தாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்? என்ன காரணம்?

அன்னை தாய்ப்பால் கொடுக்கும் பொழுது, குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை நித்திரை கொள்ள ஆரம்பித்து விடும்; அதுவும் தாயின் மார்பகத்தில் வாய் வைத்து பால் குடிக்க ஆரம்பித்த உடன் சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை உறக்கத்தில் மூழ்கி கனவுகளில் மிதக்கத் தொடங்கி விடும். இவ்வாறு அடிக்கடி உறங்குவதால்,

குழந்தையால் சரியாக பால் அருந்த முடியாது; இதன் விளைவு குழந்தையின் உடல் எடை மற்றும் வளர்ச்சியில் குறைபாடு உண்டாகும். மேலும் தாய்க்கும் குழந்தை முழுமையாக பால் அருந்திய திருப்தி ஏற்படாது.

எனவே, குழந்தைகள் பால் குடிக்கும் பொழுது ஏன் உறங்குகின்றன, அதற்கு என்ன காரணம் என்று தாய்மார்கள் அறிந்து, அதை நிவர்த்தி செய்ய முயற்சிப்பது அவசியம். இந்த விஷயத்தில் தாய்மார்களுக்கு உதவவே இந்த பதிப்பு, [படித்து பயனடையுங்கள் தாய்மார்களே!

பசி பறந்தது

குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது, தனக்கு போதுமான பாலை சரியான கால அளவில் குடித்து முடித்து விட்டால், வயிறு நிரம்பிய உணர்வின் காரணமாக குழந்தை உறங்கத் தொடங்கிவிடும். மேலும் குழந்தை நிஜமாகவே வயிறு நிரம்பியதால் தான் உறங்கியதா என்பதை தாயானவள் குழந்தையின் வயிற்றை தொட்டுப்பார்த்து கண்டறிந்து கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் பொழுது குழந்தைகள் உறங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்களின் பசி அடங்கி விட்டிருப்பது அல்லது அவர்களின் பசி போக்கப் பட்டிருப்பது தான்.

சரியாக பொருந்தாதது

குழந்தையை மார்பினுள் ஏனோதானோ என்று நுழைத்து விட்டு, அது சரியாக பால் குடிக்கிறதா இல்லையா என்று சோதித்து அறியாமல், தாய்மார்கள் எனக்கென்ன என்று இருந்து விட்டால், அது மோசமான பலனை நல்கும்; இம்மாதிரியான நேரங்களில் குழந்தைகள் தாயின் மார்பகத்தில் இருக்கும் முலைக்காம்பை சரியாக அடையாளம் கண்டு அறிந்திருக்க மாட்டார்கள்; தாய்மார்கள் இவ்வாறு கவனிக்காது விட்டு விட்டால் குழந்தை பால் அருந்தாமல் வளர்ச்சி குன்றி, நோய் எதிர்ப்பு சக்தியே இன்றி வளரும் அபாயம் ஏற்படலாம்.

குழந்தையை மார்பகத்திற்குள் நுழைத்துவிட்டு, அது சரியாக மார்பின் முலைக்காம்பை பற்றாமல் இருந்தால் குழந்தை பால் குடித்திருக்காது; அன்னை ஆடையை மறைத்து பால் கொடுப்பதால், அந்த இருட்டில் குழந்தை பேசாமல், பால் குடிக்காமல் செவேனென்று உறங்கி விடும்.

எனவே, தாய்மார்கள் குழந்தை பிறந்த கணம் முதல் குழந்தையை சரியாக தூக்கி, அதன் வாயை மார்பகங்களின் முலைக்காம்பில் மிகச்சரியாக பொருத்தி, அது பால் குடிக்கிறதா இல்லையா என்பதை கவனிக்க வேண்டும். குழந்தை பால் குடிக்கும் நேரம் முழுதும் தாய்மார்களின் கவனம் குழந்தையின் மீது மட்டுமே இருந்தால் மிகவும் நல்லது.

குழந்தையின் எடை

குழந்தை பிறந்த பொழுது இருந்த எடையை விட பிறந்த சில நாட்களில் அதன் எடை சற்று குறைந்துவிடும்; ஆனால் சரியான இடைவெளியில் போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்து வந்தால், குழந்தைகள் ஆரோக்கியமாக சரியான எடையுடன் திகழ்வர். குழந்தைகள் பால் குடிக்கும் பொழுது உறங்கினால், இந்த சரியான எடையை எட்டுவது என்பது கடினம்.

மேலும் சில தாய்மார்களுக்கு குழந்தையின் எடையில் வித்தியாசம் காண முடியாது விட்டு, பின் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால், சோர்ந்த உடல் அமைப்பு மற்றும் இயக்கம் காரணமாக குழந்தைகளால் சரியாக பால் குடிக்க முடியாது, இதனால் அவர்கள் உடனேயே தூங்கி விடுவர். ஆகையால், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருந்து, குழந்தைகளையே கவனித்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

உடல் வெளிப்பாடுகள்

உங்கள் குழந்தை சரியாக தாய்ப்பால் அருந்தி ஆரோக்கியமாக இருந்தால், கண்டிப்பாக ஒரு நாளைக்கு 3 முறை மலம் கழிக்கும்; மேலும் ஆறு முறையாவது சிறுநீர் கழித்து டையப்பர்களை ஈரமாக்கி விடும். ஒரு நாளைக்கு புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு 8-14 முறைகள் தாய்ப்பால் அளிக்க வேண்டும். முன்னர் கூறியது போல், குழந்தை பிறக்கும் போது இருந்த எடையை விட, பிறந்த சிறிது நாட்களில் குழந்தையின் எடை குறைவாக இருக்கும்; ஆனால், இது ஓரிரு வாரத்தில் சரியாகி குழந்தையின் எடை அதிகரிக்க வேண்டும்.

தூங்கிய குழந்தையை எழுப்புவது எப்படி?

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுதே தூங்கி விட்டால், அதன் வயிறு நிறைந்திருக்கிறதா என்று சோதித்து அறியுங்கள்; அப்படி நிறையவில்லை எனில் தூங்கும் குழந்தையை மெதுவாக எழுப்பி விட வேண்டும். குழந்தையை எழுப்ப கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றலாம்:

குழந்தையின் முதுகை மெதுவாக தட்டிக்கொடுத்து எழுப்ப முயலலாம்.

குழந்தையின் ஆடைகளை நீக்கி விட்டு, வேற்று தேகத்துடன் இருக்க செய்தால், நீங்கள் ஆடைகளை களையும் பொழுதே குழந்தை முழித்து விடும்.

குழந்தையின் உடல் உறுப்புகளில் மெதுவாக குசு சத்தம் வெளிப்படும் வகையில் ஊதி, குழந்தையை எழுப்பலாம்.

குழந்தையின் கால் அல்லது கைகளில் உள்ளங்கால் மற்றும் உள்ளங்கையில் மிருதுவாக கிச்சு கிச்சு காட்டி எழுப்பலாம்.

குழந்தைகளின் டையப்பரை மாற்றி விடுவது போல், அதை சற்று தொந்தரவு செய்து, குழந்தையின் தூக்கத்தை துரத்தலாம்.

குழந்தை பால் குடிக்கும் போது தூங்கி விட்டால், அதனை ஒரு மார்பகத்திலிருந்து மற்ற மார்பகத்திற்கு மாற்றி, அந்த முலைக்காம்பை பற்றிக்கொள்ள செய்ய முயற்சிக்கலாம்; இந்த முயற்சியின் பொழுது கண்டிப்பாக குழந்தையின் தூக்கம் கலைந்துவிடும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த பதிப்பில் படித்த அனைத்து விஷயங்களையும் நினைவில் கொண்டு, குழந்தையின் செய்கைகளை கூர்ந்து கவனித்து, அவர்களின் ஆரோக்கியம் காக்க பாடுபட வேண்டும். நீங்கள் படித்த செய்தி மற்ற அன்னைகளுக்கும் பயன்பட இந்த பதிப்பை பரப்பி உதவுவீராக!

Leave a Reply

%d bloggers like this: