நோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி!

கிட்டத்தட்ட பல ஆண்டுகால போராட்டம் என்றே சொல்லலாம். பொதுவான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு வெளிப்படையாக சீரற்ற முறையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காலமாற்றத்துக்கேற்ப தற்போது நுண்ணுயிரிகளும் விரைவாக உருவாகி வருகின்றன. பல நுண்ணுயிரிகள் அவற்றை கொல்வதற்கு உருவாக்கப்பட்ட வழிமுறைகளுக்கு எதிராக பாதுகாப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன. நுண்ணுயிர் கிருமிகளின் பரிணாம மாற்றத்தால் அவற்றை சமாளிக்க முடியாமல் சமயங்களில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விரக்தியடைந்து விடுவதும் நடக்கிறது.

நோய்க் கிருமிகளுக்கு எதிராக புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் விரக்தியடைந்த விஞ்ஞானிகள், தற்போது மரபணுக்களை வெட்டி சரிசெய்கிற Crispr என்ற முறையினை பயன்படுத்த முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த Crispr முறையினை மனித உயிரணுக்களை பாதிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர். இந்த முறையானது நுண்ணுயிர்க் கிருமிகளுக்கு எதிரான சிகிச்சையின் அடுத்தபடியாக உள்ளது என்று Nature Communications இதழில் வெளியான ஆய்வில் அதன் முதன்மை ஆசிரியரும், கனடாவில் உள்ள Western Ontario பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளருமான டேவிட் எட்ஜெல் தெரிவித்திருக்கிறார்.
Crispr என்பது டி.என்.ஏ.வின் ஒரு சிறப்புப் பகுதியாக உள்ளது. இது டி.என்.ஏ.வில் தேவையான அளவு மரபணு கத்தரிக்கோல் என்சைம்களை (Genetic scissors-enzymes) உருவாக்குகிறது. உடல் செல்களில் உள்ள டி.என்.ஏ. அல்லது அதன் சகோதரி மூலக்கூறான ஆர்.என்.ஏ.வை துல்லியமாக வெட்டி சரிசெய்வதற்கு இந்த முறை உதவுகிறது. Clustered regularly interspaced short palindromic repeats என்பதன் சுருக்கமே Crispr என்று சொல்லப்படுகிறது. இது முதலில் பாக்டீரியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
இது கடந்த கால காயத்தைக் கண்காணிக்க உதவுகிறது. ஒரு வைரஸ் தாக்கும்போது, இந்த பாக்டீரியம் வைரஸ் மரபணுவின் சிறிய பகுதிகளை அதன் சொந்த டி.என்.ஏ.வுக்குள் சேமித்து வைக்கிறது. அதே வைரஸ் தொற்று மீண்டும் நிகழும்போது பாக்டீரியம் அடையாளம் காண இது உதவுகிறது. அதன் பின்னர் Crispr உடன் தொடர்புடைய என்சைம்களைப் பயன்படுத்தி அந்த வைரஸின் ஆற்றலைக் குறைத்து அதனால் ஏற்படுகிற தொற்று பரவாமல் தடுக்கலாம்.
Edgell மற்றும் அவரது குழுவினரின் சமீபத்திய ஆய்வில், சால்மோனெல்லா என்கிற இனத்தை அகற்றுவதற்கு Crispr உடன் தொடர்புடைய Case9 என்கிற நொதியினை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வில் பாக்டீரியத்தை எதிரியாகக் காணும்படி Case9 நொதியில் Programme செய்வதன் மூலம், சால்மோனெல்லாவை அதன் சொந்த மரபணுவுக்கு ஆபத்தான வெட்டுக்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்த முடிந்தது.
Crispr முறையை அடிப்படையாகக் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து இன்னும் எந்த ஒரு மருந்தக அலமாரிக்கும் வரவில்லை. ஆனால், இதுபோன்ற சிகிச்சைகளை வளர்ப்பதன் மூலம் விஞ்ஞானிகளால், மனித உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சக்தியை கிருமி தொற்றுகளைத் தடுக்க பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இது நடைமுறைக்கு வந்தால் மருத்துவ உலகின் அபார முன்னேற்றமாகவே இருக்கும்!

Leave a Reply

%d bloggers like this: