கருத்தடை மாத்திரை – மாதம் ஒருமுறை மட்டுமே உட்கொண்டால் போதும் – பெண்களுக்கு வரமா? சாபமா?

மாதத்தில் ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால், கருத்தரிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது பெண்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மாத்திரையை விழுங்கியதும் அது பல வாரங்களுக்கு வயிற்றில் தங்கியிருந்து, கருத்தரிப்பைத் தடுக்கக் கூடிய ஹார்மோன்களை மெதுவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் உடனடியாக செரிமாணம் ஆகிவிடாதபடி அது விசேஷமாக உருவாக்கப் பட்டுள்ளது.

பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலமான நிதியளிப்பில், அமெரிக்க குழு ஒன்று இந்த மருந்தை பன்றிகளுக்குக் கொடுத்து பரிசோதனை செய்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களிடம் இந்த மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

கருத்தரிப்பை தள்ளிப்போட மாத்திரை சாப்பிட விரும்பும், ஆனால் தினமும் அதை எடுத்துக் கொள்ள மறந்துவிடும் பெண்களுக்கு நல்லதொரு தேர்வாக இது அமையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மாத்திரை எந்த அளவுக்கு திறனுள்ளது?

வழக்கத்தில் உள்ள மாத்திரை அல்லது கூட்டு வாய்வழி கருத்தடை மருந்து உலகெங்கும் பல மில்லியன் கணக்கான பெண்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அவை 99 சதவீதம் செயல்திறன் மிக்கதாக இருக்கும். அதாவது நூறு பெண்களில் ஒருவருக்கு மட்டுமே கருத்தரிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்பது இதன் அர்த்தமாகும்.

ஆனால், இவற்றைப் பயன்படுத்துவோரில் பாதி பேர் சில நேரம் இதை எடுத்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள் அல்லது தவறான நேரத்தில் இதை எடுத்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதனால் இது 91 சதவீதம் செயல்திறன் உள்ளதாகக் கருதப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும், இதைப் பயன்படுத்துவோரில் 9 பெண்கள் கருத்தரிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு வீரியம் கொண்ட கருத்தடை மாத்திரைகள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. மாதம் இரு முறை ஊசி போட்டுக் கொள்ளுதல் அல்லது வாரத்திற்கு ஒரு முறை மாற்றி அட்டை ஒட்டிக் கொள்ளுதல் என உள்ளன. ஆனால் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடும் மாத்திரை என்பது இதுவரை இல்லை.

தொடக்கநிலை மாத்திரை நட்சத்திர வடிவிலான மருந்து முறைமை கொண்டதாக, விழுங்குவதற்கு எளிதான சிறிய அளவுள்ளதாக இருக்கிறது. மீன் மாத்திரையைவிட பெரியதாக இல்லை.

வயிற்றை அடைந்ததும், நட்சத்திர அமைப்பு ஒரு மலரைப் போல விரிந்து கொள்கிறது. அதன் ஆறு முனைகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள கருத்தடை ஹார்மோன்களை மெல்ல விடுவிக்கும் பணியை அது தொடங்குகிறது.

இரைப்பையில் இருந்து சீக்கிரம் வெளியேற முடியாத அளவுக்கு அந்த நட்சத்திர அமைப்பு சற்றுப் பெரியதாக இருக்கும். சேமிப்பில் உள்ள ஹார்மோன்கள் காலியாகும் வரை அது வயிற்றிலேயே இருக்கும். பிறகு தானாகவே சிதைவுற்று கழிவுடன் சேர்ந்து வெளியேறிவிடும்.

ஹார்வர்டு மருத்துவக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜியோவன்னி டிராவர்சோ என்பவர், மஸாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் உள்ள தன் சகாக்களுடன் இணைந்து இந்த முதல்நிலை மாத்திரையை உருவாக்கியுள்ளார். “அடைத்துக் கொள்வது அல்லது செரிமாணம் மற்றும் உணவை கொண்டு செல்வதில் எந்த இடையூறும் இருக்காது. பாதுகாப்பு விஷயங்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

Science of Translational Medicine என்ற சஞ்சிகையில் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கேட்ஸ் அறக்கட்டளையின் கூடுதல் நிதியுதவியுடன் லின்ட்ரா என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் இப்போது நட்சத்திர கருத்தடை மாத்திரைகளைத் தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனம், நட்சத்திர வடிவிலான மாத்திரைகளை நோயாளிகளிடம் ஏற்கெனவே பரிசோதனை செய்யத் தொடங்கிவிட்டது. மலேரியா சிகிச்சை போன்றவற்றில் மற்ற மருந்துகளை பாதுகாப்பாக மற்றும் நம்பகமான முறையில் இவ்வாறு பயன்படுத்த முடியுமா என்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறது.

நிபுணர்கள் என்ன நினைக்கிறார்கள்?

“மாதம் ஒரு முறை சாப்பிடும் கருத்தடை மாத்திரை என்பது நல்லதாகத் தெரிகிறது. கருத்தடை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்வதாக இது இருக்கும்” என்று பாலியல் மற்றும் குழந்தைப்பேறு ஆரோக்கிய சேவை கல்வியாளர் டாக்டர் டயானா நான்சோர் கூறியுள்ளார்.

“இப்போது கருத்தடை மாத்திரைகளை பெண்கள் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மாதம் ஒரு முறை சாப்பிடும் மாத்திரை என்பது அதிக செயல்திறன் மிக்கதாக இருக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.

“இருந்தபோதிலும், இதுபோன்ற புதுமையான கருத்தடை மாத்திரை தயாரிப்பு என்பது இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார் அவர்.

“கருத்தடை வாய்ப்புகளில் இது அற்புதமான முன்னேற்றமாக உள்ளது. கருத்தடைக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது உண்மையிலேயே நல்ல விஷயம்” என்று புரூக் என்ற அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த அனடோலே மேன் – ஜோஹன்சன் கூறினார்.

“கரு முட்டைகள் வெளிப்படுதலைத் தடுக்கும் அளவுக்குப் போதிய அளவில் மருந்து விடுவிக்கப்படுமா என்பதை உறுதி செய்ய கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது. பிறகு மனிதர்களிடம் இதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

%d bloggers like this: