“காங்கிரஸுக்கு 20 சீட்கள் மட்டுமே!”

தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க-வில் கலகம் வெடித்துவிடும் போலிருக்கிறதே?” – கழுகார் என்ட்ரி கொடுத்ததுமே கேள்விக்கணையைப் பாய்ச்சினோம். ஃபில்டர் காபிக்கு ஆர்டர் கொடுத்தவர், “கழகங்களில் கலகம் இல்லை என்றால்தானே ஆச்சர்யம்…” என்றபடி நமது நிருபர் எழுதியிருந்த `யார் முதல்வர் வேட்பாளர்? அ.தி.மு.க-வில் தகிக்கும் பஞ்சாயத்து’ கட்டுரையில் பார்வையை ஓடவிட்டார். “கட்டுரையில் சொல்லப்படாத சில தகவல்களை உமக்குச் சொல்கிறேன்” என்று காபியை உறிஞ்சியபடியே செய்திகளுக்குள் தாவினார்.

“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில நாள்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார். அதற்கு மறுதினம்தான், ‘இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தைச் சந்திப்போம். எடப்பாடியை முன்னிறுத்தி தளம் அமைப்போம்!’ என்று கர்ஜித்தார். ராஜேந்திர பாலாஜியை இப்படிப் பேசவைத்ததே எடப்பாடிதானாம். கட்சிக்குள் யார், என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவே இந்த யுக்தி என்கிறார்கள்.”

“ஓஹோ…”

எடப்பாடியுடன் ராஜேந்திர பாலாஜி - அ.தி.மு.க அலுவலகத்தில்...

எடப்பாடியுடன் ராஜேந்திர பாலாஜி – அ.தி.மு.க அலுவலகத்தில்…

“ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் என மூவருமே சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தவர்கள். எனவே, ‘சசிகலா தரப்பு இவர்களைவைத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்த நினைத்திருக்கலாம்’ என்று பன்னீர் தரப்பு நினைக்கிறதாம். தளவாய் சுந்தரம் மூலம் இந்த மூவ் நடந்திருக்கலாம் என்கிறார்கள். தொடர்ந்து ஆகஸ்ட் 13-ம் தேதி ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. இதில், ‘யாரும் இது தொடர்பாகப் பேசி தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம்’ என்று முடிவெடுக்கப்பட்டதாம். விரைவில் இது தொடர்பான அறிக்கையும் வரலாம். எல்லாம் சரி… இவ்வளவு களேபரங்கள் நடந்தபோதும் கொங்கு மண்டல அமைச்சர்கள் எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை, கவனித்தீரா?”

“கவனித்தோம்… கவனித்தோம். சர்ச்சையைப் பெரிதுபடுத்த அவர்கள் விரும்பவில்லையாம். அவர்கள் அப்படிப் பெரிதுபடுத்தினால் சாதிரீதியாகக் கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்று நினைக்கிறார்கள். ‘தி.மு.க-வுக்கு நேரடி எதிரி பா.ஜ.க-தான்’ என்று தமிழக பா.ஜ.க-வின் துணைத் தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி பேசியுள்ளாரே?”

“தாங்கள் எந்நேரமும் கூட்டணியிலிருந்து கழற்றிவிடப்படலாம் என்பதை பா.ஜ.க மோப்பம் பிடித்துவிட்டது என்கிறார்கள். அதனால்தான், ‘பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். பா.ஜ.க-வை எந்தக் கட்சி அனுசரித்துச் செல்கிறதோ அதனுடன் கூட்டணி அமைப்போம்’ என்று வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.”

“ஆனால், பா.ஜ.க மாநிலத் தலைவரான எல்.முருகன், ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடரும்’ என்று சொல்லியிருக்கிறாரே..?”

“இவர்களின் வழக்கமான ‘உள்ளே வெளியே நாடகம்’ இப்போது ஓயாது போலிருக்கிறது. கே.பி.முனுசாமி இந்த விவகாரத்தில் கொதித்துப்போய், ‘கூட்டணி பற்றிப் பேசுவதற்கு வி.பி.துரைசாமி யார்?’ என்று கேள்வி எழுப்பினார். அடுத்த சில மணி நேரங்களிலேயே ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் செயல்பட வேண்டும். தாய்வழி வந்த தங்கங்களெல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!’ என்று ட்வீட் செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஓ.பி.எஸ்.”

 

“சரி, தி.மு.க-வின் கூட்டணிக் கணக்கு எப்படியிருக்கிறது?”

“சமீபத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீட்டில் நடந் துள்ளது. அப்போது, ‘காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக இருபது தொகுதிகளுக்கு மேல் கொடுக்க வேண்டாம்’ என்று இளம் வாரிசு ஒருவர் சொல்லியிருக்கிறார். ‘கடந்த முறை 41 சீட்களை வாரி வழங்கி, 33 தொகுதிகளில் அவர்கள் தோற்றதுதான் மிச்சம். அதனால்தான் நம்மால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. எனவே, இந்த முறை குறைந்தபட்சம் 160 தொகுதிகளில் தி.மு.க போட்டியிட வேண்டும். கூட்டணிக்குள் தே.மு.தி.க வந்தாலும் இந்த எண்ணிக்கையிலிருந்து குறையக் கூடாது’ என்றும் அந்த வாரிசு உறுதியுடன் கூறியிருக்கிறார்.”

“சரிதான்… காங்கிரஸின் மனநிலை என்னவாக இருக்கிறது?”

“ரஜினியுடன் கூட்டணிக்காகக் காய் நகர்த்திவந்த ப.சிதம்பரம் தரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, புதுக்கோட்டை பெரியார் நகரில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா நடந்தது. அப்போது பேசிய ப.சிதம்பரம், ‘எங்களுக்கு 41 தொகுதிகள் கொடுத்தது மிகக் குறைவு. கேட்ட தொகுதிகளை தி.மு.க ஒதுக்கவில்லை’ என்று சீறினார். ஆனால் இன்று அதே ப.சிதம்பரம் தரப்பில், ‘தி.மு.க கூட்டணிதான் நமக்கு ஒரே சாய்ஸ். ரஜினியை இனியும் நம்ப முடியாது. தி.மு.க-வில் கொடுப்பதை வாங்கிக்கொள்ளலாம்’ என்று காங்கிரஸ் டெல்லி மேலிடத்திடம் சொல்லப்பட்டிருக்கிறதாம்.”

“சரிதான்…”

“தமிழக காங்கிரஸ் கமிட்டியில் பவர்ஃபுல் பதவிக்குப் பெண் பிரமுகர் ஒருவர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். மாநிலத் தலைவர், தமிழக மேலிடப் பார்வையாளர்களின் ஆசியுடன் இந்த அறிவிப்பு வெளியானது. தற்போது, ‘அந்தப் பெண் பிரமுகர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்’, ‘சோனியா காந்திக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்’ என்றெல்லாம் புகார்களை ஒரு டீம் டெல்லிக்குத் தட்டிவிட்டுள்ளது. என்னவாகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.”

கழுகாருக்கு நேந்திரம் சிப்ஸைக் கிண்ணத்தில் நீட்டினோம். ஒன்றை எடுத்து வாயில் போட்டுக்கொண்டவர், “இன்னொரு கோஷ்டி தகராறையும் சொல்கிறேன், கேளும்” என்று சுவைத்தபடியே தொடர்ந்தார்.

“அ.தி.மு.க மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நாஞ்சில் டொமினிக் கடந்த முறை விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தார். இந்த முறையும் விளவங்கோட்டில் சீட் கேட்கிறார். அதே தொகுதிக்கு மாவட்டச் செயலாளரான ஜாண் தங்கமும் அடிபோடுகிறார். இந்தத் தகராறில், ‘டெபாசிட் இழந்த வேட்பாளர்’ என நாஞ்சில் டொமினிக்கைக் குறிவைத்து ஜாண் தங்கத்தின் ஆதரவாளர்கள் தகவல் பரப்புகிறார்களாம். அதற்கு பதிலடியாக, ‘கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க, கன்னியாகுமரி மற்றும் தருமபுரியில் மட்டுமே தோல்வியைத் தழுவியது. கன்னியாகுமரி வேட்பாளராகக் களமிறங்கிய ஜாண் தங்கம், வெறும் 17.8 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார். அப்போது விளவங்கோட்டில் அவர் வாங்கிய ஓட்டு வெறும் 13,000 மட்டுமே. ஆனால், 2016 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட நாஞ்சில் டொமினிக் கட்சியினர் உள்ளடி வேலை பார்த்தபோதும், 25,000 ஓட்டு வாங்கினார். ஜாண் தங்கத்தைவிட நாஞ்சில் டொமினிக்தான் ஒசத்தி’ எனப் புள்ளிவிவரப் புலியாக மோதிக்கொள்கிறார்கள்!”

சர்ச்சைக்குரிய அலுவலகம்

சர்ச்சைக்குரிய அலுவலகம்

“சண்டையில் சட்டை கிழியாமல் இருந்தால் சரி…”

“சமீபத்தில் கோவை தி.மு.க-வில் நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகத் தலைமைக்கு ஐபேக் ரிப்போர்ட் அளித்துள்ளதாம். அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்த தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, கொறடா சக்கரபாணி ஆகியோர் கோவைக்கு வந்திருந்தனர். ஆகஸ்ட் 10-ம் தேதி கோவை தி.மு.க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மைக் பிடித்த முன்னாள் கவுன்சிலர் சேரலாதன், ‘சிங்காநல்லூர் எம்.எல்.ஏ-வான கார்த்திக் முன்னாடி நல்லாத்தான் இருந்தாரு. எம்.எல்.ஏ ஆனதுக்கு அப்புறம்தான் தொடர்பு எல்லைக்கு வெளியே போயிட்டார்’ என்று சரவெடியாக வெடிக்கவும், தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். இதனால், கார்த்திக்கின் முகம் சுருங்கிவிட்டது. நிலைமையைச் சமாளிக்க எழுந்த நேரு, ‘கைதட்டி விசில் அடிக்கிறது ஈஸி. இங்கே வந்து கட்சியை நடத்திப் பார்க்கணும். அப்போதான் சிரமங்கள் தெரியும்’ என்று சமாதானப்படுத்தினார்.”

“ஓ…”

“முன்னாள் மாவட்டச் செயலாளர் வீரகோபால், நாச்சிமுத்து, மீனா லோகு ஆகியோரிடம் தனித்தனியாக நேரு பேசியுள்ளார். அவர்கள் தரப்பிலும் கார்த்திக்மீது புகார்கள் அடுக்கப் பட்டனவாம். கடுப்பாகி கார்த்திக்கை அழைத்த நேரு, ‘நாங்களும் உன்னோட இடத்தையெல்லாம் கடந்து வந்தவங்க தான். எல்லாரையும் அரவணைச்சு போங்க’ என்று சீரியஸாக அட்வைஸ் செய்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்த படியே மு.க.ஸ்டாலினுக்கும் போன் போட்டு நிலவரத்தை விளக்கினாராம்.”

“சரிதான்…”“தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினரான கே.கே.நகர் தனசேகரனின் ஆட்டத்தால் கொதிப்பில் உள்ளனர் உடன்பிறப்புகள். அந்தப் பகுதியில் கட்சிக்குச் சொந்தமாக சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம் ஒன்று உள்ளது. கட்டடத்தின் கடைகளிலிருந்து மாதந்தோறும் கட்சிக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கணக்கு வழக்குகளைப் பகுதிச் செயலாளர் கண்ணன் என்பவர் கையாண்டு வருகிறார். இதற்கிடையே, `கணக்கு வழக்குகள் சரியாக இல்லை’ என தனசேகரனின் கோஷ்டியினர் புகார் எழுப்பி னார்கள். பதிலுக்கு கண்ணன் தரப்பினரோ, `தனசேகரன் இந்தச் சொத்தை அடையத் திட்டம் போடுகிறார். அவர் பகுதிச் செயலாளராக இருந்தபோது நிறைய முறைகேடுகளைச் செய்திருக்கிறார்’ என்று அறிவாலயத்துக்குப் புகார் அனுப்பியுள்ளனர்.”

“ம்ம்…”

“இதில் ஆத்திரமடைந்த தனசேகரன் தரப்பினர், திரண்டுவந்து கட்சிக்குச் சொந்தமான கடைகளைப் பூட்டிவிட்டார்கள். இந்த விவகாரம், தி.மு.க-வின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் மா.சுப்ரமணியத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டது. மறுநாளே சாவியை ஒப்படைத்துவிட்டார் தனசேகரன். `கே.கே.நகரில் கண்ணன் மேற்கொள்ளும் கட்சிப் பணிகள் தனசேகரனின் கண்களை உறுத்தியதாலேயே இப்படித் தொல்லைகளைக் கொடுக்கிறார்’ என்கிறார்கள் உடன்பிறப்புகள். தனசேகரன் ஆதரவாளர்களோ, ‘தப்பு நடந்ததால் தட்டிக் கேட்டோம்’ என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

Leave a Reply

%d bloggers like this: