வீட்டுக் கடன்… இ.எம்.ஐ தொகையை மீட்டெடுக்கும் எஸ்.ஐ.பி ஃபார்முலா!

ன்றைய சூழலில், இ.எம்.ஐ எனும் மூன்றெழுத்தை  உச்சரிக்காதவர்கள் மிகக் குறைவு. அதைப் பயன்படுத்த விரும்பாத சம்பளக்காரர்களும்  மிகக் குறைவு. அந்த அளவுக்கு, நம் எதார்த்த வாழ்க்கையில் இயல்பான ஒன்றாகிவிட்டது இந்த இ.எம்.ஐ. 
இ.எம்.ஐ செலுத்துவது என்பதே ஒருவிதமான அவஸ்தைதான். வாங்கிய பொருளிற்கான இ.எம்.ஐ தொகையைச் செலுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் தொகை ஒதுக்குவதில் தொடங்கி, பணத்தைச் செலுத்தி முடிப்பது வரை எல்லோருக்கும் ஒரேமாதிரியான அனுபவம்தான் கிடைக்கிறது.

 

வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு மொபைல் கம்பெனிகள் அவ்வப்போது புது வரவாகக் கொண்டுவரும் விதவிதமான மொபைல் போன்களின் வசீகரத்தில் அல்லது தாராள விலைகுறைப்பில் மயங்கி, புது மொபைல் வாங்கும் எண்ணம் தோன்றும்போது அறிமுகமாகிறது இந்த  இ.எம்.ஐ.
அதேபோன்று, குடும்பஸ்தர்களுக்கு பெரிய திரை டிவிக்கு மாற விரும்பும் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம். அவர்களுக்கு    இ.எம்.ஐ பழக்கமாகிறது.
இப்படியாக இ.எம்.ஐ வழியாக, பொருள்கள் வாங்குவது அதிகரிக்க பொதுவாக, இரண்டு காரணங்கள்  இருக்கின்றன.  குறைந்த தவணை காலம் முற்றிலும்,   0% வட்டியில் கிடைக்கப்பெற்ற கடன் என்பதாகும்.
இதேபோல், நாளடைவில் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் என இ.எம்.ஐ மூலம் வீட்டிற்கு உபயோகமான பொருள்களை  ஒன்றன்பின் ஒன்றாக  வாங்கிச் சேர்க்கும் போது, இவ்வளவுதானோ இ.எம்.ஐ என சர்வ சாதாரணமாகிவிடுகிறது.

இப்படி பொருள்கள் வாங்கிச் சேர்ப்பது போல, வீட்டுக் கடன் மூலம் அபார்ட்மென்ட்டிலோ அல்லது தனி வீடோ வீட்டுக் கடன் மூலம் வாங்கலாம்;  அதற்கு இ.எம்.ஐ-ஆக செலுத்திவந்தால் அடுத்த இருபது வருடங்களில், அந்த வீடே, நமக்குச் சொந்தமாகிவிடும் என்கிற எண்ணம் 35 வயதில் எல்லோருக்குமே சுலபமாகத் தோன்றும்.
  ஆனால், அடுத்துவரும் அந்த இருபது வருடங்களுக்குள் குழந்தை களின் கல்விக்காக, அவர்களின் திருமணத்திற்காக மற்றும் எதிர்பாராத மருத்துவச் செலவுகளுக்காக என  சம்பாதித்த பணத்தையெல்லாம் பலவிதங்களில் செலவழித்திருப்போம்.
பணி ஓய்வுபெறும் நாளினை எதிர்பார்த்திருக்கும்  அந்தத் தருணங்களில், ஓய்வுபெற்ற பிறகு தினசரி  செலவுகளுக்கு கொஞ்சம்கூட பணத்தைச் சேர்க்கவில்லையே என்ற உண்மை நம்மைப் பயமுறுத்தும்.
அதேவேளையில் ஓய்வுபெறும்போது  கிடைக்கும் பணமும் முந்தைய கொடுக்கல் வாங்கலைச் சரிசெய்வதற்கே சரியாக இருக்கும்.
இந்தச் சூழ்நிலையில்தான் இ.எம்.ஐ மூலம் வாங்கிய சொந்த வீடு இருந்தும்கூட மனம் கலங்க ஆரம்பிக்கும்.
இந்த நிலை வந்ததற்கு வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டிற்காக, பல வருடங்களாகக் கட்டிய 9% முதல் 12% வரையிலான வீட்டுக் கடன் வட்டியும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கும்.   

சொந்தமாக வீடு வாங்கி, இ.எம்.ஐ செலுத்திய பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால் சிரமம் இல்லாமல் இருந்திருக்குமோ என்றுகூட பலரும் நினைக்கக்கூடும்.
வீடு ஒன்றைச் சொந்தமாக வாங்க  கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் பணத்தை 20 வருடங்களுக்குச் சராசரியாக 10% வட்டிவிகிதத்தில் வீட்டுக் கடனாகப் பெறுவதாக வைத்துக்கொள்வோம். அதற்கு மாதாமாதம் கட்டவேண்டிய இ.எம்.ஐ தொகை ரூ.28,951.
20 வருடங்கள் செலுத்தவேண்டிய வட்டி மட்டும், தோராயமாக ரூ.39,48,156. (அதாவது,  மாத வருமானத்தில் ரூ.16,450 வட்டியாக மட்டும் கழிந்துவிடுகிறது) அசல் மற்றும் வட்டியுமாகச் சேர்த்து செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.69,48,156.  
ஓய்வுக்காலத்திற்காகச் சேமிக்க வேண்டிய பணத்தையெல்லாம் இப்படி வட்டிக்காக, செலவழித்துவிட்டோமே என நினைத்துக் கலங்காமல், வீட்டுக் கடன் வாங்கும்போதே இன்னொரு சிறு புள்ளியைத் தொடங்கி வைத்தால் கவலைப்படத் தேவையே இல்லை.
20 வருடங்கள் கழித்து அந்த சிறு புள்ளிகள் ஒன்றாகச் சேர்ந்து, நம் ஓய்வுக்காலத்திற்குரிய வாழ்க்கையை மிக அழகானதாக மாற்றி விடுமென்றால், அதைவிட வேறு என்ன வேண்டும்? அது என்ன புள்ளி என்கிறீர்களா..? விரிவாகப் பார்ப்போம்.
வீட்டுக் கடன் வாங்கும்போதே மாதாமாதம் இ.எம்.ஐ தொகையைச் செலுத்துவதற்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வதுடன் நம் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கக்கூடாது. இ.எம்.ஐ செலுத்தும் தொகையுடன், இ.எம்.ஐ தொகை மதிப்பில் குறைந்தபட்சம் 10% அளவுக்குக் கூடுதலாக உங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் ஒதுக்குவது அவசியம்.
கூடுதலாக ஒதுக்கும் அந்தத் தொகையை நிதி ஆலோசகரின் உதவியுடன் தேர்வு செய்த ஒரு நல்ல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில்  எஸ்.ஐ.பி முறையில் தொடர்ச்சியாக, முதலீடு செய்துவந்தால், அடுத்த 20  வருடங்களில் (வீட்டுக் கடன் இ.எம்.ஐ கட்டுவதற்கான ஒப்பந்தம் முடியும் ஆண்டு வரை) சந்தையானது, இப்போது (2018-2019)  சந்திக்கும் தொடர்ச்சியான  சரிவைச் சந்தித்தாலும் கூட்டு வட்டியின் மூலம், நாம் கடனுக்குச் செலுத்திய வட்டியை மீட்டெடுக்கும் வகையில் பெரிய அளவிலான தொகையைப் பெற முடியும்.

அதுமட்டுமில்லாமல் ஒருவேளை பங்குச் சந்தை சரியான திசையில், சீராக மேல்நோக்கிச் சென்றால், அப்போது நாம் கட்டிய அசலையும் சேர்த்து மீட்டெடுக்கும் வாய்ப்பை எஸ்.ஐ.பி முறையிலான முதலீடு பெற்றுத்தரும்.
எனவே, முதுமை எட்டிப்பார்க்கும் அந்த வயதில், பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் எழாது. இதை ஓர் உதாரணம் மூலம் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்.
வீட்டுக் கடனாக 30 லட்சம் ரூபாயை 1999-ம் ஆண்டு 10% வட்டியில் 20 ஆண்டு கால கடனாகப் பெற்று, அதற்கு 1999-ம் ஆண்டு மார்ச் முதல் 28,951 ரூபாயை இ.எம்.ஐ–யாக மாதா மாதம் செலுத்துவதாக வைத்துக்கொள்வோம்.
அதே நேரத்தில் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் தர வரிசையில் சிறந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட்  திட்டத்தில், நாம் செலுத்தும் இ.எம்.ஐ-யின் 10 சதவிகிதமான,  3,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதாகவும் எடுத்துக்கொள்வோம்.
நாம் முதலீடு செய்திருக்கும், மியூச்சுவல்  ஃபண்ட் திட்டத்தின், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தின் (CAGR) சராசரி 15 சதவிகிதமாக இருந்தால், வீட்டுக் கடனுக்காக நாம் செலுத்தி யிருக்கும் வட்டியைவிடக் கூடுதலாக ஆறு லட்சத்தை வருமானமாகப் பெற்றிருப்போம்.
நீங்கள் செலுத்த விரும்பும் இ.எம்.ஐ தொகையில் கூடுதலாக சுமார் 10% மட்டும் முதலீட்டிற்காக ஒதுக்கிவைத்தால், அது தரும் பலன் என்னவென்று புரிகிறதா?
எப்போதுமே, நம்மால் மாத இ.எம்.ஐ, எவ்வளவு செலுத்த முடியும் என்பதை ஆரம்பத்திலேயே முடிவுசெய்துதான் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்போம். இனி அந்த தொகையுடன்  கூடுதலாக 10% தொகையை, தொடர் முதலீடு செய்ய எடுத்துவைக்க முடியுமா என்பதையும் ஆராய்ந்து முடிவெடுக்க முயற்சி செய்யவேண்டும்.  முயற்சி மட்டுமல்ல, முதலீடு செய்ய வேண்டும். இதுதான் எதிர்காலத்தில் நிதி சார்ந்த விஷயங் களில் நம்மைத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும்.
ஒரு நல்ல தரவரிசை கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எந்தச் சூழ்நிலையிலும் தொடர்ச்சியாக முதலீடு செய்தால், இதுபோன்ற நீண்ட கால முதலீட்டின் பயனை எல்லோருமே அடையமுடியும் என்கிற உண்மை அனைத்துவகை முதலீட்டாளர்களுக்கும் எளிதில் விளங்கும்.
இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனிப்பது அவசியம். இ.எம்.ஐ-யைவிட எஸ்.ஐ.பி வலிமையானது என்று புரிந்திருக்கும். அந்த வகையில், எஸ்.ஐ.பி தொகையை அதிகரிப்பது நீண்ட காலத்தில் லாபமாக இருக்கும்.

ஜி.அண்ணாதுரை குமார்,நிதி ஆலோசகர்

Leave a Reply

%d bloggers like this: