அ.தி.மு.க.,வில் ஆளாளுக்கு கருத்து: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., குஸ்தி

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், ஆளாளுக்கு கருத்துச் சொல்வதால், அ.தி.மு.க.,வில் உருவாகியுள்ள சர்ச்சை புயல், இப்போதைக்கு ஓயாது என தெரிகிறது.
இவ்விவகாரத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சுக்கும் இடையே, பகிரங்க குஸ்திதுவங்கியதை தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே சமரச பேச்சில், அமைச்சர்கள் குழுவினர், அவசர அவசரமாக இறங்கினர்.அதன் விளைவாக, நேற்று மாலையில், சமாதான அறிக்கை வெளியானது. ஆனாலும், முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலக,ஓ.பி.எஸ்., மறுத்து விட்டதால், உரசல் விரிசலாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், சட்டசபை பொதுத்தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற, சர்ச்சை எழுந்து, மோதலாக மாறியுள்ளது.சமீபத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, மதுரையில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூடி, முதல்வரை தேர்வு செய்வர்’ என்றார்.அதற்கு மறுநாள் பேசிய, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘இ.பி.எஸ்., தான் என்றும் முதல்வர், அவரை முன்னிறுத்தி களம் காண்போம்’ என்றும், கருத்து தெரிவித்தார்.

மாறி மாறி சென்ற அமைச்சர்கள்

அதன் தொடர்ச்சியாக, இ.பி.எஸ்., — ஓ.பி.எஸ்., ஆகியோருக்கு ஆதரவாக, அவர்களின் ஆதரவாளர்கள் கருத்துக்களை வெளியிட துவங்கியதும், கட்சிக்குள் யுத்தம் வெடித்தது. நேற்று காலை, தேனியில், ‘2021 சட்டசபை தேர்தல்; நிரந்தர முதல்வர் ஓ.பி.எஸ்.,’ என, போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது, இ.பி.எஸ்., தரப்பினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை கோட்டையில், நேற்று சுதந்திர தின விழா நிறைவடைந்ததும், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலகத்தில் கூடி, போஸ்டர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். பின், காலை, 11:30 மணிக்கு, அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர், வீரமணி, ராஜு ஆகியோர், துணை முதல்வர் வீட்டுக்கு சென்றனர்.
அவருடன், ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தி, முதல்வர் வீட்டு சென்றனர். அங்கும், ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.பின், மீண்டும் ஓ.பி.எஸ்., வீட்டிற்கு வந்து பேசினர்.ளமாலை, 3:00 மணிக்கு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகளுக்கு மாறி மாறிச் சென்ற, அமைச்சர்கள் குழுவினர்,கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்னைக்கு, சமரச தீர்வு காண முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி, முடிவு எட்டப்படவில்லை.அமைச்சர்கள் நடத்திய பேச்சு குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:’முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்., தான்’ என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியபோது, முதல்வரோ, அமைச்சர்களோ கண்டு கொள்ளவில்லை.

நேற்று தேனியில், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக, போஸ்டர்கள் ஒட்டப்பட்டதும், அதிர்ந்து விட்டனர். ஓ.பி.எஸ்., வீட்டிற்கு வந்த அமைச்சர்கள், தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட விவகாரம் குறித்தே பேசியுள்ளனர். அதற்கு, ஓ.பி.எஸ்., ஆவேசமாக பதிலளித்துள்ளார். ‘முதலில், இந்த பிரச்னையை ஆரம்பித்தது யார்; அப்போது ஏன், கண்டிக்கவில்லை? இ.பி.எஸ்., என்ன செய்தார்? இன்றைக்கு தானே போஸ்டர் வந்துள்ளது. எனக்கு தகவல் கிடைத்ததும், அதை அகற்றச் சொல்லி விட்டேன்’ என, கூறியிருக்கிறார்.
‘முதல்வர் வேட்பாளர் பிரச்னை, கட்சியை பலவீனப்படுத்தி விடும். எனவே, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்தாக வேண்டும்’ என, அமைச்சர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.’அதை, கட்சி நிர்வாகிகள் அனைவரும் கூடித்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்களோ, நானோ முடிவு செய்ய முடியாது’ என, ஓ.பி.எஸ்., காட்டமாக கூறியுள்ளார்.’முதலில், இப்பிரச்னையை கிளப்பிய, ராஜேந்திர பாலாஜியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கச் சொல்லுங்கள்; மற்றதை அப்புறம் பேசலாம்’ என்றும், ஓ.பி.எஸ்., கூறியிருக்கிறார். அதை, அமைச்சர்கள் ஏற்க மறுத்துள்ளனர். அதையடுத்து, ஓ.பி.எஸ்., தன் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டார். ‘நான் தொடர்ந்து அவமானப் படுத்தப்படுகிறேன். கட்சி ஒற்றுமைக்காக அமைதி காக்கிறேன். நான் சொல்வது எதையும், முதல்வர் கேட்பதில்லை. என்னை நம்பி வந்தவர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர்.
‘இவரை நம்பி ஏமாந்து விட்டோம்’ என அவர்கள், என்னை குற்றம் சாட்டுகின்றனர். ‘சண்டை போட்டால், கட்சிக்கு பலவீனம் என, நான் அமைதி காக்கிறேன். எவ்வளவு தான் நான் குனிந்து செல்ல முடியும்?’ என, கொந்தளித்துள்ளார்.அவரை சரிக்கட்ட முடியாது என்பதை அறிந்த அமைச்சர்கள், அங்கிருந்து வெளியேறி, முதல்வர் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து, ‘இப்பிரச்னை குறித்து, இப்போதைக்கு யாரும் பேச வேண்டாம்’ என, கட்சி சார்பில், அறிக்கை விட முடிவு செய்தனர். அந்த தகவலை, ஓ.பி.எஸ்.,சிடம் நேரில் தெரிவித்தனர்; அவர் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, நேற்று மாலையில் சமாதான அறிக்கை வெளியானது. இத்துடன், நேற்றைய பரபரப்பு முடிவுக்கு வந்தது. ஆனால், முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலக, ஓ.பி.எஸ்., மறுத்து விட்டதால், இரு தரப்புக்கும் இடையே உருவான உரசல், மேலும் விரிசலாகலாம்; எந்த நேரத்திலும் வெடிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சென்னை, கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வரின் நல் ஆளுமை விருது, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் உள்ள, கருவூல கணக்கு துறைக்கு வழங்கப்பட்டது. அந்த விருதை, முதல்வர் வழங்கினார். துணை முதல்வர், துறை அதிகாரிகளுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். விருது வாங்கச் சென்றபோது, அவரை வரிசையில் நிற்க வைத்து, அவமானப்படுத்தியதாக தகவல் பரவியது; இதை அதிகாரிகள் மறுத்தனர். ‘மற்ற துறை அமைச்சர்களுடன் பேசியபடி தான், துணை முதல்வர் வந்தார். அவர், அவமானப் படுத்தப்படவில்லை’ என்றனர்.’முதல்வரிடம் விருது வாங்க, ஓ.பி.எஸ்., மறுத்திருக்கலாம் அல்லது அதிகாரிகளை விட்டு வாங்கச் செய்திருக்கலாம். அது, துணை முதல்வர் புறக்கணிப்பு என பேசப்பட்டு விடும் என்பதால், ஓ.பி.எஸ்.,சே நேரில் சென்றார்’ என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

‘தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்காதீர்!”

தலைமை ஒப்புதல் இல்லாமல், கட்சியினர் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்; மீறுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., – இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் அறிவித்து உள்ளனர்.அவர்களின் அறிக்கை:தமிழக மக்களுக்காக ஆற்ற வேண்டிய பணிகள், இன்னும் ஏராளமாக உள்ளன. அதை நோக்கிய பயணத்தில், நாம் அனைவரும், மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது.நான்கு ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும், எப்படி மாற்றாரும் பாராட்டும் வகையில் வழிநடத்தினோமோ, அதைப் போலவே, இனிவரும் காலங்களிலும், சிறப்புற ஆட்சி நடத்தி, மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற, நாம் ஒன்றுபட்டு, உழைக்க வேண்டிய நேரமிது.கடந்த சில நாட்களாக, கட்சி நிர்வாகிகள் சிலர், எந்த பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள், மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறி விட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க, ஜெ., காலத்தில் இருந்ததைப் போல, ராணுவ கட்டுப்பாட்டுடன், தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.
கட்சியின் கொள்கை முடிவுகளையும், கூட்டணி நிலைப்பாடுகளையும், தலைமை விரிவாக ஆலோசித்து, தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில், சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும்.எனவே, சிறு சலசலப்புகளுக்கும் இடம் தராமல், நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். மக்கள் பணியிலும், கட்சி பணியிலும் மட்டும் கவனம் செலுத்துங்கள்.கட்சி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கட்சி தலைமை ஒப்புதல் இல்லாமல், ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

ஓ.பி.எஸ்., எதிர்ப்பால் இ.பி.எஸ்., பயணம் ரத்து

ஓ.பி.எஸ்., எதிர்ப்பை தொடர்ந்து, முதல்வர் இ.பி.எஸ்., பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை, அ.தி.மு.க.,வில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில், நேற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான, ஓ.பி.எஸ்.,சை, மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.அவர்களிடம், முதல்வர் தன்னை எவ்வாறெல்லாம் அவமானப்படுத்துகிறார் என்பதை, ஓ.பி.எஸ்., பட்டியலிட்டுள்ளார்.அப்போது, அவர் கூறியுள்ளதாவது:தேர்தலுக்கு முன்னதாக, அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல, முதல்வர் திட்டமிட்டுள்ளார். கட்சி சார்பில் சென்றால், என்னையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதால், மாவட்டங்களில் ஆய்வு செய்ய செல்வதாகக் கூறி, என்னை ஒதுக்கிவிட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறார்.இவ்வாறு, அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த விபரங்களை, முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, நாளை திருவள்ளூர் செல்வதாக இருந்த, முதல்வர் பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

%d bloggers like this: