விளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை

விவசாயம் குறைகிறது, தண்ணீர் பற்றாக்குறை என்றெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இனி உணவு உற்பத்தி இல்லாமல் மனித குலம் எப்படி வாழும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். மிகவும் தீவிரமான இந்த பிரச்னையை விஞ்ஞானம் வேறு ஒரு கோணத்தில் அணுகுகிறது. பிரச்னை என்ன…. மனிதனுக்கு உணவு வேண்டும்… அவ்வளவுதானே…. விளைநிலங்களில்தான் உணவு உற்பத்தியாக வேண்டுமா? ஆய்வுக்கூடங்களிலும் அதே சத்தூட்டங்கள் கொண்ட உணவை தயார் செய்துவிட முடியாதா என்ற கேள்வியோடு வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஏற்கெனவே நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கணிசமான உணவுகள் ஆய்வகங்களில் வடிவமைக்கப்பட்டு, தொழிற்சாலைகளில் தயாராகி வருபவைதான். பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், சப்ளிமென்டுகள், சத்து மாத்திரைகள், துரித உணவுகள் என பல்வேறு உணவுகள் இயற்கையாக உருவாகாதவைதான். இன்னும் சொல்லப் போனால் காய்கறிகள், பழங்களைக் கூட மரபணு மாற்றம் செய்து தங்கள் விருப்பத்துக்கேற்றவாறு விளைவிக்க இன்று முடிகிறது.

எனவே, இனி எல்லாமே சாத்தியம்தான். எல்லாமே மாற்றத்துக்குட்பட்டதுதான் என்று நம்பிக்கையோடு களம் இறங்கியிருக்கிறார்கள்.  இந்த ஆராய்ச்சியில் இரண்டு முக்கியமான மைல் கல்களையும் அடைந்திருக்கிறார்கள். சுவையும், சத்தும் மிக்க இறைச்சியை ஆய்வகங்களில் உற்பத்தி செய்யும் முயற்சி வெற்றி அடைந்திருக்கிறது. அதேபோல், அரிசியை ஆய்வகத்தில் தயார் செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் பெற்று வைத்திருக்கிறது. உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜிடம் இதுபற்றிப் பேசினோம்…

‘‘மனிதன் உயிர்வாழத் தேவையான உணவின் பரிணாம வளர்ச்சியானது ஆண், விலங்குகளை வேட்டையாடி கொண்டுவருவதும் பெண் அருகிலுள்ள தாவரங்களிலிருந்து காய், கனிகளை பறித்துக் கொண்டு வந்து அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உண்பதுமாக ஆதிமனிதனாக இருந்த காலம் தொட்டு தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமுதாயத்திலும், ஒவ்வொரு குழுவிலும் அதனதன் சொந்த கலாச்சாரம், விழாக்களை சார்ந்து உணவு சமைக்கும் முறைகளில் காலப்போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தற்போது, 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நேரத்தை மி்ச்சப்படுத்தவும், ஆரோக்கியத்தின் மீதான அக்கறை செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் எதிலும் புதுமை, புதுப்புது தொழில்நுட்பங்கள் என தேடலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். உணவு விஷயத்தில் தற்போது நாம் கொண்டுள்ள அதீத கவனத்தின் காரணமாக எதிர்கால உணவு நுகர்வில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போவது உறுதி. அதன் ஆரம்பகட்ட செய்திகள்தான் இவையெல்லாம்.

தற்போது, உலக நாடுகள் பலவற்றிலும், உணவு உருவாக்கத்தில் எல்லைகளைத் தாண்டிய சவால்களை சந்திப்பதற்கும் மற்றும் பல்வேறு துறைகளுடன் இணைவதற்குமான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக, உணவு உற்பத்தியில் முன்னேற்றம் அடைந்துள்ள வேதியியல் மற்றும் இயற்பியல் எல்லைகளுக்குட்பட்ட Gastronomy  துறையை குறிப்பிட்டுச் சொல்லலாம். உணவு மற்றும் கலாச்சாரத்திற்கான உறவு, குறிப்பிட்ட பகுதிகளின் சமையல் பாணிகள் மற்றும் நல்ல உணவின் அறிவியல் ஆய்வே Gastronomy ஆகும்.

யார் கண்டார்கள்? நாம் சாப்பிடும் உணவு. ஆய்வகத்தில் உருவானதோ அல்லது பொறியியல் முறைப்படி தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கலாம். ஒருவேளை, உணவு தயாரிப்பதற்கு நேரத்தை செலவிட விரும்பாத பெண்கள் வீட்டிலேயே 3D தொழில்நுட்பத்தில் உணவை அச்சிடும் நிலைகூட வரலாம். மருத்துவத்துறையிலும் மற்ற பிற துறைகளிலும் நுழைந்துள்ள 3D தொழில் நுட்பம் உணவுத் தயாரிப்பிலும் வந்தேவிட்டது. 3D அச்சுப்பொறியின் தலைப் பகுதியில் இருக்கும் சூடான துளையில் உணவின் மூலப் பொருட்கள் நிரப்பிய கேட்ரட்ஜ்களை பொருத்தி அச்செடுத்துவிடலாம்.

பீட்சா, கேக், சாக்லேட் என நாம் விரும்பிய எந்த உணவுப் பண்டத்தையும் ஃப்ரெஷ்ஷாக மென்பொருள் உதவியோடு அச்செடுத்துவிட முடியும். இதற்கு உதாரணம் நாசா கண்டுபிடித்துள்ள உணவு பிரிண்டர் அச்சிடப்பட்ட 70 வினாடிகளில் சுடச்சுட ஒரு மெல்லிய பீட்சாவை அச்சிட்டுள்ளது. உலகில் பாதிப்பேர் உடல்பருமனால் நோய்களுக்கு ஆளாவதும், மீதி பாதிப்பேர் பசிக்கு எதிராக போராடுவதும் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. ஏழை நாடுகளில் இருக்கும் பலகோடி குழந்தைகளும் மக்களும் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது உலகறிந்த விஷயம்.

வளர்ந்த நாடுகளிலிருந்து ஏழ்மை நாடுகளுக்கு உணவு வழங்குவது போன்ற உணவு பாதுகாப்பு முறைகளால் தற்போது ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஏற்படும் இறப்புகள் குறைந்து கொண்டு வந்தாலும், இந்த விஷயத்தில் தொழில்நுட்பம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. தற்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது. அதுதான் ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள்.

புகழ்பெற்ற மேயோகிளினிக்கின் முக்கிய இதயநோய் நிபுணரும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனில் தலைமைப் பொறுப்பில் உள்ளவருமான விஜயவாடாவைச் சார்ந்த இந்தியரான உமாவேலட்டி தன்னுடைய ஆய்வகத்தில் விலங்குகளின் ஸ்டெம் செல்லில் இருந்து சுத்தமான மாமிசத்தை உருவாக்கியுள்ளார். சுற்றுச்சூழலைப் பாதிக்காத மற்றும் மிருகவதையிலிருந்து விலங்குகளை பாதுகாக்கும் இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

‘விலங்கின் ஸ்டெம் செல்லிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த மாமிசம் 100 சதவீதம் சுத்தமானது என்பதால் தன்னுடைய இந்த ஆய்வை மற்ற உணவுப் பொருட்களிலும் தொடரப் போவதாகவும், எதிர்காலத்தில் உணவு மேஜையில் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட உணவுப்பொருட்களே இருக்கும்’ என்றும் வேலட்டி உறுதியளிக்கிறார். இவருடைய Clean meat technology மூலம் உருவாகும் மாமிச தயாரிப்பு நிறுவனமான Memphis இப்போது அமெரிக்காவில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. 

சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வுக்குழு ஒன்று வீகன் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. அவை ஈஸ்ட் செல்களை மினியேச்சர் பால் புரோட்டீன் ஆலைகளுக்கு மாற்றியமைக்கின்றன. இந்த உணவில் இருக்கும் புரதம் விலங்குகளிடமிருந்து நேரிடையாக பெறப்படாமல், ஈஸ்ட் செல்களை நேரிடையாக ஆய்வகங்களில் உருவாக்குவதன் மூலம் புரதச்சத்துமிக்க பால், சீஸ் போன்ற பால் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அவர்களின் நோக்கம் தரமான சீஸ் தயாரிப்பதை விட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்குவதே.

எனினும், இது உண்மையான பால் சுவை மற்றும் ஊட்டச்சத்தை தக்கவைத்திருக்கிறது. மேலும் விலங்கிடமிருந்து பெறப்படும் பாலின் விலையை விட குறைவாகவும், உலக அளவில் பலருக்கு கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும். பால் உற்பத்தியின் மூலம் ஒவ்வொரு வருடமும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாயு உமிழ்வுகளின் அளவு 3 சதவீதம் அதிகரித்து வருவதையும், தேவைக்கேற்ற உற்பத்திப்பற்றாக்குறை இருப்பதையும் கருத்தில் கொண்டால், இதுபோன்ற கண்டுபிடிப்புகள் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பசுக்கள் புரதம் ஒவ்வாமை, முட்டை வெள்ளை புரதம் ஒவ்வாமை, லாக்டோஸ் சகிப்புத்தன்மை, பசையம் உணர்திறன், வேர்க்கடலை ஒவ்வாமை ஆகியவற்றால் உணவு சகிப்புத்தன்மை பிரச்னை உடையவர்களுக்கு ஃபுட் ஸ்கேனர் மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிலவகை நோய்களால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், அல்லது ஆரோக்கியமானவர்கள், என ஊட்டச்சத்து தேவைகள் ஒருவருக்கொருவர் மாறுபடும் என்பதால், நோயின் தீவிரத்தன்மையில் இருக்கும் ஒருவர் இந்த ஸ்கேனர் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாது.

அவர்கள் ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் பரிந்துரைக்கும் வழிகாட்டுதல்களையே பின்பற்ற வேண்டும். பாதுகாப்பற்ற உணவு சேர்க்கைகள் சேர்க்கப்படாததற்கான உத்திரவாதம் அல்லது அந்த உணவின் நச்சுத் தன்மையை அடையாளம் காண முடிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 3D தொழில்நுட்பத்தில் அச்சிடப்படும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்தின் நம்பகத்தன்மையை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. நமது அன்றாட உணவுப்பழக்கத்தில் புது கண்டுபிடிப்புகளை இணைப்பதுப்பற்றி தீர்மானிக்கும் அதேவேளையில் அவற்றை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

புதிய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் நமக்கு பல வாய்ப்புகளை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது மிகவும் நல்ல விஷயம். உதாரணத்திற்கு ஸ்மார்ட் சமையல் உபகரணங்களை எடுத்துக் கொள்ளலாம். விபத்தில் கைகளை இழந்தவர்கள், மற்றும் பக்கவாத நோயாளிகள், கவனிப்பாளர்களின் உதவியின்றி, தாங்களாகவே ஸ்மார்ட் ஸ்பூன், ஃபோர்க் மூலம் கை நடுக்கமின்றி சாப்பிட முடியும் என்பது உண்மையில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம்.தற்போது சாதாரணமாக நாம் பயன்படுத்தும், பிளாஸ்டிக், பீங்கான் போன்ற சமையல் பாத்திரங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில், உடல் பருமன், தொற்றா நோய்களான நீரிழிவு, இதய நோய், புற்றுநோய்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு காரணமான Endocrine Disrupters (ED) இருக்கிறது.

இந்த புற்றுநோய்களையும், வளர்சிதை மாற்ற ஒழுங்கின்மையையும் தடுக்கக்கூடிய, கடற்பாசி, பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் கப்புகளின் தயாரிப்பில் கவனம் செலுத்தவேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம். அடுத்ததாக, ஊட்டச்சத்து தொடர்பான ஆரோக்கிய பிரச்னைகள் தடுப்பு மற்றும் மேலான்மையில், நியூட்ரிஜெனோமிக்ஸ்’ நிச்சயம் நம்மை முன்னோக்கி எடுத்துச் செல்லும். குறிப்பாக ஒவ்வொருவரின் மரபணுக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு வழக்கமான நம் உணவு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!’’ என்கிறார்

Leave a Reply

%d bloggers like this: