விண்டோஸ் 10ல் பேஸ்புக் மெசஞ்சர் வீடியோ அழைப்பு

விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இயங்கும் மொபைல் போன்களில், தொலைபேசி மற்றும் விடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் செயலிகளை, பேஸ்புக் தன் மெசஞ்சர் செயலியில் அண்மையில் தந்துள்ளது. ஏற்கனவே, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இயக்க முறைமை அலைபேசிகளில் இந்த வசதி கிடைத்து வருகிறது. இதுவரை இந்த அழைப்புகளை விண்டோஸ் அலைபேசியில் ஏற்படுத்த இயலாது. மெசஞ்சர் செயலியிலிருந்து விலகி, Messenger.com அல்லது Facebook.com சென்று தான் இந்த அழைப்புகளை ஏற்படுத்த இயலும்.

வழக்கம்போல, விண்டோஸ் 10 இயக்க முறைமையில் இயங்கும் மெசஞ்சர் செயலியிலும், போன் ஐகான், மேலாக வலது பக்கம் தரப்படுகிறது. இந்த ஐகான் பச்சை வண்ணத்தில் நீங்கள் அழைக்க விரும்பும் நண்பர் இணைப்பில் உள்ளதைக் காட்டும். ஐகானை அழுத்தினால், “உங்கள் இணைப்பு வை பி இணைப்பா? அல்லது டேட்டா திட்டமா?” என்று மெசஞ்சர் கேட்கும். பின்னர் தொடரலாம்.
சென்ற வாரம் தான் இந்த வசதியை எந்தவித அறிவிப்பும் இன்றி பேஸ்புக் வழங்கியுள்ளது. உங்கள் அலைபேசியில் கிடைக்கவில்லை என்றால், சில நாட்களில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கிடைத்த பின்னர், உங்களை உங்கள் நண்பர் அழைத்தால், அழைப்பு ஒலி கிடைக்கும். விடியோ அழைப்பில் எந்த கேமரா பயன்படுத்தலாம் என்று தேர்ந்தெடுக்கலாம். விடியோ அழைப்புகளைப் பதிந்திடலாம். குழுவாகப் பேச விரும்பினால், குரல் அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள இயலும்.
செய்திகள் அனுப்புவது இதிலும் மறைகுறியாக்க (Encryption) முறையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. ஒருவருடன் செய்தி பரிமாற்றம் மேற்கொள்கையில் இந்த முறை மேற்கொள்ளப்படுவதால், இருவர் மட்டுமே இதனைப் படித்து அறிந்து கொள்ள இயலும்.
சென்ற ஏப்ரல் மாதம், மொபைல் போன் விண்டோஸ் 10க்கான பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷன்கள் வெளியாகின. தொடர்ந்து இதன் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இவற்றில், அலைபேசி மற்றும் விடியோ அழைப்பிற்கான வசதிகள் இல்லாமல் இருந்தன. ஆனால், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்க முறைமைகளில் கிடைத்து வந்தன. இப்போது இந்த இடைவெளி நிரப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: