வருமான வரிச் சேமிப்பு… இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஏன் சிறந்தது?

ங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) ஃபண்டில் முதலீடு செய்தால் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உண்டு. இந்த ஃபண்டில் போட்ட முதலீட்டை மூன்று ஆண்டுகள் வெளியில் எடுக்கமுடியாது. மாதம் குறைந்தபட்சமாக 500 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம்.

யாருக்கு ஏற்றது?

இந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால் வருமானம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சார்ந்திருக்கும்.

அந்த வகையில், முதலீட்டின்மீது ரிஸ்க் எடுக்க கூடியவர்களுக்கு ஏற்றதாக இந்த ஃபண்ட்  இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் இந்த ரிஸ்க் என்பது பரவலாக்கப்பட்டுவிடுகிறது.

இ.எல்.எஸ்.எஸ் செய்யப்பட்ட முதலீட்டை அதன் லாக்இன் பிரீயட் மூன்றாண்டுகள் முடிந்ததும் பெரும்பாலோர்  எடுத்துவிடுகிறார்கள்.  அது தேவை இல்லை. பணத்தை எடுக்கும்போது முதலீடு எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையறிந்து எடுப்பது அவசியம்.

 

நீங்கள் எடுக்க நினைக்கும்போது, முதலீட்டு மீதான வருமானம் குறைவாக இருந்தால் சந்தை ஏறும் வரை காத்திருந்து எடுப்பது லாபகரமாக இருக்கும். 

இந்த ஃபண்டில் செய்த முதலீட்டைக் குறைந்தபட்சம் 5 முதல் 8 ஆண்டுகளுக்காவது தொடர்ந்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

கவனத்தில் கொள்ளவேண்டிய 5 விஷயங்கள்

இந்த ஃபண்டில் ரிஸ்க்கைக் குறைக்க கீழ்க்கண்ட ஐந்து விஷயங்களை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாக உள்ளது.

1. தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரக்கூடிய பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டைத் தேர்வுசெய்து முதலீடு செய்யுங்கள்.

2. நீங்கள் தேர்வு செய்திருக்கும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் குறைந்த பட்சம் ஐந்து வருடங்களுக்கு மேல் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

3. முதலீட்டுக்குத் தேர்வு செய்யும் ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை குறைந்தது 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக இருக்க வேண்டும்.

4. கடந்த காலங்களில், தொடர்ந்து பல்வேறு கால கட்டங்களில் நல்ல வருமானம் தந்திருக்கவேண்டும்.

5. முதலீட்டை இரண்டு அல்லது மூன்று   இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது. இதன்மூலம் முதலீடு மீதான ரிஸ்க் குறைய வாய்ப்பிருக்கிறது.

இ.எல்.எஸ்.எஸ் : ஏன் சிறந்தது..?

1. குறைவான லாக்கின் பிரீயட்

பி.பி.எஃப்: 15 வருடங்கள், வங்கி எஃப்டி: 5 வருடங்கள், தேசிய சேமிப்புப் பத்திரம்: 5  வருடங்கள் என லாக்இன் காலம் உள்ளது.    இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் மட்டும் குறைவான லாக்இன் காலம் 3 ஆண்டுகளாக இருக்கிறது.

2. வருமானத்தை இடையில் குறைவான வரியுடன் பெறும் வாய்ப்பு
இந்தத் திட்டத்தில் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்திருக்கும்பட்சத்தில் இடையிடையே தரப்படும் டிவிடெண்டுக்கு 10 சதவிகித டிவிடெண்ட் விநியோக வரி பிடிக்கப்படும்.

இதர வரிச் சேமிப்புத் திட்டங்களில் (பி.பி.எஃப் தவிர்த்து) அந்தந்த நிதி ஆண்டில் சேரும் வருமானத்துக்கு அடிப்படை வருமான வரி வரம்புக்கு ஏற்ப அதிகபட்சம் 30% வரை வரி கட்ட வேண்டி வரும்.

 

அதிக வருமானத்துக்கு வாய்ப்பு

பி.பி.எஃப் : 8%, வங்கி டாக்ஸ் சேவிங் எஃப்டி: 6.5%, தேசிய சேமிப்பு பத்திரம்: 8% என தற்போதைய நிலையில் ஆண்டுக்கு வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கடந்த மூன்றாண்டு  காலத்தில் டாப் 10 இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் ஆண்டுக்கு 16% முதல் 23% வருமானம் கொடுத்திருக்கின்றன. இதுவே ஐந்தாண்டு காலத்தில் 17% முதல் 21% வருமானம் கொடுத்திருகின்றன. ஆரம்பம் முதல் 17% முதல் 25% வரை இந்த ஃபண்ட் மூலம் வருமானம் கிடைத்திருக்கிறது.

மேலேகண்ட வருமானங்களின்படி,  கிட்டத்தட்ட அனைத்துக் காலங்களிலும்       இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் இரட்டை இலக்கத்தில் நல்ல வருமானத்தைத்தான் சந்தித்திருக்கின்றன.

சந்தை இறங்கிய காலத்தில் நல்ல வருமானம்

அண்மைக் காலத்தில் சந்தை மிக அதிகமாக இறங்கியிருக்கும் நிலையிலும், இந்த ஃபண்ட் மூலமான வருமானம் மூன்றாண்டு காலத்திலும் இரட்டை இலக்க வருமானத்தைத் தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இ.எல்.எஸ்.எஸ் – டைவர்சிஃபைட் ஃபண்ட்

இந்த ஃபண்டில் ரிஸ்க் இருந்தாலும், அது நீண்ட காலத்தில் குறைக்கப்பட்டு விடுகிறது. காரணம், இந்த ஃபண்டின் முதலீட்டு கலவை (போர்ட்ஃபோலியோ) ஆகும். அடிப்படையில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஒரு டைவர்சிஃபைட் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது.

மேலும், இந்த ஃபண்டில் போட்ட பணத்தை முதலீட்டாளர்கள் மூன்றாண்டுகளுக்கு எடுக்க முடியாது என்பது இந்த ஃபண்டை நிர்வகிக்கும் நிதி மேலாளர்களுக்கு (ஃபண்ட் மேனேஜர்கள்)சாதகமான விஷயமாக இருக்கிறது. அதாவது, முதலீடு மூன்றாண்டுகளுக்கு வெளியேறாது என்பதால், முதலீடு வளர காலம் கிடைக்கிறது. அந்த வகையில்தான் இந்த ஃபண்ட் சிறப்பான வருமானத்தைக் கடந்த  காலங்களில் தந்திருக்கிறது எனலாம்.

வருமான வரி விவரங்கள்

இந்த ஃபண்ட் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட், வருமானம் மற்றும் நீண்ட கால ஆதாயத்துக்கு (லாங்க் டேர்ம் கேப்பிட்டல் கெயின்) கடந்த 2018 ஏப்ரல் மாதத்துக்கு முன்புவரை வருமான வரி எதுவும் இல்லாமல் இருந்தது. அதன்பிறகு இந்த ஃபண்டில் கொடுக்கப்படும் டிவிடெண்டுக்கு டிவிடெண்ட் விநியோக வரி 10% கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும். நீண்ட கால மூலதன ஆதாயம், நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்துக்கு மேற்படும்போது நிபந்தனைக்கு உட்பட்டு 10% வருமான வரிக் கட்ட வேண்டிவரும்.

ஒருவர் செய்திருக்கும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமான ஆதாயம் ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சத்தைத் தாண்டும்போது, இந்த 10% வரி கட்ட வேண்டும். எப்போது யூனிட்களை விற்று பணமாக்குகிறீர்களோ, அப்போதுதான் இந்த வரியைக் கட்ட வேண்டும் என்பது முதலீட்டாளர்களுக்குச் சாதகமான அம்சம்.

இந்த ஃபண்டில் பெரும்பாலும் மாதச் சம்பளம் வாங்கும் நபர்கள்தான் முதலீடு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

%d bloggers like this: