`டிப்ரெஷன்தான் வில்லன்!’ நீரிழிவு நோயாளிகளை டிப்ரெஷன் எப்படி பாதிக்கிறது?

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், நீரிழிவுக்கும் டிப்ரெஷனுக்கும் ஒருசேர சிகிச்சையளித்து வந்தால், நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்ற ஆய்வு முடிவொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகனிடம் பேசினோம்.

“இந்தியாவில் கிட்டத்தட்ட 8 கோடி மக்களுக்கு நீரிழிவு இருக்கிறது.

“மனநல மருத்துவர் பூங்கோதை என்பவர் 7 வருடங்களுக்கு முன்னால் டிப்ரெஷன் தொடர்பாக ஆராய்ச்சி ஒன்றைச் செய்தார். அதன்படி, சென்னையில் 15 சதவிகித மக்களுக்கு டிப்ரெஷன் இருப்பதையும், நீரிழிவு நோயாளிகள் மத்தியில் 20 சதவிகிதம் பேருக்கு டிப்ரெஷன் இருப்பதையும், பல வருடங்களாக நீரிழிவு இருப்பவர்களுக்கும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்களுக்கும் டிப்ரெஷன் அதிகம் இருப்பதையும் கண்டுபிடித்து தன் ஆராய்ச்சிக் கட்டுரையில் பதிவு செய்தார் அவர்.

அமெரிக்காவைச் சேர்ந்த வேன் கேட்டன் (wayne katon) என்ற மருத்துவர், `நீரிழிவு நோய்க்குச் சிகிச்சையளிக்கிற மருத்துவமனைகளிலேயே, அங்கு பணியாற்றும் செவிலியர்களின் மூலமாக, டிப்ரெஷனால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து மோட்டிவேட் செய்யலாம். இதனால் நீரிழிவு பிரச்னை கட்டுக்குள் இருக்கும்’ என்று நிரூபித்தார். இந்தியாவில் இருக்கிற நீரிழிவு நோய் நிபுணர்கள் சிலர் அவருடன் இணைந்து, நம் நாட்டுக்கு ஏற்ப அதைச் செயல்படுத்த ஆரம்பித்தோம்.

டயட்டீஷியன், சோஷியல் வொர்க்கர்ஸ், டிகிரி முடித்தவர்களுக்கு டிப்ரெஷனை எப்படிக் கண்டறிவது, டிப்ரெஷனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி அறிவுரை தருவது, அவர்களிடம் எப்படிப் பேசுவது, அவர்களை எப்படி மோட்டிவேட் செய்வது என்று பயிற்சிகொடுத்து, எங்களிடம் சிகிச்சைக்கு வருகிற நீரிழிவு நோயாளிகளிடம் பேச வைத்தோம்

இரண்டு வருட ஆராய்ச்சியான இதில், முதல் வருடம் எங்களிடம் நீரிழிவு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு வழக்கம்போல நீரிழிவுக்கான சிகிச்சை தந்ததோடு, டிப்ரெஷனுக்கான கவுன்சலிங்கை, நாங்கள் பயிற்சி கொடுத்து வைத்திருப்பவர்கள் கொடுத்தார்கள். உதாரணத்துக்கு, நீரீழிவு வந்தவர்களுக்கு ஆசைப்பட்டதைச் சாப்பிட முடியாதே என்ற வருத்தம்தான் அதிகம் இருக்கும். அதைப் போக்கினோம். பிடித்த உணவுகளை அளவாகச் சாப்பிடுவது, டயட்டை கன்ட்ரோலில் வைப்பது போன்றவற்றை சொல்லித் தந்ததோடு, `இன்னிக்கு வாக்கிங் போனீங்களா’, `மாத்திரை சாப்பிட்டீங்களா’, `உங்களுக்குப் பெரிய பிரச்னை ஒண்ணுமில்லீங்க’ என்பதுபோல சம்பந்தப்பட்டவர்களுக்கு போன் செய்து பேசினோம். இதனால், எங்களிடம் நீரிழிவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது.

இரண்டாம் வருடம், வழக்கம் போல நீரிழிவு நோயாளிகள் வந்தால் சிகிச்சையளிப்பது என்று மட்டும் இருந்தோம். இந்த முறை நோயாளிகளின் சுகர் கட்டுப்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், நீரிழிவு நோயாளிகளுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதுதான் நீரிழிவைக் கட்டுக்குள் வைப்பதற்கான வழி என்பதைக் கண்டறிந்தோம். இந்த ஸ்டடியை பப்ளிஷ் செய்தோம். இந்த மருத்துவமுறையை நாங்கள் integrating depression and diabetes என்கிறோம்.

இந்த ஆராய்ச்சி நேரத்தில், நிலைமை கைமீறி தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு டிப்ரெஷனில் இருப்பவர்களைக் கண்டறிந்தால், அவர்களை உடனே மனநல மருத்துவரிடம் அனுப்பி வைத்தோம். இனிமேல் நீரிழிவு நோயாளிகளுக்கு டிப்ரெஷனுக்கான சிகிச்சையும் அளித்து, அவர்களின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம்” என்கிறார் டாக்டர் மோகன்.

இதுகுறித்து மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் பேசியபோது, “நீரிழிவு இருப்பவர்களுக்கு டிப்ரெஷன் வரலாம். தொடர்ந்து பல நாள்கள் டிப்ரெஷனுடன் வாழ்பவர்களுக்கு நீரிழிவு வரலாம். அதனால், இரண்டுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சையளிக்க வேண்டும். நீரிழிவுக்கான மாத்திரை மட்டும் போட்டால் நீரிழிவு முழு கன்ட்ரோலுக்குள் வராது. அப்போது டிப்ரெஷனுக்கான மாத்திரையும் சேர்த்துச் சாப்பிட்டால்தான் நீரிழிவு கன்ட்ரோலுக்குள் வரும்.

கவலை வேறு, டிப்ரெஷன் வேறு. எந்தவொரு காரணமும் இல்லாமல் மனது பாரமாக இருப்பது, இது இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்வது, செய்கிற வேலைகளில் கவனமின்றி இருப்பது, மற்றவர்களிடம் பேசப் பிடிக்காதது, வழக்கமாகச் செய்கிற விஷயத்தையே செய்ய முடியாமல் போவது போன்றவை டிப்ரெஷனுக்கான அறிகுறிகள். 40, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து பல வருடங்கள் டிப்ரெஷனில் இருந்து, சிகிச்சையும் எடுக்காமலிருந்தால் நீரிழிவு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதே உண்மை” என்கிறார்.

%d bloggers like this: