதால்தான். இந்த உண்மையை உணர்ந்தால் பெண்களுக்கு அந்தப் பருவத்தில் ஏற்படும் மனச்சிக்கல்கள் மாயமாகிவிடும்.

அடர்ந்த காட்டில் வளரும் ஒரு மிருகத்தை மிருகக்காட்சி சாலைக்கு கொண்டுவந்தால், அது மிகுந்த வேதனை அடைகிறது. கூண்டுகளில் அடைக்கப்பட்ட கொரில்லாக்கள் சுய இன்பம், வன்புணர்ச்சி, ஓரினப்புணர்ச்சி ஆகியவற்றில் ஈடுபடுகின்றன. சுதந்திரமாகத் திரிந்தவை குறுகிய இடத்தில் நடமாடும்போது இதுபோன்ற நெறிபிறழ்வுகளுக்கு ஆட்படுகின்றன. ஆனால், அதைவிட அதிக இடநெருக்கடி உள்ள ஒரு பகுதியில் வாழ்வதற்கும், அடுக்ககங்களில் தன்னை அடைத்துக்கொள்வதற்கும் மனிதன் தயாராக இருக்கிறான்.

ஒரு வகையில் வெளியே வந்துபோகும் உரிமை கொண்ட உயிரியல் பூங்காக்களாகவே, நம்முடைய அடுக்குமாடி குடியி​ருப்புகள் அடுக்​கடுக்கான பிரச்னை​களோடு திகழ்கின்றன. ஒரே ஒரு வித்தியாசம் அதில் நாமே நம்மை அடைத்துக்கொள்கிறோம். அவ்வப்போது சுதந்திரக் காற்றை கொஞ்சமாவது சுவாசிக்காவிட்டால் நாம் இன்னும் மனம் திரிந்துபோவோம் என்பதற்காகவே ஒவ்வொரு பகுதியிலும் கொஞ்சம் காலியிடம் கட்டாயம்  விடவேண்டும் என்று விதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  சிலர் வீட்டில் இருப்பதைவிட அதிக நேரம் விளையாட்டு மைதானங்களில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்ப்பதைக் காணலாம். மாநகரங்களில் ஜன்னல்களைக்கூட திறந்துவைக்க முடியாது. காரணம் திறந்துவைத்தால் காற்று வருவதைவிட களவு தருவதே அதிகம். 

விலங்கியல் நிபுணர்களுக்கு மனிதன் என்பவன் பெரிய மூளை உள்ள வாலில்லாத குரங்கு. வாழ்க்கையின் அழுத்தங்களுக்கு ஈடுகொடுத்து அனுசரித்துச் செல்லும் போக்கு இருப்பதனாலேயே, அதிக மக்கள் நெருக்கம் உள்ள இடங்களிலும் மனிதன் சௌகரியமாக வாழ்கிறான். நட்பு சார்ந்த வாழ்க்கையும், ஆர்வம் சார்ந்த முனைப்புமே அவனைப் பரந்து விரியச் செய்தது. மற்ற விலங
்குகள் குட்டிகளாக இருக்கும்போது விளையாடுகின்றன. குட்டி நாய், தாய் நாயிடம் விளையாடுவதைப் பார்க்கலாம். அப்போது அந்தக் குட்டி நாய் எதைச்செய்தாலும் பொறுமையாக தாய் நாய் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்க்கலாம்.  மனிதனோ வளர்ந்த பிறகும் விளையாடும் எண்ணத்தை விடுவது இல்லை. குழந்தைகளுக்கு விளையாட அவனே கற்றுத்தருகிறான். அவனுடைய விளையாட்டு, கலை, கிரிக்கெட், இசை, பயணம், பொழுதுபோக்கு, சீட்டாட்டம்  என்று  இறுதி வரை தொடர்கிறது. ஏதேனும் ஒன்றை அவன் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும். வேட்டையாடியவனுக்கு இன்னும் ஆயுதத்தைக் கீழே போட மனம் வராததால், யுத்தம் செய்யத் தொடங்கினான். இப்போதும் துப்பாக்கி சுடும் போட்டி என்று அவனுடைய வேட்டையாடும் வேட்கை தணியாமல் இருக்கிறது.

ஒரு குழந்தை புதிய பொருளைப் பார்த்ததும் ஆர்வம் கொள்வதைப்போல வளர்ந்த பிறகும், தன்னைச் சுற்றியுள்ளவற்றில் ஆர்வம் கொள்பவனே புதியனவற்றைக் கண்டுபிடிக்கிறான்; படைப்பாக்கத்துடன் திகழ்கிறான். வயதான பிறகும் அந்தக் குழந்தைத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்வதால்தான் அவனால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை அடைய முடிகிறது.

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிகமான குழந்தைத்தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள். அந்த ஆர்வமே அவர்கள் பல புதியவற்றை அதிக அளவில் கண்டுபிடிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. இதுவரை நோபல் பரிசு பெற்ற 561 பேரில் 44 பேர் மட்டுமே பெண்கள். அவர்கள் இந்தத் தேவையில்லாத முஸ்தீபுகளில் எல்லாம் அதிகம் இறங்கி அலட்டிக்கொள்வது இல்லை என்பதால் அல்ல. அமர்த்தியாசென் கூறுவதுபோல ‘வாய்ப்பின்மையே உண்மையான வறுமை’ என்பதால்.     

குழந்தைக்கு பயம் இருப்பது இல்லை. அது எதையும் அறியாமல் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறது. குழந்தைத்தன்மை அதிகம் இருப்பதால், ஆணும் ஆபத்தைச் சந்திக்க ஆயத்தமாக இருக்கிறான்.  அதனால்தான், 30  வயதான ஆண் அதே வயதுள்ள பெண்ணைக் காட்டிலும் 15 மடங்கு விபத்துக்கு உள்ளாகிறவனாக இருக்கிறான். அவன் அதிகம் வெளியே தேடுவது அதற்குக் காரணம்.

தொடக்கக் காலத்தில் வேட்டையாடி உணவைச் சேகரிப்பது அதிக ஆபத்தானதாக இருந்தது. அப்போது பெண்ணின் வாழ்வும் உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இனத்தை விருத்தி செய்வதற்கு அவள் உயிர் முக்கியம், தாய்வழிச் சமூகம் இருந்தது. அப்போது ஆண்களின் உயிர் சல்லிசானதுதான். எனவே கூட்டமாகச் சேர்ந்து வாழ்கிற குடும்பத்தில் ஒரு ஆண் பலியானால் பிரச்னை இல்லை. 

பெண்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள், அது பரிணாம வளர்ச்சியின் தாக்கம். முதிர்ந்த மனிதனுக்கான தோற்றத்தையும் குழந்தைக்கான விளையாடும் தன்மையையும் ஆண்களும், குழந்தைக்கான உடல்வாகையும் முதிர்ந்த மனநிலையையும் பெண்களும் தங்கள் வளர்ச்சியின்போது அடைவதுதான் மானுடத்தின் முன்னேற்றத்துக்குப் பெரிதும் பங்களித்திருக்கிறது. 

பெண்ணுக்கு இருக்கும் பொறுப்புகளின் காரணமாக அவள் அதிகமாக அறிவுள்ளவளாகவும், உணர்ச்சி உள்ளவளாகவும், அக்கறை எடுத்துக்கொள்பவளாகவும் இருக்கிறாள். ஆணோ கற்பனை அதிகம் உள்ளவனாகவும், கொஞ்சம் திரிபு உள்ளவனாகவும் இருக்கிறான்.

உடலளவிலும் ஆணும் பெண்ணும் மாறுபடுகிறார்கள். உடல்ரீதியாக ஆண், பெண்ணைவிட வலிமையானவன். பொதுவாக ஓர் ஆணின் உடம்பில் 28 கிலோ சதை இருக்கிறது. பெண்ணின் உடம்பில் 15 கிலோ மட்டுமே. ஆணின் உடல் பெண்ணைவிட 30 சதவிகிதம் வலிமையாகவும், 10 சதவிகிதம் கனமாகவும், ஏழு  சதவிகிதம் உயரமாகவும் இருக்கிறது. ஆனால், இனவிருத்தி செய்கிற பணியில் பெண்ணுக்கான முழுமையான பொறுப்பு இருப்பதால் பட்டினியில் இருந்து காக்கும் பொருட்டு, அதிகக் கொழுப்புச் சத்தை அளித்திருக்கிற
து. பெண்களின் வனப்பு மிகுந்த உடலில் 25 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருக்கிறது, ஆணிலோ அதில் சரிபாதி இருக்கிறது. கொழுப்புச் சத்து வேறு, கொழுப்பு வேறு. கொழுப்புச் சத்து உடல் ரீதியானது, கொழுப்பு மனம் சம்பந்தப்பட்டது.

திரைப்படங்களில் ஆணும் பெண்ணும் சேர்ந்து பின்னணி பாடும்போது, பெண்ணின் குரலே ஓங்கி ஒலிக்கிறது. இது சீர்காழிக்கு மட்டும் பொருந்தாது. அதன் பின்னணி சுவையானது. பரிணாம வளர்ச்சியில் குழுவாக வாழ்ந்தபோது பெண் குழந்தைகளை வேறு ஆண்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டும், அவர்கள் குரலுக்கு எங்கிருந்தாலும் உடனடியாக எதிர்வினையாற்றும் பொருட்டும், இயற்கை ஓர் அதிசயத்தை நிகழ்த்தியது. பெண்களின் குரலுக்கு அதிக ஆற்றல் அளித்தது.  ஒரு நொடிக்கு 130 முதல் 145 அலையுடைய குரல் ஆண்களுக்கு. பெண்களுக்கோ 230 முதல் 255 சைக்கிள்கள் கொண்ட  குரல். அதனால்தான் குழந்தைகளுக்கான கீச் குரலை பெண்கள் இன்னமும் தக்கவைத்துக்கொள்கிறார்கள். 

குரலை மட்டுமல்ல, உடல்வாகிலும் பெண்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்துக் கூறுகளை இழப்பது இல்லை. ஆனால் ஆண்களோ அடர்த்தியான புருவம், வித்தியாசமான தாடை, வளர்ந்த மூக்கு, மீசை, தாடி, ரோமம் அடர்ந்த மார்பு ஆகியவற்றோடு தங்களை வேறுவிதமாக அடையாளப்படுத்துகிறார்கள். 

உடல்ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளில் அவர்களை மற்ற உயிர்களில் இருந்து துல்லியமாக அடையாளப்படுத்துவதுதான் அவர்கள் தங்கள் பணியையும், கடமையையும் முறையாக ஆற்ற வழிவகுக்கிறது.

மனிதன் வேட்டையாடச் சென்றதும் விலங்குகளை எதிர்கொண்டதும் அவ​னுடைய உடலை உயரமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள உதவியது.  இன்று உடலமைப்பில் வேறுபட்டிருக்கும் ஆணும் பெண்ணும் அவர்கள் அங்க வேறு​பாடுகளை அடையாளம் காட்டுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல், பல தகவல்களைப் பேசா மல் பரிமாறிக்கொள்ளவும் உபயோகிக்​கிறார்கள். ஒரு பெண் எந்தச் சொல்லையும் பேசாமல் வெறுப்பையோ, உதாசீனத்​தையோ இடத்தை காலிசெய் என்கிற எச்சரிக்​கையையோ அவளுடைய உடல் மொழி மூலம் உணர்த்திவிட முடியும். தன் மீது விருப்பம் இருக்கிறதா, இல்லையா என்பதை உடல் மொழியின் மூலம் சூசகமாக ஆண்கள் புரிந்துகொள்ள முடியாத பலவீனமே, இன்று இருக்கிற அத்தனை பதின்ம வயதுக் கோளா​றுகளுக்கும் அடிப்படைக் காரணம்.

Leave a Reply

%d bloggers like this: