40 வயது… காப்பீடுகள், முதலீடுகள்! – நடுத்தர வயதினருக்கு நச் ஆலோசனை

நாற்பது வயதைத் தாண்டும்போதுதான் நம்மில் பலருக்கும் சேமிப்பு, முதலீடு குறித்த சிந்தனையே பெருக்கெடுத்து ஓடத்தொடங்குகிறது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானபின் கல்விக் கட்டணங்கள் நம் கழுத்தைப் பிடிக்கத் தொடங்குவது இந்த வயதில்தான். தீராத கால்வலி என்று மருத்துவமனைக்குச் சென்றால், மூட்டுத் தேய்மானம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது என உடல்நலக்கோளாறுகளை மருத்துவர்கள் பட்டியலிடுவதும் இந்த வயதில்தான். இதற்கான மருத்துவச் செலவு, நோயைவிட மிக மோசமான பயத்தினை நம்மிடம் உருவாக்குவதாக உள்ளன.

குழந்தைகளின் கல்லூரிப் படிப்பு, திருமணம் உள்ளிட்ட செலவு களை நினைத்தாலே நாற்பது வயதைத் தாண்டிய பலருக்கும் தலை கிறுகிறுக்கத் தொடங்கிவிடும். ‘இவ்வளவு நாளாக இது குறித்த சிந்தனையே இல்லாமலிருந்து விட்டோமே’ என நம்மை நாமே குற்றம் சாட்டிக்கொண்டு நொந்துபோகும் காலமும் இந்த வயதில்தான்.

நம்மில் பலரும் திட்டமிட்டு நிதி நிர்வாகத்தைச் செயல்படுத்து வதில்லை. ‘வருமானம் வருகிறது; செலவு செய்கிறோம். திடீர் செலவு வந்தால், கடன் வாங்கி, நிலைமையைச் சமாளிக்கிறோம்’ என்பதுதான் பல குடும்பங்களின் நிதர்சன நிலைமை. குடும்பம் சிறிதாக இருக்கும்போது வருமானம் குறைவாக இருந்தாலும் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், குடும்பம் வளர வளர விலைவாசியும் வளர்வதால், வருமானம் என்பது போதாமல் போகும். அப்போது கடன் வாங்கி, செலவுகளைச் சமாளிப்பதால், தேவையில்லாமல் வட்டி கட்ட வேண்டிய நிலைக்கு நாம் உள்ளாவோம். பைக் கடன், ஏசி கடன், வீட்டுக் கடன்களுக்கான வட்டி, வட்டிக்கு வட்டி என நம் வாழ்க்கை முழுக்கக் கட்டிக்கொண்டே இருப்பதால், நம் வாழ்க்கையில் கடைசி வரை பெரிய சொத்து எதையும் சேர்க்க முடியாமலே போய்விடுகிறது.

நாற்பது வயதுவரை திட்டமிடாமல் வாழ்ந்தா யிற்று. இனிமேலாவது திட்டமிட்டு வாழ்க்கையை நடத்தினால் சிக்கலின்றி தப்பிக்கலாமா என்கிற கேள்விக்கு நிச்சயமாகத் தப்பிக்கலாம் என்பதே பதில். நம் வருமானத்திலிருந்து ஒருபகுதியைச் சரியான திட்டங்களில் முதலீடாக மாற்றும்போது நம் எதிர்காலத் பணத்தேவையை நம்மால் பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல் சமாளிக்க முடியும். அதற்கு, முதலீடு குறித்த அடிப்படை அறிவு தேவை.

பதற்றம் வேண்டாம்!

நாற்பது வயதைத் தாண்டியவர்கள் நிதித் திட்டமிடல் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

“பெட்டர் லேட் தென் நெவர் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு வேலையை செய்யாமல் இருப்பதைவிட, இப்போதாவது செய்வதற்கு வாய்ப்பு கிடைத்ததே என்று நினையுங்கள். அடடா, நமக்கு நாற்பது வயதாகிவிட்டதே, மிகவும் தாமதப்படுத்திவிட்டோமே என்ற நினைப்பு உங்களிடம் இருக்கக்கூடாது. பொதுவாக, 40 வயதுக்குமேல் முதலீடு செய்ய வருபவர்கள், ‘20 வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்கியிருந்தால் நல்ல வருமானம் பார்த்திருப்பேனே’ என்று வருந்துவார்கள். அப்படிப்பட்டவர்கள், இன்னமும் பாதி வாழ்க்கைக் காலத்தைக்கூட எட்டவில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும்கூட நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து வருமானம் ஈட்டலாம். எனவே, தாமதம் என்ற எண்ணமே தவறானது. நீண்ட கால முதலீட்டுக்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளதால், முறையான அஸெட் அலோகேஷன் செய்து முதலீடு செய்தால் நல்ல வருமானம் பார்க்கலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வதே நல்லது. இதில் காப்பீடு அதிகமாகவும் கட்டவேண்டிய பிரீமியம் குறைவாகவும் இருக்கும். இதற்கான கவரேஜ் தொகை, ஆண்டுச் சம்பளத்தில் 10 – 20 மடங்கு வரை இருக்கும்படி எடுப்பது நல்லது!

நாற்பது வயதை எட்டியவர்களுக்குக் குழந்தைகள் பள்ளி வாழ்க்கையின் இறுதிக்கட்டத்திலோ அல்லது கல்லூரி வாழ்க்கையின் தொடக்கத்திலோ இருப்பார்கள். இந்தச் சூழலில் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகக் கட்டணம் வசூலித்து படிப்பைக் கற்றுக்கொடுக்கும் கல்லூரிதான் தரமான கல்லூரி என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். எந்தமாதிரியான பாடப்பிரிவு வேண்டும், எந்தக் கல்லூரியில் சேர விருப்பம் என்பதையெல்லாம் பிள்ளைகளிடம் கலந்தாலோசனை செய்து தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுடைய பொருளாதாரச் சூழலை உங்கள் பிள்ளைகள் தெரிந்திருப்பது அவசியம். அதற்காக அதிகம் செலவு செய்து படிக்க வைக்க வேண்டாம் என்பதில்லை. வெறுமனே பெருமைக்காக, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு, உறவினர்களுக்குத் தனது அந்தஸ்தை உணர்த்துவதற்காக அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரிகளில் குழந்தையைச் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டாம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நாம் சிந்தித்துச் செயல்பட்டால் தேவையற்றச் செலவுகளைக் குறைக்க முடியும்.

பலருக்கும் இந்த வயதில் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணைகள் இருக்கும். ஏதாவது ஒரு வகையில் பெரிய தொகை கிடைத்தால், உடனே அவசரப்பட்டு வீட்டுக் கடனுக்குச் செலுத்த வேண்டாம். ஏனென்றால், வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை கிடைக்கும். அது வருமான வரி செலுத்தும்போது பயனுள்ளதாக இருக்கும்.

இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, பலரும் என்டோவ்மென்ட் பாலிசிகள் எடுத்திருப்பார் கள். அதற்கு பிரீமியம் அதிகம் செலுத்துவார்கள், ஆனால், கவரேஜ் குறைவாக இருக்கும். எனவே, அந்த பாலிசியிலிருந்து வெளியேறி, குறைந்த பிரீமியம் தொகை யில் அதிகம் கவரேஜ் தரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் அல்லது நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரும் வேறு திட்டங்களில் முதலீடு செய்யலாம்” என்றார்.

நோய் நாடி, நோய் முதல் நாடி….

நாற்பது வயதைத் தாண்டியவர்கள் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது எதையெல்லாம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரனிடம் கேட்டோம்.

“ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, அனைத்து வயதினருக்கும் கட்டாயமே. பொதுவாக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தாலே வியாதி வந்துவிடும் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. அது தவறானது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பதே வருமுன் காக்கும் திட்டமிடலே. 40 வயதுக்குமேல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களுக்கு சில வியாதிகள் இருப்பது முன்கூட்டியே தெரிய வந்திருக்கும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, ஏற்கெனவே இருக்கும் நோய்களை மறைக்காமல் தெரிவித்துவிட வேண்டும். இந்த வியாதிகளுக்கு மூன்று முதல் நான்கு ஆண்டுவரை இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்வதிலிருந்து விலக்கு இருக்கும். இதனைப் புரிந்துகொண்டு க்ளெய்முக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குரூப் இன்ஷூரன்ஸ் போதாது…

தற்போது பல அலுவலகங்களில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் குரூப் பாலிசியினை எடுத்துத் தருகிறார்கள். எனவே, அலுவலகத்திலேயே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, நான் எதற்காகத் தனியாகவும் எடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் பொதுவாக, அலுவலகத்தில் தரப்படும் பாலிசிகளின் கவரேஜ், ஒன்று அல்லது இரண்டு லட்சம் ரூபாய் வரையே இருக்கும். இந்த கவரேஜ் தொகை போதுமானதாக இருக்காது. மேலும், அந்த அலுவலகத்தில் பணியாற்றும்வரை மட்டுமே அந்த கவரேஜ் இருக்கக்கூடும். அலுவலகம் மாறினால் அது காலாவதியாகும். எனவே, தனி யாகவும் ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது.

திடீர் மருத்துவச் செலவு வரும்போது, முதலில் அலுவலகத்தில் எடுத்த பாலிசியைப் பயன்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப கூடுதல் பாலிசியிலிருந்து இழப்பீட்டுத் தொகையைக் கோரலாம். இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு நோய்க்காகவும் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்தாலே குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை செலவாக வாய்ப்புள்ளது. இதுவே இதயநோய் தொடர்பாகச் சேர்ந்தால், ஐந்து லட்சம் வரைகூட செலவாக வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் அலுவலகத்தில் எடுத்துள்ள ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி தவிர, உங்களுக்கென ஒரு பாலிசி எடுத்து வைத்திருப்பது அவசியமாகும்.

சிலருக்குப் பரம்பரையாக வரக்கூடிய நோய்கள் இருக்குமென்றால், ‘கிரிட்டிகல் இல்னெஸ் பாலிசி’யும் எடுத்துக் கொள்ளலாம். ஒருவருக்கு இதயம் தொடர்பான நோய் இருக்குமெனக் கொண்டால் அதற்கான சிகிச்சைக்காக ஓரிரு மாதங்கள் முழு ஓய்வெடுக்கும் தேவை இருக்கலாம். அந்தச் சூழலில், ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த பாலிசியின்மூலம் பெற்றுக்கொள்ள முடியும். நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

ஆயுள் காப்பீட்டைப் பொறுத்தவரை, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. இதில் காப்பீடு அதிகமாகவும் கட்டவேண்டிய பிரீமியம் குறைவாகவும் இருக்கும். இதற்கான கவரேஜ் தொகை, ஆண்டுச் சம்பளத்தில் 10 – 20 மடங்கு வரை இருக்கும்படி எடுப்பது நல்லது” என்றார்.

நாற்பதிலும் தொடங்கலாம் முதலீடு

நாற்பது வயதில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஆலோசனை தருகிறார் நிதி ஆலோசகர் எஸ்.ராமலிங்கம்.

“மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு முன்பாக குடும்ப பட்ஜெட்டை வரையறுக்க வேண்டும். குடும்பத்திற்கான தினசரிச் செலவு, குழந்தை களுக்கான கல்விச் செலவு, திருமணம், ஓய்வுக்காலத் தேவை ஆகியவற்றைக் கணக்கிட வேண்டும். குறுகிய கால முதலீட்டுத் தேவை (3-5 வருடங்கள்), நடுத்தர முதலீட்டுத் தேவை (7-10 வருடங்கள்), நீண்ட கால முதலீட்டுத் தேவை எவையெவை என்பதைக் கணவன் மனைவி இருவரும் கலந்துபேசி, இதற்காக நிதி ஆலோசகரின் உதவியை நாட வேண்டுமா அல்லது சுயமாக முயற்சி செய்யலாமா என்பதை முடிவுசெய்ய வேண்டும்.

உங்களின் ஆண்டு வருமானம், முதலீட்டின் நோக்கம், ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டிற்குக் கிடைக்கும் அவகாசம் ஆகியவற்றைக் கட்டாயம் கணக்கில் எடுத்துக்கொண்டு காப்பீடு, முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்.

சம்பாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதைப்போல் சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் கூட வயது தடையல்ல. எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைவிட அதில் எவ்வளவு சதவிகிதம் சேமிக்கிறோம், சேமிப்பை முதலீடாக மாற்றுகிறோம் என்பதே முக்கியம். ஈட்டிய வருமானத்தை முறையாக முதலீடு செய்து எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றும் வித்தை நம்மிடம்தான் உள்ளது.

Leave a Reply

%d bloggers like this: