இந்தியாவில் அதிகரிக்கும் கல்லீரல் சிரோசிஸ் மரணங்கள்… காரணம் என்ன?

ஆரம்பத்தில் இரண்டரை கிலோ அளவில் ஆரோக்கியமாக இருந்த கல்லீரல், சிரோசிஸ் நிலையில் சிறியதாகச் சுருங்கி கரடுமுரடாகிவிடும். இதுவே கடைசி நிலை. இந்த நிலையில் கல்லீரலின் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படுகின்றன.

ராத்தியத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான நிஷிகாந்த் காமத் சமீபத்தில் கல்லீரல் சிரோசிஸ் நோய் காரணமாக உயிரிழந்தார். இவர் தமிழில் மாதவனை நாயகனாக வைத்து `எவனோ ஒருவன்’ என்ற படத்தை இயக்கியவர். கல்லீரல் சிரோசிஸ் பிரச்னையால்

அவதிப்பட்டு வந்த நிஷிகாந்த் ஹைதராபாத் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது அவருக்கு ஏற்கெனவே இருந்து குணமான பிரச்னைதான். மீண்டும் தலை தூக்கியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கல்லீரல் சிரோசிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் ஆல்ஹகால்! தற்போது ஏற்பட்டுள்ள லாக்டௌன் தளர்வுகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் கல்லீரல் பிரச்னைகள் பற்றி எச்சரிக்கை விடுகின்றனர் மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும்.

மதுப்பழக்கம் கல்லீரலை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவரும், சென்னை லிவர் ஃபவுண்டேஷனின் (Chennai Liver Foundation) நிறுவனருமான ஆர்.பி.சண்முகத்திடம் பேசினோம்.

“கல்லீரல் என்பது நம் உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமான ஒன்று. இது வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உதரவிதானம் என்ற உறுப்புக்குக் கீழே வலது புறமிருக்கும் விலா எலும்பின் உட்புறம் அமைந்திருக்கிறது. இது ஏறக்குறைய இரண்டிலிருந்து இரண்டரை கிலோவரை எடை கொண்டது. கல்லீரல் நம் உடலின் 400-க்கும் மேற்பட்ட உடல் வளர்சிதை மாற்ற இயக்கங்களில் ஈடுபடுகிறது. நாம் உட்கொள்ளும் உணவுப்பொருள் அனைத்தும் குடல் பகுதியில் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து நேராகச் செல்லும் அடுத்த இடம் கல்லீரல்தான். குடலில் உறிஞ்சப்பட்ட உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து அந்தச் சத்துகளை ரத்த நாளங்கள் வழியே உடலின் மற்ற உறுப்புகளுக்குச் செலுத்தும் முக்கியமான வேலையைக் கல்லீரல் செய்கிறது. பித்தநீர் மற்றும் என்ஸைம்களைச் சுரந்து உணவு செரிமானத்துக்கும் இது உதவுகிறது.

உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்த உறைதலுக்குத் தேவையான புரதங்களையும் ரத்த ஓட்டத்துக்கு அவசியமான ஆல்புமின் (Albumin) என்ற புரதத்தையும் உற்பத்தி செய்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய செல்களை உற்பத்தி செய்வதில் கல்லீரல் முக்கியப் பங்காற்றுகிறது. இதனால் உடலில் பெரும்பாலான உறுப்புகளின் இயக்கம் கல்லீரலைச் சார்ந்துள்ளது.

இந்நிலையில் கல்லீரல் பாதிக்கப்படும்போது அதைச் சார்ந்த குடல், கணையம், மண்ணீரல், சிறுநீரகம், இதயம் போன்ற மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான முக்கியக் காரணமாக, ஆல்ஹகால் உள்ளது. எப்போதாவது குறைந்த அளவில் மது அருந்தும் ஒருவருக்குக் கல்லீரல் பாதிக்கப்படாது. ஆனால், ஒருவர் தொடர்ந்து மது அருந்திக்கொண்டே இருக்கும்போது அது விஷமாக மாறி முதலில் கல்லீரல், பிறகு கணையம், இரைப்பை அடுத்து குடல் என்று ஒவ்வோர் உறுப்பாகப் பாதிக்கிறது.
தினமும் 100 – 150 மி.லி என்ற அளவில் ஒருவர் தொடர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தால் நிச்சயமாக அவருக்குக் கல்லீரல் கெட்டுவிடும்.

ஆல்ஹகால் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரலின் செல்களை அழிக்கத் தொடங்கி முதலில் கல்லீரல் அழற்சியை (Hepatitis) உண்டாக்குகிறது. இதனால் பசி குறையும். உடல் எடை குறையும். பாதிக்கப்பட்டவர்களால் நடக்க முடியாது. சோர்வு ஏற்படும். கல்லீரல் அழற்சி ஏற்பட்ட ஆரம்பத்தில் இந்த அறிகுறிகள் எதுவும் தென்படாது. 70% கல்லீரல் பாதிக்கப்பட்ட பின்னரே, அறிகுறிகள் தெரியவரும்.

கல்லீரல் அழற்சியைக் கவனத்தில் கொண்டு சிகிச்சையளிக்காமல், தொடர்ந்து மது அருந்திக்கொண்டே இருந்தால் கல்லீரலின் செல்கள் சிதைவடையத் தொடங்கி, அதன் மேல் கொழுப்பு படிந்து வீக்கம் ஏற்பட்டு கல்லீரல் இன்ஃப்ளமேஷன் (liver inflammation) ஏற்படும். இதனால் உணவு செரிமான பிரச்னை ஏற்படும். குடலில் உறிஞ்சப்பட்ட உணவைக் கல்லீரலினால் சரியாக உறிஞ்ச முடியாது. ரத்தக் கசிவு ஏற்படும். மஞ்சள் காமாலை பிரச்னை ஏற்படும்.

இதன் பிறகும் சிகிச்சை எடுத்துக்கொள்ளாத நிலையில் மேலும் மோசமடைந்து கல்லீரல் ஃபைப்ரோசிஸ் (Liver Fibrosis) ஏற்படும். இந்த ஃபைப்ரோசிஸ் நிலையில் கல்லீரல் செல்கள் மீது நார் போன்ற பொருள் உருவாகி கல்லீரலின் செல்களைப் பாதித்து அதன் இயக்கத்தை முழுவதுமாகக் குறைத்துவிடும்.
கல்லீரல் ஃபைப்ரோசிஸ்ஸுக்கு அடுத்த நிலை கல்லீரல் சிரோசிஸ் (Liver Cirrhosis). ஃபைப்ரோசிஸ் நிலையில் கல்லீரலில் உருவான நார்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரலைச் சுருங்கச் செய்து, மொத்தமாகச் செயலிழக்க வைக்கும் நிலையே கல்லீரல் சிரோசிஸ். ஆரம்பத்தில் இரண்டரை கிலோ அளவில் ஆரோக்கியமாக இருந்த கல்லீரல், சிரோசிஸ் நிலையில் சிறியதாகச் சுருங்கி கரடுமுரடாகிவிடும். இதுவே கடைசி நிலை. இந்த நிலையில் கல்லீரலின் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படுகின்றன. கல்லீரல் சிரோசிஸ் ஏற்படுவோருக்குக் கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் நிறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் இருப்பவர்களை உயிர் பிழைக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.

அதிரவைக்கும் கல்லீரல் கணக்கு

கல்லீரல் அழற்சி, கல்லீரல் இன்ஃப்ளமேஷன் அல்லது கல்லீரல் ஃபைப்ரோசிஸ் ஏற்பட்ட ஒருவரின் மதுப் பழக்கத்தை நிறுத்தி அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை போன்ற நடவடிக்கைகள் மூலம் ஓரளவு காப்பாற்ற முடியும். ஆனால், கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட்டுவிட்டால் அவர் அதிகபட்சம் 10 வருடங்கள் உயிர்வாழலாம். அதற்குமேல் பிழைக்க வைப்பது கடினம். 20 வயதில் மது அருந்தத் தொடங்கும் ஒருவருக்கு 40 வயதில் கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட்டுவிடும். அதற்குமேல் 4 அல்லது 5 வருடம் மட்டுமே அவரால் வாழ முடியும்.

மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இந்தப் பாதிப்புகளை மனத்தில் கொண்டு மது அருந்துவதைக் கைவிட வேண்டும். தற்போது பள்ளிச் சிறுவர்கள்கூட மது அருந்தத் தொடங்கிவிட்டார்கள் என்பது வருந்தத்தக்க விஷயம். இதனால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் சிரோசிஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை மருத்துவர்களும், தமிழக அரசும் நாடு முழுக்க கொண்டுசெல்ல வேண்டும்” என்றார் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஆர்.பி.சண்முகம்.

Leave a Reply

%d bloggers like this: