கூட்டறிக்கை வெளியிட்டும் கூடாத இதயங்கள்… நீறு பூத்த நெருப்பாக தகிக்கும் அதிமுக..!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி மோதல் அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கலக்கம் அடையச் செய்துள்ளது.

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதனை ரசித்து வருகிறது சசிகலா தரப்பு.

கூட்டறிக்கை வெளியிட்டும் கூடாத இதயங்களாகவே இருக்கின்றனர் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

கட்டுப்பாடு

இந்தியாவில் வேறெந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத பெருமை அதிமுகவுக்கு ஒரு காலத்தில் இருந்தது.

யார் முதல்வர்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடுத்தது யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். இடையேயான விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்துக் கூறியிருப்பதை சாதாரணமாக கடந்து விடமுடியாது. கட்சிக்குள் நிலவும் குழப்பங்களையும், அதிகார மோதலையும் அமைச்சர்கள் அளித்த பேட்டிகள் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.

ஓ.பி.எஸ்.கெடு

இதனிடையே சுதந்திரத்தினத்தன்று சென்னை பசுமை வழிச்சாலையில் நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் டெல்லி வரை எதிரொலித்துள்ளன. கட்சியா? ஆட்சியா? என்பதில் தனக்கொரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மேலும், இ.பி.எஸ். தரப்பிடம் விரைவில் இதற்கான பதிலைக் கேட்டுச்சொல்லுமாறும் அவர் கெடு விதித்திருக்கிறாராம்.

கூடாத இதயம்

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதை போல் மேல் மட்ட தலைவர்களின் அதிகார மோதலால் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். தாங்கள் இருவரும் ஒற்றுமையாக தான் உள்ளதாக ஊடகங்களுக்கு காட்டும் பொருட்டு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கூட்டறிக்கை வெளியிட்டும் இதயங்கள் கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அதிமுகவில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் சசிகலா தரப்பு உன்னிப்பாக கவனிக்கத் தவறவில்லை.

Leave a Reply

%d bloggers like this: