மனநோய் ஏற்பட என்ன காரணம்

தனிமையை விரும்புபவர் மன நோயாளியா?
தனிமை அல்லது பலருடன் கலகலப்பாக பேசுவது போன்ற குணாதிசயம் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. இளமை பருவத்தில் சிலருக்கு தனிமை பிடிக்கும். தனிமையை விரும்புவதால் மனநோயாளிகள் அல்ல. எனினும் மனநலம் பாதித்தவர் தன்னால் பிறர் போல் சஜகமாக பழக முடியவில்லை. நாம் சொல்வது பிறருக்கு புரியவில்லையே, என கருதி தனிமையை விரும்புவார். தனிமையை விரும்புவதற்கும், மன நோய்க்கும் சம்பந்தமில்லை.
மன நோயாளி ஒருவர் தியானம், யோகா பயிற்சியில் ஈடுபட்டால் நோய் குறையுமா?


மன நோயில் இருந்து முழுமையாக மீண்டவர், மன நோய் மீண்டும் வராமல் தடுக்க தியானம் மேற்கொள்ளலாம். இதனால் மனக் கட்டுப்பாடு அதிகரிக்கும். மன நோயாளி ஒருவரால் தியானம், யோகா செய்ய இயலாது. அவரது மனம் ஓரிடத்தில் இருக்காது; அலைபாய்ந்து கொண்டிருக்கும். மன நோயில் இருந்து மீண்டவருக்கே தியானம், யோகா சாத்தியம்.
மன நோய் ஏற்பட தனிப்பட்ட காரணம் உண்டா?
மனநோய் பல தரப்பட்டது. மரபணு, பரம்பரை, மூளைக்காய்ச்சல், மூளை வளர்ச்சி குறைபாடு, போதை மருந்து, தலைக்காயம், உடல் ரீதியாக, வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் மூளை செயல்பாடு குறைந்து மன நோய் ஏற்படும். முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் மன நோயில் இருந்து முழுமையாக விடுபடலாம். காய்ச்சல், தலைவலி போல் மன நோய் என்பதும் ஒரு நோய் தான்.
இதற்காக ரகசியமாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தானாகவோ, பிறர் உதவியுடனோ உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம். மன நோய்க்கு துவக்க நிலையில் சிகிச்சை எடுப்பது மிகுந்த பயனளிக்கும்.
துாக்கத்துக்காக மது, துாக்க மாத்திரை உட்கொள்ளலாமா?
மது அருந்துவது எவ்வகையிலும் நல்லதல்ல. சிறிதளவு மதுவும் உடலுக்கு தீங்கு தான் விளைவிக்கும், என விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. மன நோயாளிக்கு துாக்கம் வராது. பொதுவாக இயற்கையாகவே பசி, தாகம் எடுப்பது போல் இரவில் துாக்கமும் வந்துவிடும். துாக்கமே வரா விட்டாலும் ஓரிரு நாளில் துாக்கம் கட்டாயம் வரும். நோய் வாய்ப்பட்ட சிலருக்கு டாக்டர் பரிந்துரைப்படி ஓரிரு நாட்களுக்கு துாக்க மாத்திரை வழங்குவது வழக்கம். பின் தாமாகவே டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை பயன்படுத்தி துாக்க மாத்திரை வாங்கி உட்கொள்வது கூடாது. துாக்கம் வருவதற்காக தினமும் துாக்க மாத்திரை உட்கொள்ளக்கூடாது. அதுவே நோயாகி விடும்.
– டி.குமணன்
மன நல மருத்துவ நிபுணர், மதுரை

Leave a Reply

%d bloggers like this: