வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்

டந்த இருபதாண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில், இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், அவர்கள் ஆரோக்கியமான மனநிலையில் வேலை செய்கிறார்களா? பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு

உறுதிசெய்யப்படுகிறதா? பாலியல் பாகுபாடில்லாமல் சம்பளம், பதவி உயர்வு வழங்கப்படுகிறதா? அவர்களைச் சூழ்ந்துள்ள பிரச்னைகள் இன்னும் என்னென்ன? அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன? விரிவாகப் பேசுவோம். 

சென்னையைச் சேர்ந்த விஜி ஹரி, ஐ.டி நிறுவனத்தில் 14 ஆண்டுகள் பணி அனுபவம்கொண்டவர். இப்போது ‘Kelp HR’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு நிறுவனங்களுக்கும் தன்னம்பிக்கை பேச்சாளராகச் சென்றுகொண்டிருக்கிறார். பணியிடத்தில் பெண்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘`திருமணம் மற்றும் குழந்தைப் பேறுக்குப் பிறகு வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவிகிதம் 15 – 20% குறைகிறது’’ என்று சொல்லும் விஜி, பணிக்குச் செல்லும் பெண்களின் முதன்மைச் சவால்களாக மகப்பேறு காரணங்கள் மற்றும் பாலியல் தொந்தரவுகளை முன்வைக்கிறார்.

பாலியல் தொல்லைகள்

“பெண்கள் பணியைவிட்டு விலகுவதில், அவர்கள் சந்திக்க நேரும் பாலியல் தொல்லைகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளம் பெண்களைக் குறிவைத்து முதலில் சக ஊழியர்கள் முதல் வாட்ச்மேன் வரை பலரும் மறைமுகமாக ஆபாச வார்த்தைகள் பேசுவார்கள். ‘நமக்கெதுக்கு வம்பு’ என ஒதுங்கிப்போனால் வார்த்தைத் தாக்குதல்கள் நீண்டு, இறுதியில் உடல் ரீதியான சீண்டல்கள் மற்றும் உயரதிகாரிகள் ‘அட்ஜஸ்ட்மென்ட்’டுக்கு அழைப்பதுவரை பிரச்னை நீள வாய்ப்பிருக்கிறது. எனவே, ஆரம்ப கட்டத்திலேயே சம்பந்தப்பட்டவர்களிடம் மிகக் கண்டிப்புடன் பேச வேண்டும். ‘உயரதிகாரிகளிடம் புகார் செய்துவிடுவேன்’ என மிரட்டலாம், தேவைப்பட்டால் புகார் செய்து பிரச்னைகளைச் சரிசெய்யலாம். 

பாலியல் தொல்லைத் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் வலியுறுத்தலின்படி, பணியிடத்தில் நிகழும் பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒவ்வோர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’யை பாதிக்கப்பட்ட பெண்கள் நாட வேண்டும்; பயன்படுத்திக்கொள்ள வேண் டும். பணியிடத்தில் பெண்கள் தங்களுக்குள் ஒரு குழுவை ஏற்படுத்திக்கொள்ளலாம். மாதம் ஒருமுறை அக்குழு கூடி, சக பெண் பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்துப் பேசலாம். பல கைகள் இணைந்த அந்த பலம், தேவைப்படும்பட்சத்தில் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’யில் புகார் அளிக்கும் தைரியம் கொடுக்கும்.

மகப்பேறு தடைகள்

அடுத்ததாக, பணிக்குச் செல்லும் பெண்களுக்குக் கர்ப்ப காலமும், மகப்பேறு காலமும் மிகப்பெரிய சவால்தான். ‘இவள் எப்படியும் மகப்பேறுகால விடுப்பு எடுப்பாள். அதன் பிறகு வேலைக்குவந்து சீராகச் செயல்பட காலதாமதமாகும். அதனால், விடுப்பில் செல்லும் முன்பே, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கொடுக்க வேண்டாம், புது புராஜெக்ட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டாம்’ என நிறுவனங்கள் முடிவெடுப்பது அதிகமாக நிகழ்கிறது. ஒரு பெண் மகப்பேறுக்காக விடுப்பு எடுப்பது தவிர்க்க இயலாதது. ஆனால், அதற்காக அதுவரை அவர் உழைத்த உழைப்பைப் புறக்கணிப்பது நியாயமில்லாதது. ‘ஊதியத்துடன் கூடிய மகப்பேறுகால விடுப்பு கட்டாயம்’ என்ற சட்டம் வந்தபிறகு விழிப்பு உணர்வுடன் படித்த பெண்கள் தங்கள் உரிமையைக் கேட்டுப் பெறுகிறார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக ஒரு பெண் பணியாளரின் கர்ப்பம் கலைந்துபோகும் சூழலிலும் அவருக்கு நான்கு வாரங்கள்வரை ஊதியத்துடன்கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை பற்றிப் பெண்கள் பலருக்கும் தெரியவில்லை. தெரிந்திருந்தாலும், பல நிறுவனங்களில் அதை அனுமதிப்பதில்லை. இதனால் பெண்கள் பலர் உடல்நலப் பாதிப்புகளுடன் வேலை செய்யும் சூழல் உண்டாகிறது.

குழந்தை தொடர்பான பொறுப்புகள்

பச்சிளம்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களுக்கு, அலுவல் நேரம் மிகுந்த சிரமங்கள் தருகிறது. காலை ஒன்பது மணிக்குப் பணிக்கு வரும் பெண்கள் பலரும், நடுவில் சில நிமிட பிரேக் மற்றும் மதிய உணவு இடைவேளையைத் தவிர, நேரத்தை வீண் செய்வதில்லை. வீட்டில் காத்திருக்கும் குழந்தைக்காகத் தன் பணியை நேரத்துக்குள் முடித்துச் சரியாக மாலை ஆறு மணிக்குக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், `ஆறு மணியானால் கிளம்பிடுவாங்க. அதிக நேரம் பணி செய்யக்கூடிய கஷ்டமான புராஜெக்ட்டை இவங்க எப்படிச் செய் வாங்க?’ என்று பேசும் சக ஆண் ஊழியர்கள் அவர்களின் உழைப்புக்கான அங்கீகாரத்தைத் தடுப்பது நடக்கிறது. அதனால் மகப்பேறு, மாதவிலக்கு, குழந்தை, குடும்பம் என பல சவால்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு பெண்களால் சளைக்காமல் பணிசெய்ய முடியும் என்பது கண்கூடு” என்கிறார் விஜி ஹரி.

குடும்பத்தினர் ஒத்துழைப்பு முக்கியம்

நெல் மேத்யூ, சென்னையிலுள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி. பெண்களின் பணியிடச் சவால்களை அவர்கள் கடப்பதில், குடும்பத்தின் ஒத்துழைப்பும் முக்கியம் என்கிறார். “ஹெச்.ஆர் அதிகாரியாக இருபதாண்டுகளுக்கு முன்பு பணியைத் தொடங்கி, பணிச்சூழலில் நானும் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டு இப்போது உயர் பொறுப்புக்கு வந்திருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் சில ஆண்டுகள் வேலைசெய்த அனுபவம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் சூழலில்தான், அடுத்த நிறுவனத்தில் நல்ல ஊதியத்துடன் பணிக்குச் செல்ல முடியும் என்கிற நிலை இருக்கும். அதைப் புரிந்துகொள்ளாமல் சில குடும்பத்தினர் பெண்களிடம், ‘பிரச்னை என்றால் வேறு நிறுவனத்துக்குப் போக வேண்டியதுதானே?’, ‘நீ வேலைக்குப் போகாதே’ என்றெல்லாம் சொல்வார்கள். இதனால் இருபதாண்டுகளுக்கு முன்பு பணியிடப் பிரச்னை எதுவாக இருந்தாலும் அதை வெளிப்படையாக குடும்பத்தாரிடம் சொல்ல பெரும்பாலான பெண்கள் தயங்கும் நிலை இருந்தது. ஆனால், இன்றைக்குப் பணிக்குச் செல்லும் பெண்கள் மிகவும் தைரியமிக்கவர்களாக மாறியிருக்கிறார்கள். குடும்பத்திலும் அவர்களுக்கான சப்போர்ட் சிஸ்டம் அதிகரித்துள்ளது. இதனால் தங்கள் பிரச்னைகளை எளிதாகச் சரிசெய்துகொள்ள முடிகிறது. என்றாலும், சில வீடுகளில் நிலைமை இன்னும் மாறவில்லை. அவர்களின் மனமாற்றமும் ஆதரவும், பெண்களின் பணியிட முன்னேற்றத்துக்குத் தேவையான காரணிகளில் முக்கியமான ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

15-20 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.டி துறையில்

7:1 என இருந்த ஆண் பெண் பணியாளர்கள் விகிதம்,  இன்றைக்கு 4:1 என மாறியிருக்கிறது. பல்லாயிரம் ஊழியர்கள் வேலைசெய்யும் எங்கள் நிறுவனத்திலேயே என்னைப்போல பல பெண் ஹெச்.ஆர் இருக்கிறார்கள். படிப்பு மற்றும் திறமையுள்ளவர்கள், பாலினம் கடந்து நல்ல பதவி மற்றும் சம்பளத்துடன் வேலைசெய்யும் சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. அதேபோல, பாகுபாடு இல்லாமல் இருபாலருக்கும் இரவுப் பணி வழங்கப்படுகிறது. அடிக்கடி வெளியூர் மீட்டிங், லேட் நைட் பணி, பலருடன் வேலை விஷயம் சார்ந்து பழகுவது உள்ளிட்ட விஷயங்கள் வேலைக்குச் செல்லும் பெண்களால் தவிர்க்க இயலாதவை. அச்சூழல்களை அப்பெண்ணின் வீட்டிலுள்ள பெரியவர்கள் மற்றும் கணவர் புரிந்துகொண்டால் பிரச்னைகள் தவிர்க்கப்படும். இல்லையெனில், குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு வேலைசெய்வது பெண்களுக்குப் பெரிய சவாலாகிவிடும்’’ என்கிறார் நெல் மேத்யூ.

முன்னேறுவோம்!

‘`மொத்தத்தில், பணிக்குச் செல்லும் பெண்களின் பிரச்னைகள் எல்லாம் அவர்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துமே தவிர, தடுத்து நிறுத்த முடியாது. அந்தத் தாமதத்துக்கு வாய்ப்பு தராமல் அத்தனை சிக்கல்களையும் தகர்த்தெறிந்துவிட்டு விறுவிறுவென முன்னேறும் பெண்களையும் நாம் பார்க்கிறோம். பெண்கள், தங்கள் மீதான பலமுனைத் தாக்குதல்களைத் தட்டிக்கேட்டால்…  பழிவாங்கல், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வில் கைவைப்பார்கள் என அஞ்சுவதைத் தவிர்த்து, தைரியத்துடன் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும். அப்படி 40 வயதுகளில் நல்ல பதவிக்கு வந்தடைந்த பிறகு, பெண்களுக்கு வரும் பிரச்னைகள் குறைய ஆரம்பித்துவிடும். இடைப்பட்ட 15 – 20 ஆண்டுகால பணிச்சூழலை தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இன்று கல்லூரிப் படிப்பை முடிக்கும் ஆண் பெண் விகிதம் இணையாக இருக்கிறது. என்றாலும், வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிதம் 4:1 என்ற நிலையிலேயே இருக்கிறது. இது அதிகரிக்க வேண்டும். நிகழ்த்துவோம்’’ என்கிறார் விஜி ஹரி.

Leave a Reply

%d bloggers like this: