வளைக்கும் மோசடிகள்… தப்புவது எப்படி?

செபி மற்றும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது மக்களை எச்சரித்து வந்தாலும்,  பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதையாக உள்ளது. விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் வங்கிகளைக் குறிவைத்து மொத்தமாகப் பணத்தை வாரிச் சென்றதைப் பார்த்தோம். இந்த வகை மோசடிகளைத் தவிர்க்க நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை.

சீனியர் சிட்டிசன்களை குறி வைத்து…


வருமானப் பற்றாக்குறையால், எந்த வழியிலாவது வருமானத்தை அதிகரிக்க முடியுமா என்று தவிக்கும் மக்களை தங்கள் வலைகளில் வீழ்த்துவதும், அதிலும், பணி ஓய்வு நிதிகளைப் பெற்ற சீனியர் சிட்டிசன்களை குறி வைப்பதும் வெற்றிகரமாக நடக்கின்றன. இவற்றில் இருந்து தப்புவது எப்படி?
வரிசைகட்டும் மோசடி திட்டங்கள்!
தேக்கு மரத் திட்டம், ஈமு கோழித் திட்டம், பண்ணைத் தோட்டத் திட்டம் (Farmland Scheme), இ-மெயில் அறிவிப்பில் கோடிக்கணக்காகப் பணம் தருவதாக ஆசை காட்டிய திட்டம் – இவற்றின் மோசடி மக்களுக்குப் புரிந்துவிட்டது.
இந்த வரிசையில் ஸ்பீக் ஏசியா என்ற திட்டத்தில் ரூபாய் 11,000 கட்டி மெம்பர் ஆகும்பட்சத்தில், மாதம் 4,000 ரூபாய் வருமானம் பெற்றுத் தருவதாகவும், அதற்கு 8 சர்வேக்களில் பங்கெடுத்தால் போதும் என்றும், புதிய மெம்பர்களைச் சேர்ப்பவர்களுக்கு தனி வெகுமதி என்றும் விளம்பரம் செய்து மொத்தமாகச் சுருட்டிய தொகை ரூ.2,276 கோடி எனச் சொல்லப்படுகிறது.
சிட்டி லிமோஸின் திட்டத்தில் 97,000 ரூபாய் கட்டுபவர்கள் பெயரில் கார் வாங்கி, அதை வாடகைக்கு விட்டு, மாதம் ரூ.4,000 தருவதாகவும் (வட்டி விகிதம் 49%), புது மெம்பர்களை அறிமுகம் செய்வோருக்கு ஸ்பெஷல் பரிசு என்றும் அறிவித்ததில் மக்கள் ஏமாந்தது   ரூ.1,000 கோடி. அபினவ் கோல்ட் திட்டத்தில் 6,000 ரூபாய் கட்டுவோருக்கு இரண்டு வருடங்கள் கழித்து ரூ.1.72 லட்சம் தருவதாக அறிவித்தபோது, இது சாத்தியமா என்றுகூட யோசிக்காமல் இறங்கி ஏமாந்தவர்கள் ஏராளம்.

தமிழ்நாட்டில்..!
இந்த வகை திட்டங்கள் தமிழ்நாட்டில் கூட சிற்றூர்களிலும், நகரங்களிலும் பெரும் அளவில் வெற்றி பெற்றது. பொன்ஸி திட்டங்களை நடத்துபவர்கள் 25 அல்லது 30 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கும் என்பார்கள். மக்கள் கட்டும் தொகையை வைத்தே சில மாதங்களுக்கு அவர்களுக்கு வட்டி தந்துவிட்டு, வியாபாரம் பெருகியதும் கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டு மறைந்துவிடுவார்கள்.
செபி, ரிசர்வ் வங்கி, ஐ.ஆர்.டி.ஏ.ஐ போன்ற அரசு கண்காணிப்பாளர்கள் இவ்வகையான மோசடிகளைக் கட்டுப்படுத்த இயலாது என்பது நிதர்சனம். உயர் நீதிமன்ற ஆணைக்குப் பிறகும், சஹாரா இந்தியா நிறுவனம் 24,000 கோடி ரூபாயை மக்களுக்குத் தராமல் இழுத்தடித்து வருகிறது. அதன் சேர்மன் சுப்ரதோ ராய் இரண்டு வருடங்களுக்கு முன்பே பரோலில் வெளிவந்துவிட்டார். நடுத்தர மக்களின் சேமிப்பை விழுங்கிய சாரதா குழுமத்தின் சிட் ஃபண்ட் தில்லுமுல்லு கூட இன்னும் தீர்க்கப்படாமல்தான் இருக்கிறது.
ஷேர் திட்டங்கள்
விடுமுறை காலத்தை அனுபவிக்க உதவும், டைம்ஷேர் திட்டங்களும் மக்களை சுரண்டும் முயற்சியில் ஈடுபடுகின்றன. எல்லா டைம் ஷேர் களுமே தவறு என்று கூறிவிட முடியாது. சில டைம் ஷேர் விற்பனையாளர்கள் ஐந்து அல்லது 10 வருடங்களுக்கே ஒப்பந்தம் என்று நம்பவைத்து வாழ்நாள் முழுவதற்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெறுகின்றனர்.
இரண்டாவது அதிர்ச்சி- உபயோகிக்கிறோமோ, இல்லையோ வாழ்நாள் முழுவதும் வருடா வருடம் பராமரிப்புக் கட்டணம் சுமார் ரூ.7,000 கட்டவேண்டும் என்பது. இந்த வலைக்குள் விழுந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம்.
ஃப்ரீ டிரையல் (Free trial) எனப்படும் கட்டணமில்லா பயன்பாடுகூட சில சமயம் பண இழப்புக்கு காரணமாகி விடுகிறது. இந்தப் பயன்பாட்டைப் பெற ஒருவரது பெயர், அட்ரஸ், கிரெடிட் கார்டு நம்பர் எல்லாம் கொடுக்க வேண்டும். ஃப்ரீ டிரையல் காலம் முடிந்ததும் ஞாபகமாக அதை வேண்டாம் என்று பதிவிட வேண்டும்.  வேலை மும்முரத்தில் மறந்துவிட்டால் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை நம் கிரெடிட் கார்டிலிருந்து அந்தக் கம்பெனிக்குப் போய்விடும்.

முதல் தேவை விழிப்பு உணர்வு 
இப்படியான சவால்களை எதிர்கொள்ள முதல் தேவை விழிப்பு உணர்வு. பணவளக்கலை என்பது எளிதானதல்ல. அதற்கு நேரமும், பொறுமையும் அவசியம். முக்கியமாக உணர்வுகளுக்கு இடம் தராமல், அறிவைப் பயன்படுத்த வேண்டும்.
ஏமாற நேரும்பட்சத்தில் எந்த  அரசுக் கண்காணிப்பாளரும் உடனே உதவிக்கு வர இயலாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஒரு திட்டம் மிகுந்த கவர்ச்சி அம்சங்களுடன் ஈர்க்கிறது என்றதுமே உஷாராக வேண்டும். நம்பமுடியாத அளவு கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பாமல் இருப்பதே நல்லது.
புரியாத முதலீட்டில் இறங்குவது தவறு
ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் அதைப் பற்றிய முழுத் தகவல்களையும் அறிய வேண்டும். புரியாத முதலீட்டில் இறங்குவது தவறு.
வாரன் பஃபெட் சொல்வதுபோல முதலீடு என்பது எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும், வெளிப்படையாகவும் (transparent) இருக்கவேண்டும். வெளிப்படைத் தன்மை இல்லாத திட்டங்களில் முதலீட்டை தவிர்க்க வேண்டியது அவசியம்.
வெறும் வாய் வார்த்தைகளை நம்பி இறங்காமல், எல்லாமே எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். அதைப் பொறுமையாகப் படிக்கவும் வேண்டும்.
நல்ல வருமானம் பெறுவது சிரமம்; வருமானத்தில் சேமிப்பது அதிலும் சிரமம்; சேமித்ததைப் பெருக்குவது இன்னும் சிரமம்.  இப்படி எல்லா சிரமங்களையும் தாண்டி நாம் அடைந்த செல்வத்தைக் காப்பது நம் கையில்தான் இருக்கிறது. மேற்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி மோசடி வலைகளில் விழாமல் நம் பணத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும்.


மாயைக்கு மயங்காதீர்கள்!
மக்களின் பேராசை மற்றும் பயம் போன்ற உணர்வுகளைத் தூண்டி, விற்பனையைப் பெருக்குகிறவர்கள் “இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் பிறகு கிடைக்காது” என்பது போலவும், “இந்தப் பொருள் இல்லாவிட்டால் வாழ்க்கையே வேஸ்ட்” என்பது போலவும் மாயையை உருவாக்குவதில் வல்லவர்கள்.  நம் மூளை நன்கு செயல்பட்டு அந்தப் பொருளின் நன்மை, தீமைகளை எடை போடும் முன்பே விற்பனையை முடித்து விடும் அளவுக்கு திறன் வாய்ந்த சேல்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இப்படி யாராவது நம் சிந்தனையைக் கட்டுப்படுத்தி, உணர்வுகளைத் தூண்டி, விற்க முயன்றால் அந்தப் பொருளைத் தவிர்ப்பது நன்று. “போனால் வராது” என்று அவசரப்படுத்தினால், “போகட்டும்” என்று விட்டு விடுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: