மனிதன் மாறி விட்டான்!-24

மருத்துவம் என்பது மனித வாழ்க்கையை நீட்டிப்பதற்கான முயற்சியாக ரத்தம் செலுத்துவது, இருதய சிகிச்சை போன்ற பலவற்றை மேற்கொண்டு வருகிறது.  மருந்துகள், மாத்திரைகள் ஆகியவற்றால் நாம் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவற்றைக்  கட்டுப்படுத்தி உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  அதேநேரத்தில் இயற்கை அதை வேடிக்கை பார்ப்பதில்லை.  அது வேறுவிதத்தில் சில எதிர்வினைகளைச் செய்கிறது.  நம் உடலில் புற்றுநோய் வராமலிருக்க புற்றுக் கட்டியை அமுக்குகிற  ஒரு ஜீன் இருக்கிறது.  ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் வாழுகிறபோது அந்த ஜீனின் செயல்பாடு குறைந்துவிடுகிறது.  அப்போதுதான் புற்றுநோய் ஏற்பட்டு இறப்பை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.  புற்றுநோய் என்பது ஜீன்களின் தேர்ச்சியின்மைதான்.  ஒரு செல் பிரிகிறபோது அதன் டி.என்.ஏ-வை வெற்றிகரமாக பிரதி எடுக்க வேண்டும். ஒரு மனித வாழ்வில் ஏற்படும் செல் பிரிவுகள் எக்கச்சக்கமாக அதிகரிக்கும்போதுதான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. 

மனிதன் மட்டுமே அறிவின் மூலம் வாழ்வை நீட்டிக்கொள்ளப் போராடுகிறான். நாம் எவ்வளவுதான் முயன்றாலும் நம்முடைய பரிணாம வளர்ச்சி நம்முடனே ஒட்டிக்கொண்டிருக்கிறது.  இப்போதுகூட துயரமான செய்தியைக் கேட்டால் பலருக்கு வயிறு கலக்குகிறது. நாம் காடுகளில் தூரத்தில் புலியையோ, கரடியையோ பார்த்தால் ஓடி ஒளிந்துகொள்ள முயல்கிறோம். அப்போது சாப்பிட்ட வயிறுடன் ஓடமுடியாது. எனவே, வயிற்றைக் காலி செய்துவிட்டு ஓடுவதுதான் வாடிக்கை.  அதுதான் இப்போதும் தொடர்கிறது. 

மனித வாழ்க்கை நீளும்போது சில அனுகூலங்கள் நிச்சயம் இருக்கின்றன. அது இன்னும் பல கண்டுபிடிப்புகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றும் அவகாசத்தையும் வழங்குகிறது.   பாரதியார் 80 வயது வரை வாழ்ந்திருக்கக்கூடாதா என்கிற ஏக்கம் ஏற்படவே செய்கிறது. ராமானுஜன் அற்ப ஆயுளில் போனது குறித்து கவலை ஏற்படவே செய்கிறது.  கீட்ஸ், பெர்னாட்ஷா நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தால் எத்தனை இலக்கியங்கள் கிடைத்திருக்கும் என எண்ணுகிறோம். அவர்கள் இறந்தும் வாழ்கிறார்கள்.  சிலரோ வாழும்போதே செத்துப்போய்விடுகிறார்கள். வாழ்வில் மரணம், மரணத்தின் வாழ்வைவிட மோசமானது.

ஒரு சம்பவம்.

மகனை ஒரு பெண் பள்ளிக்குக் கூட்டிச்சென்று அனுமதிக்கிறாள்.  தாய்க்கு ஒரு கண் மட்டுமே இருந்ததைப் பார்த்த சகமாணவர்கள் ‘உன் அம்மாவுக்கு ஏன் ஒரு கண்?’ என்று கிண்டல் செய்தார்கள்.  அன்று வீட்டுக்கு வந்த மகன், ”என் நண்பர்கள் உனக்கு ஒரு கண் இருப்பது குறித்து கேலி செய்கிறார்கள்.  இனி என் பள்ளி பக்கம் வராதே” என்று கடுகடுவென்ற முகத்துடன் சொன்னான்.  ஒருநாள் அவன் டிஃபன் பாக்ஸை விட்டுவிட்டுச் சென்றதால், அதைக் கொடுக்க அவள் மறுபடியும் பள்ளிக்குச் சென்றாள்.  மாணவர்கள் குத்தலாகப் பேச, மனமொடிந்த மகன் அன்று மாலை ‘ஏன் மீண்டும் வந்து உயிரை வாங்குகிறாய்? செத்துத் தொலைக்கலாம்’ என வசை பாடினான். அவள் ஒற்றை விழியில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டாள்.

அதற்குப் பிறகு அவள் பள்ளிக்கோ, வேறு இடத்துக்கோ அவனுடன் செல்லவில்லை. அவன் படித்து வெளிநாட்டில் பணியில் சேர்ந்து குடும்பமும், குட்டியுமாக வாழ்ந்தான்.  ஒருநாள் அவன் கதவு தட்டப்பட்டது.  அவன் மகள் ஓடிக் கதவைத் திறந்தாள்.  ஒற்றைக் கண்ணுடன் ஒரு மூதாட்டி நிற்பதைப் பார்த்து அவள் அலறி அடித்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.  யாரென்று பார்த்த அவன் கோபப்பட்டான். ‘இங்குமா வந்து உயிரை எடுக்கிறாய்?’ என்றான். ‘உன்னைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது’ எனக் கண்ணீருடன் சென்றுவிட்டாள்.

பள்ளி பழைய மாணவர்களின் சந்திப்புக்கு
ஊர் சென்ற அவன், வேண்டா வெறுப்புடன் வீட்டுக்குச் சென்றான்.

அங்கு அவனுடைய அம்மா குற்றுயிரும், குலையுயிருமாகக் கிடந்தாள். அவள் அருகில் ஒரு கடிதம்.

‘மகனே! எனக்கு ஒற்றைக் கண் இருப்பதற்காகத்தானே இத்தனை வெறுப்பு உனக்கு!

”சின்ன வயதில் உன்னுடைய ஒரு கண் குச்சிக் குத்திப் பழுதானது.  அப்போது அவமானப்படுவாயே என, என் ஒரு கண்ணை உனக்குத் தந்ததால்தான் எனக்கு ஒற்றைக் கண் மட்டுமே எஞ்சியிருந்தது.  நீ வையும்போதும், உன்னுடைய கண்களைப் பார்த்து என் பணியைச் செய்த திருப்தி எனக்கு ஏற்படும். இன்று உண்மை தெரிய வேண்டும் என்று நடந்ததைக் கூறுகிறேன்.  இனிமேலாவது என்னை வெறுக்காதே.”

அவன் அழுகையுடன் அவளை அணைப்பதற்கு முன் உயிர் பிரிந்திருந்தது.       

எத்தனை நாட்கள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே மானுடம் முன் வைக்கும் மகத்தான பாடம்!

Leave a Reply

%d bloggers like this: