மனிதன் மாறி விட்டான்! -25

1.சிம்பன்சிகளுக்கு நெருங்கிய உறவினர் யார்?

விடை : மனிதன்.

மனிதர்களும் ‘ஏப்ஸ்’ என்று சொல்லப்​படுகின்ற குரங்கினங்களும் சாதாரண குரங்குகளைவிட அதிகம் தொடர்பு உடையவை. நம்முடைய மரபுக்கூறுகள் சிம்பன்சிகளிடமிருந்து 1.6 சதவிகிதம் மட்டுமே வேறுபடுகின்றன. கொரில்லாக்களோ சிம்பன்சிகளிடமிருந்து 2.3 சதவிகிதம் வேறுபடுகின்றன.  ‘ஒராங்குட்டான்’ என்கிற குரங்கினம் நம்மிடமிருந்து 3.6 சதவிகிதம் வேறுபடுகிறது.  கிப்பன்களுக்கும் நமக்கும் 2.2 சதவிகிதம் மரபுக்கூறுகள் வேறுபடுகின்றன.  எப்படிப் பார்த்தாலும் நமக்கு நெருங்கிய மரபுக்கூறு கொண்டது சிம்பன்சிதான்.

3. நட்சத்திர ஹோட்டல்களில் ஆறேகால் அடிக்குமேல் இருக்கும் உயரமான மனிதர், மகுடத்தைப் போன்ற தலைப்பாகையுடன் நின்றிருப்பது எதனால்?

 

விடை : அவ்வளவு கம்பீரமானவர் நம் காரின் கதவைத் திறக்கும்போது நம்மையும் அறியாமல் நம் தன்முனைப்பைத் திருப்திபடுத்துவதற்காக.

உயரமான ஒரு மனிதர் குனிந்து நம் காரின் கதவைத் திறப்பது நம் தன்முனைப்பைத் திருப்திப்படுத்துகிறது. உயர்ந்த அதிகாரிகளின் முன்பு வளைந்து பேசுவதும், சார்நிலைப் பணியாளர்களிடம் நிமிர்ந்து பேசுவதும் நம் பழக்கம். விலங்குகள் பெரிய பிராணிகள் தாக்க வரும்போது முடியைச் சிலிர்த்துக்கொண்டு உடம்பைப் பெரிதாக்கி ஒரு நிமிடம் எதிர்க்க வருகிற விலங்குக்கு அதிர்ச்சியைத் தந்து தப்பித்துவிடும்.

4. மனிதப் புலன்களில் முதன்மையானது எது?

விடை : நுகர்தல்.

நம்முடைய மூளையின் கோளங்கள் நுகரும் தண்டில் இருந்து உதயமானவை​தான். நாம் மனத்தால் மட்டும் சிந்திக்கவில்லை, மணத்தாலும் சிந்திக்கிறோம். எனவே, நுகர்தல்தான் நம்முடைய முதல் புலன். அதுவே மூளை​யாகப் பரிணாம வளர்ச்சிப் பெற்றது.  டயன் அக்கர்மென் ‘புலன்களின் இயற்கை வரலாறு’ என்ற புத்தகத்தில் இதைப்பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

5. நம் உடலில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்ந்து தேய்மானம் அடைகிற உறுப்பு எது?

விடை : மூளை

மூளை ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தேய்மானம் அடைந்துகொண்டே வருகிறது. மூளையின் செல்கள் பழுதானால் புதிப்பிக்கப்படுவதில்லை. பல் போன்றவை கண்டிப்பாக தேய்மானம் அடைந்துதான் தீரவேண்டும்.  ஆனால் மூளையைப்போல அவை செயல் இழந்துகொண்டே போவதில்லை. பழுதடைந்த நியூரான்களைப் புதுப்பிக்கும் வசதி முதுகெலும்புள்ள பிராணிகள் எதற்கும் வாய்க்கவில்லை.     எலியின் மூளையில் உள்ள சில பகுதிகளில் நியூரான்கள் புதுப்பித்துக்கொள்கின்றன.

6. சரளமாகப் பேச முடியாதவர்கள் பாடும்போது இயல்பாகப் பாடுவது எதனால்?

விடை : பாடுவதும் பேசுவதும் மூளையின்
வெவ்வேறு கோணங்களால் இயக்கப்படுவதால்.

பேசுவது மூளையின் ஒருபகுதியிலும் பாடுவது இன்னோர் அரைக்​கோளத்​திலும் கட்டுப் படுத்தப்படுவதால், இது நிகழ்கிறது. மூளை        விஞ்​ஞானி ராமச்சந்திரன், பேச்சு பாதிக்கப்பட்ட டாக்டர் ஹம்டி என்கிற நபர் அவருடைய பிறந்த நாளின்போது சரளமாக ‘ஹாப்பி பர்த் டே’ பாடலைப் பாடி​யதை அவருடைய ‘டெல் டேல் பிரைன்’ நூலில் குறிப்பிடுகிறார். ஹம்டிக்கு இடது பக்க கோளம் விபத்தில் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால்அவர் பேசுவதிலும் பிரச்னை. மூளை ஒருமித்துச் செயல்​பட்டாலும் சில நிகழ்வுகளில் இது​போன்ற ஆச்சர்யங்கள் நடைபெறுவது உண்டு. பால் ப்ராக்கோ, கார்ல் வெர்னிக் என்பவர்கள் பக்கவாதத்​தால் பாதிக்கப்பட்டவர்கள். பேச்சு வராமல் கஷ்டப்​படுவதை அவர்கள் இறந்தபின்பு அந்த மூளைகளைக் கொண்டு சோதனை செய்து இதை அறிவித்தார்கள். 

7. மது அருந்தும் ஆண்கள் மனம்விட்டுப் பேசுவது…

விடை : பின்னணித் தெரியாத புதிய மனிதர்களுடன்.

மது அருந்துபவர்கள் அருந்தகப் பணியாளர்களிடம் எல்லா பிரச்னைகளையும் கொட்டித் தீர்ப்பார்கள். மதுவின் மயக்கமே இதற்குக் காரணம்.  டையனா கே.ஐ.வி, ஷான் டீ வால் என்ற இருவரும் எழுதிய புத்தகத்தில் அவர்கள் இவ்வாறு பணிபுரிந்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து எழுதியிருக்கிறார்கள்.  அருந்தகப் பணியாளர்கள் யாரிடமும் இதைப் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அதற்குக் காரணம்.

8. புதிய மனிதர் ஒருவர் நமக்கு மிகவும் நெருக்கமாக வந்து பேசினால் நாம் ஏன் எரிச்சல் அடைகிறோம்?

விடை :  நம் நெருங்கிய பிரதேசத்தில் அந்நியர் நுழைவதால் ஏற்படும் சங்கடம்.

ஒவ்வொரு மனிதருக்கும் 18 அங்குலம் வரை நெருங்கிய மண்டலம் இருக்கிறது. நான்கு அடி வரை சொந்த மண்டலம் இருக்கிறது. இதற்குள் அந்நியர் ஒருவர் நெருங்கி வந்து பேச அனுமதி இல்லை. மனைவி, குழந்தைகள் போன்றவர்கள் நெருங்கிய மண்டலத்திலும், நண்பர்கள் சொந்த மண்டலத்திலும் நுழையலாம். அந்நியர் ஒருவர் நுழைகிறபோது இயல்பாகவே நமக்கு எரிச்சல் வருகிறது.

9. சிற்றுண்டி சாலைகளில் சில சர்வர்கள் சிலரை மட்டும் விழுந்து விழுந்து கவனிப்பது…

விடை : அவர்கள் அதிகம் டிப்ஸ்

கொடுப்பார்கள் என்கிற யூகத்தால்.

நன்றாக உடை உடுத்துபவர்கள், பளிச்சென்று இருப்பவர்கள் நிறைய டிப்ஸ் கொடுப்பார்கள் என்கிற ஒளிவட்டப் பார்வை பெரும்பாலான மனிதர்களுக்கு உண்டு.  எனவே, அவர்களை விழுந்து விழுந்து கவனிப்பார்கள்.  அப்படிக் கவனித்து ஏமாந்து போவதும் உண்டு.

10. மாடி அறைகள் கொண்ட பெரும்பாலான வீடுகளில் படுக்கை அறை மாடியில் இருப்பது எதனால்?

விடை : பரிணாம வளர்ச்சியின் காரணமாக.

படுக்கையறை மாடியில் இருப்பது மரத்தில் கூடு பாதுகாப்பாக இருப்பதைப்போன்று ஓர் உணர்ச்சிதான். தரைதள
த்தில் அந்நியர்கள் எளிதில் வந்துபோகலாம்.  மாடி அறை என்பது அதிக தனிமையும் பாதுகாப்பும் கொண்டது. மனிதன் காடுகளில் வாழ்ந்தபோது மரத்தில் ஏறி தூங்கியதும் இதற்குக் காரணம்.

11. நாம் பிறக்கும்போது நம் மூளையின் அளவு

விடை : 23 விழுக்காடு.

நாம் பிறக்கும்போது மூளையின் அளவு 23 சதவிகிதம்தான் இருக்கிறது. அடுத்த ஆறு ஆண்டுகள் மிக வேகமாக வளர்கிறது. 23 வயதாகும்போது மூளை முழு வளர்ச்சியைப் பெற்றுவிடுகிறது. மனிதனைவிட யானைக்கும் டால்பினுக்கும் மூளை பெரியது. ஆனால் மனிதனுக்கு விகிதாசாரம் அதிகம். விகிதாசாரமே விளைவுகளைத் தீர்மானிக்கிறது.

12. தாவர உண்ணிகளுக்கும், மாமிச உண்ணிகளுக்கும் பார்வை அமைப்பு எப்படி அமைந்துள்ளது?

விடை : மாமிச உண்ணிகளுக்கு இருவிழிப்பார்வை அமைப்பும் தாவர உண்ணிகளுக்கு ஓரம் சார்ந்த பார்வை அமைப்பும் இருக்கின்றன.

மாமிச உண்ணிகள் இரையைப் பார்க்கவும் பிடிக்கவும் அவற்றுக்கு பைனாக்குலர் பார்வை இருக்கிறது. அவை பிடிக்கும் இரைகளுக்கோ ஓரம்சார்ந்த பார்வை இருக்கிறது. அதனால் பின்னால் வருகிற மிருகங்களையும் அவற்றால் கண்டுகொண்டு ஓடித் தப்பிக்க முடிகிறது. 

13. நம் கண்களுக்கு வண்ணத்தைக் கொடுக்கும் உறுப்பு எது?

விடை : கருவிழி (Iris).

நாம் வண்ணங்களைப் பார்க்க உதவுவது கூம்பு வடிவ கோன் செல்கள். ஆனால், நம் கண்கள் நீலமா, பழுப்பா, கறுப்பா என்பதைத் தீர்மானிப்பது ‘ஐரிஸ்’ என்கிற கருவிழி. அதற்குக்  கிரேக்கத்தில் ‘வானவில்’ என்று பொருள். ஒளியை அந்தப் பகுதி எப்படிச் சிதையச் செய்கிறது என்பதைப் பொறுத்தே விழியின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது. 

14. ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அங்கு நாமே எடுத்து உண்ணும் பஃபே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு அது பழக்கம் இல்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்?

விடை : தட்டை நிரப்பாமல் குறைவாக எடுத்துவந்து இரண்டு, மூன்று முறை சென்று சாப்பிடுவேன்.

பஃபே விருந்தில் கொஞ்சம் கொஞ்சமாக எத்தனை முறை வேண்டுமானாலும்  சாப்பிடலாம். இதுபோன்ற நிகழ்வுகளில் சாப்பிடுவதைவிட மற்றவர்களோடு அறிமுகமாவதுதான் முக்கியம்.  அதற்காகவே, அதிக நேரம் சாப்பிடும் வகையில் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன.

Leave a Reply

%d bloggers like this: