அன்பில் – உதயநிதி நட்பும், s – தி.மு.க-வில் திரும்பும் வரலாறு

தி.மு.க தலைவராக ஸ்டாலின் உருவெடுத்தது, கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலப் போராட்டம். ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவ்வளவு காலமெல்லாம் காத்திருக்கப் பொறுமை இல்லை.

சற்றேறக்குறைய ஸ்டாலினின் போராட்டக் காலத்தையே வயதாகக்கொண்ட இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், அவரின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மொத்தக் கட்சியையும் கைப்பற்றத் துடிக்கிறார்கள்; மூத்த தலைவர்களை ஒடுக்குகிறார்கள் என்பதுதான் தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்களின் குமுறலாக இருக்கிறது.

இதில், இருவருமே ‘வாரிசு’கள் என்பது அறுபது வயதைத் தாண்டியும் தெருவில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் சாமானியத் தொண்டனின் கூடுதல் குமுறல்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றிச் சிறு அறிமுகம்… `அன்பில் தர்மலிங்கத்தின் பேரன்’, `அன்பில் பொய்யாமொழியின் மகன்’ என்பதே அன்பில் மகேஷின் அடையாளம், அங்கீகாரம், எக்ஸட்ரா… எக்ஸட்ரா எல்லாமே! ‘எழுதப்படாத வாரிசுரிமை’ என்பதைத்தான் கெளரவமாக தி.மு.க-வில் ‘பாரம்பர்ய தி.மு.க குடும்பம்’ என்றழைக்கிறார்கள். அப்படியொரு பாரம்பர்ய தி.மு.க குடும்பமாக மூன்று தலைமுறைகளாகத் திருச்சியில் கோலோச்சுகிறது இவர்களின் குடும்பம்.

ஸ்டாலினுக்குத் தோழனாக அன்பில் பொய்யாமொழி இருந்தபோது, புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, சேலம் வீரபாண்டி செழியன், ஈரோடு என்.கே.பி.ராஜா, காஞ்சிபுரம் தா.மோ.அன்பரசன், கரூர் வாசுகி எனப் பலரையும் பொறுப்புக்குக் கொண்டுவந்தார். ஸ்டாலின்-பொய்யாமொழி இருவரும் நட்பிலிருந்தபோது, சீனியர்கள் எப்படிப் பாதிக்கப்பாட்டார்களோ கட்சியினர் எப்படிப் புலம்பினார்களோ அதேபோலவே அன்பில் மகேஷ் – உதயநிதியின் நட்பும் கட்சியில் பலருக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாறு மீண்டும் திரும்புகிறது.


அன்பில் தர்மலிங்கம் – கருணாநிதி; அன்பில் பொய்யாமொழி – ஸ்டாலின்; உதயநிதி – அன்பில் மகேஷ்

இளைஞரணிச் செயலாளராக உதயநிதி தேர்வாகும் முன்பே, இளைஞரணியில் பொறுப்பு வகித்தவர் மகேஷ். கூடுதலாக, உதயநிதி ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். உதயநிதியை இளைஞரணி பொறுப்புக்குக் கொண்டுவருவதற்கு, மாவட்டச் செயலாளர்களிடம் கடிதம் வாங்கியதில் இவரது பங்கு அதிகம். தற்போது உதயநிதியின் குரலாகவே மாறியிருக்கிறார் மகேஷ். அதைத் தொடர்ந்தே இவ்வளவு பிரச்னைகள்.

சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் நியமன விவகாரம், கடந்த இரு வாரங்களைத் தாண்டியும் கட்சியினரிடையே புகைந்து கொண்டிருக்கிறது. மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக மகேஷின் ஆதரவாளர் சிற்றரசு நியமிக்கப்பட்டதால், சீனியரான கு.க.செல்வம் கட்சியைவிட்டே விலகினார். இப்போது பா.ஜ.க-வில் ஐக்கியமாகி தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்கிறார்.

சென்னை மேற்கு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை சிற்றரசுவிடமும், மற்றொன்றை கு.க.செல்வத்திடமும் ஒப்படைத்திருந்தால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. சீனியர் ஒருவர், இளையவர் ஒருவர் எனப் பழுத்த அனுபவமும், புதிய சிந்தனைகளும் கட்சிக்கு உரமூட்டியிருக்கும். அதைவிடுத்து, சீனியரை ஓரங்கட்டிவிட்டு சிற்றரசுவுக்குப் பதவி கொடுத்ததால், ஒரு சீனியரை இழக்க நேரிட்டுவிட்டது.

“சென்னை மேற்கு மாவட்ட விவகாரம், ஒரு துளி உதாரணம்தான்… மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் நிலவரம் கலவரமாகவே இருக்கிறது” என்கிறார்கள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள தொண்டர்கள்.

One Response

  1. Rajasingh
    Rajasingh August 22, 2020 at 11:08 pm |

    ஆசை இருக்கு ராஜா ஆக ஆனால் அம்சம் இருக்கு கழுத்தை மேய்க்க என்று கூறி உள்ளார் பெரிய விஷயம் தான்Y

Comments are closed.

%d bloggers like this: