ஆரோக்கியம் காக்க… அறுசுவையும் அதிகரிக்க!

கிச்சன் பேஸிக்ஸ் என்றால் என்ன?
முழுமையான இந்தியச் சமையல் செய்வதற்கு சில அடிப்படைப் பொருள்கள் தேவை. உதாரணமாக இட்லி, தோசை மாவைப் பயன்படுத்தி ஏராளமான புதிய உணவுகளைத் தயாரிக்கலாம். சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய்ப் பொடி போன்ற சில பொடி வகைகளைப் பயன்படுத்தி மேலும் பல ரெசிப்பிகளை உருவாக்கலாம்.

கோதுமை மாவு, அரிசி மாவு வகைகளைப் பயன்படுத்தியும் பல்வேறு சுவைகளைக் கொண்டுவரலாம். இவற்றுக்கு அடிப்படைத் தேவை யான மாவு, பொடி வகைகளை வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்துக்கு ஒருமுறை கூட தயாரித்து வைத்துக்கொள்ளலாம்.
அடிப்படை ரெசிப்பிகளின் அவசியம்
இன்று கடைகளில் கிடைக்கும் பொருள்களில் கலப்படமும் போலிகளும் கலந்தே வருகின்றன. அதோடு, தயாரிக்கப்பட்ட பொருள்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுக் கடைகளுக்கு வந்து சேர்வதற்கு அந்தந்தப் பொருள்களைப் பொறுத்துக் குறைந்தபட்சம் ஒரு நாளோ, பல நாள்களோ ஆகின்றன. உதாரணமாக, பாக்கெட்டுகளில் விற்கப்படும் இட்லி, தோசை மாவு வகைகள் தயாரிக்கப்பட்ட அடுத்த நாள்தான் கடைகளுக்கு வந்து சேர்கின்றன. குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட பிறகு மாவு குறைந்த நேரமே நன்றாக இருக்கும் என்பதால், நமக்கு வந்து சேரும்வரை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சில பொருள்கள் கலக்கப்படுகின்றன.
தரமான மூலப்பொருள்களைப் பயன்படுத்தித் தயாரித்தால் உற்பத்திச் செலவு அதிகமாகும். குறைந்த விலைக்கு விற்றால்தான் மக்கள் அதிக அளவில் வாங்குவார்கள் என்கிற எண்ணத்தில் தரம் குறைந்த மூலப்பொருள்களை உபயோகப்படுத்தியும் சிலர் தயாரிக்கிறார்கள். இதன் விளைவாக, கடைகளில் தரம் குறைந்த, கலப்படமான பொருள்களும் நிறைந்து காணப்படுகின்றன.
இவற்றைத் தவிர்க்க… சில அடிப்படைப் பொருள்களை நம் வீட்டிலேயே தரமான பொருள்களைப் பயன்படுத்தி, சுத்தமாகத்  தயாரித்துச் சேமிக்கலாம். உதாரணமாக இட்லி, தோசைக்கு மாவு அரைத்து உப்பு சேர்க்காமல் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கலாம். சாம்பார் பொடிகளை மஞ்சள் சேர்க்காமல் தயாரித்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்தால் ஒரு வருடம் வரைகூட ஃப்ரிட்ஜில் வைக்காமல், வெளியில் வைத்தே பயன்படுத்தலாம். வீட்டிலே தயாரிப்பதால் சுகாதாரமாகவும் இருக்கும்; உடலுக்கும் தீங்கு விளைவிக்காது.
கடைகளில் விற்பதைவிட குறைந்த செலவிலேயே தயாரிக்க முடியும். நமது சமையலின் சுவை கூடுவதும் உறுதி. இதை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
அடிப்படை ரெசிப்பிகளை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்பதைப் பற்றி இந்தப் பகுதியில் நாம் தெரிந்துகொள்ளலாம். தென்னகப் பொடிகளின் தாயாகக் கருதப் படுவது சாம்பார் பொடிதானே? இதோ உங்களுக்காக சாம்பார் பொடிகளில் சில வகைகள்…
முனுக்கி வைத்த சாம்பார் பொடி
தேவையானவை:
துவரம்பருப்பு – அரை  கப்
காய்ந்த மிளகாய் – ஒரு கப்
பச்சரிசி – 4 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் மிதமான தீயில் தனித்தனியாக, பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

உபயோகிக்கும் முறை: ஒருமுறை சாம்பார் செய்வதற்கு இரண்டு டேபிள்ஸ்பூன் பொடி விகிதம் உபயோகிக்கவும்.


உடுப்பி சாம்பார் பொடி
தேவையானவை:
காய்ந்த மிளகாய் – 30
மல்லி (தனியா) – அரை கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் கப்
கொப்பரைத் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – வறுக்கத் தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும் (கொப்பரையைக் கடைசியாகச் சேர்த்து வறுக்கவும்). ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி வைத்து, ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை: சாம்பார் செய்யும்போது கால் கப் பருப்புக்கு 2 டேபிள்ஸ்பூன் உடுப்பி சாம்பார் பொடி சேர்க்கலாம்.


நெல்லை இடி சாம்பார் பொடி
தேவையானவை:
காய்ந்த மிளகாய் – கால் கிலோ
தனியா (மல்லி) – கால் கிலோ
உளுத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
வெந்தயம்  – 25 கிராம்

செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியபின் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும்.  இந்தப் பொடியைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். பல மாதங்களுக்கு நன்றாக இருக்கும். தேவைக்கு ஏற்றவாறு பொடியைச் சின்ன டப்பாவில் மாற்றி உபயோகிக்கவும்.

உபயோகிக்கும் முறை:
சாம்பார் செய்யும்போது கால் கப் பருப்புக்கு 2 டேபிள்ஸ்பூன் நெல்லை இடி சாம்பார் பொடி சேர்க்கலாம்.


தஞ்சாவூர் சாம்பார் பொடி

தேவையானவை:

காய்ந்த மிளகாய் – அரை கிலோ
மல்லி (தனியா) – அரை கிலோ
கடலைப்பருப்பு – 50 கிராம்
துவரம்பருப்பு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
மஞ்சள்கிழங்கு – 50 கிராம்
செய்முறை: வெறும் வாணலியில் மஞ்சள் தவிர மீதமுள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் மஞ்சள் சேர்த்து மாவு மெஷினில் கொடுத்து நைஸாக அரைத்து வரவும். ஆறிய பிறகு பொடியைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். பல மாதங்களுக்கு நன்றாக இருக்கும். தேவைக்கு ஏற்றவாறு பொடியைச் சின்ன டப்பாவில் மாற்றி உபயோகிக்கவும்.
உபயோகிக்கும் முறை: சாம்பார் செய்யும்போது கால் கப் பருப்புக்கு 2 டேபிள்ஸ்பூன் தஞ்சாவூர் சாம்பார் பொடி சேர்க்கலாம்.


செட்டிநாடு சாம்பார் பொடி
தேவையானவை:
காய்ந்த மிளகாய் – அரை கிலோ
மல்லி (தனியா)  –  ஒரு கிலோ
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
உளுத்தம்பருப்பு – 100 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
சோம்பு – 25 கிராம்
சீரகம் – 50 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
மிளகு – 50 கிராம்
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாகச் சிறு தீயில் வைத்து வறுத்து எடுக்கவும். ஆறியபின் மாவு மெஷினில் கொடுத்து நைஸாக அரைத்து வரவும். அரைத்த பொடியை பேப்பரில் பரப்பி நன்கு ஆறவிடவும். இதுவே செட்டிநாடு சாம்பார் பொடி. இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஆறு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைக்கு ஏற்றவாறு பொடியைச் சின்ன டப்பாவுக்கு மாற்றி உபயோகிக்கவும்.
உபயோகிக்கும் முறை: சாம்பார் செய்யும்போது கால் கப் பருப்புக்கு ஒரு டேபிள்ஸ்பூன் செட்டிநாடு சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம். மேலும், காரக் குழம்பு, கூட்டு, மசாலா வகைகள், பொரியல், பச்சடி
வகைகள் எனச் சைவ மற்றும் அசைவச் சமையல்களிலும் பயன்படுத்தலாம்.  


டிபன் சாம்பார் பொடி
தேவையானவை:
காய்ந்த மிளகாய் – 30
மல்லி (தனியா) – ஒரு கப்
கடலைப்பருப்பு – கால் கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
துவரம்பருப்பு – கால் கப்
பச்சரிசி – கால் கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் மிதமான தீயில் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இந்தப் பொடியைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

உபயோகிக்கும் முறை: சாம்பார் செய்யும்போது கால் கப் பருப்புக்கு 2 டேபிள்ஸ்பூன் டிபன் சாம்பார் பொடி சேர்க்கவும்.


ஆந்திரா சாம்பார் பொடி
தேவையானவை:
காய்ந்த மிளகாய் – 30
மல்லி (தனியா) – அரை கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
கொப்பரைத் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
எள் – 2  டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – வறுக்கத் தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, அடுப்பை  சிறு தீயில் வைத்து கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். (எள், கறிவேப்பிலை, கொப்பரைத் துருவலைக் கடைசியாகச் சேர்த்து வறுக்கவும்). ஆறியபின் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.  இந்தப் பொடியைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

உபயோகிக்கும் முறை:
சாம்பார் செய்யும்போது கால் கப் பருப்புக்கு ஒரு டேபிள்ஸ்பூன் ஆந்திரா சாம்பார் பொடியைச் சேர்க்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: