நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 சீட்? ஒரு ராஜ்யசபா சீட் தர பாஜ சம்மதம்,.. விஜயகாந்த் இன்று அறிவிக்கிறார்

நீண்ட இழுபறிக்கு பிறகு மக்களவை தேர்தலில் 5 சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் பாமகவுக்கு 7 மக்களவை, 1 மாநிலங்களவை தொகுதி, பாஜவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டன. அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்ததும், தேமுதிகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.   தேமுதிகவை எப்படியேனும் சேர்த்து தேர்தலில் நிற்க வேண்டும். அப்போதுதான் கணிசமான தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் செயல்பட முடியும் என்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் கருதுகின்றனர். இதனால் அதிமுக தலைவர்களிடம் எப்படியாவது விஜயகாந்த்தை சமாதானம் செய்யும்படி வற்புறுத்தி வந்தனர். மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார். அதில் பாமகவுக்கு இணையாக தேமுதிகவிற்கு 7 சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் வேண்டும் என்று விஜயகாந்த் கூறிவிட்டார்.

அதோடு நிற்காமல் 21 சட்டப்பேரவை தொகுதிகளில் 8 சீட் வேண்டும். உள்ளாட்சிகளில் 30 சதவீத இடங்கள் வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  6ம் தேதி (இன்று) பிரதமர் சென்னை வரும் போது தேமுதிக அதிமுக கூட்டணியில் சேர்ந்திருக்க வேண்டும் என்று கடைசியாக அதிமுகவுக்கு பாஜ மேலிடம் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடன் 5 முறை பேச்சுவார்த்தை நடத்தினார். 6வது முறையாக ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விஜயகாந்த்தை நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் 5 சீட் ஒதுக்குவது என்றும், ஒரு ராஜ்யசபா சீட்டை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பாஜ ஒதுக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவுக்கு மாநிலங்களவையில் 3 சீட் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. அதில் ஒரு சீட் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் 2 இடங்கள் உள்ளது. அதில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்ட தலைவர்கள் சீட் கேட்கின்றனர். இப்போது ஒரு சீட் பாஜக விட்டுக் கொடுத்ததால் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. அதோடு தேர்தல் செலவுக்கு ‘‘300 சி’’ வரை தருவதற்கு அதிமுக சம்மதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்மதத்தால், கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது.  இதற்கிடையில், தேமுதிகவின் அவசர கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விஜயகாந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் சுதீஷ், பார்த்தசாரதி, அழகாபுரி மோகன் ராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிர்வாகிகளின் கருத்தை விஜயகாந்த் கேட்டார்.

ெதாடர்ந்து விஜயகாந்த் அதிமுகவுடனான கூட்டணி தொடர்பான அறிவிப்பை கூட்டத்தில் அறிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. தொடர்ந்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் அதிமுக, தேமுதிக தலைவர்கள் இன்று காலையில் கையெழுத்திடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இன்று பிற்பகலில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர்  மோடி கலந்து கொள்கிறார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையில் பேச வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிமுக செய்து வருகிறது. இதனால், இன்று நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.  

தங்கமணி வேண்டாம்: விஜயகாந்த் டென்சன்:

தேமுதிகவுடன் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர்தான் கூட்டணி பேசி வந்தனர். இவர்களிடம்தான் பசையான துறை உள்ளதால் அவர்கள் கூட்டணியை பேசி முடிவு செய்து வந்தனர். விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடனும் அவர்கள்தான் பேசி வந்தனர். ஆனால் ஒவ்வொரு முறை பேசும்போதும் ஒரு புதிய டிமாண்ட்டை தேமுதிக தலைவர்கள் கூறி வந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் தங்கமணி கடுப்பாகிவிட்டாராம். அதில் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டதாகவும், மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இனி பேச்சுவார்த்தைக்கு அவர்கள் இருவரும் வரவேண்டாம் என்று விஜயகாந்த் கூறிவிட்டாராம். இதனால்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் சென்றனர்.

அதேநேரத்தில் தங்கமணியும், விஜயகாந்த்துடன் கூட்டணிக்கு தங்களை அனுப்ப வேண்டாம் என்று தலைமையிடம் கூறிவிட்டாராம். ஆனால் நேற்று இரவு வரை கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்த விஜயகாந்த், ஒப்பந்தம் போட மறுத்து வருகிறாராம். இதனால் அவரை எப்படியாவது பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மேடைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று விடாது, அதிமுக தலைவர்கள் முயன்று வருகின்றனர்.

Leave a Reply

%d bloggers like this: