மலர்விழியை பாடாய்படுத்திய நிலக்கடலை! பெற்றோரே… ரொம்ப உஷாராக இருக்கணும்

குழந்தை சிறிய பொருளை தானே கையில் வைத்திருக்கிறது, இதனால் என்ன பிரச்னை வரப்போகிறது என்று, சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள் சிலர். அது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதற்கு, குழந்தை மலர்விழிக்கு நடந்த சம்பவமே ஒரு சாட்சி.திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம், ஆலங்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ்,

கார்த்திகா தம்பதிகளின் ஒன்றரை வயது குழந்தை மலர்விழி. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, திடீரென மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டது.இதை பார்த்து செய்வதறியாது திகைத்து போன பெற்றோர், உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றுள்ளனர்.நிலைமை மோசமடைந்ததால், டாக்டர்களின் பரிந்துரையின் பேரில், கோவை அரசு மருத்துவனைக்கு குழந்தை கொண்டு வரப்பட்டது.மருத்துவமனை டீன் (பொ) காளிதாஸ் அறிவுரையின் படி, காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவர் அலிசுல்தான், மயக்க மருந்தியல் டாக்டர் சதீஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர், குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர்.பரிசோதனையில், மூச்சுக்குழாயில் நிலக்கடலை அடைத்திருந்தது தெரியவந்தது.
மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி’ வாயிலாக, உள்ளே அடைத்திருந்த நிலக்கடலையை டாக்டர்கள் அப்புறப்படுத்தினர். குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவர் அலிசுல்தான் கூறுகையில், ”பொதுவாக குழந்தைகளின் மூச்சுகுழாய், 4 முதல் 5 மி.மீ., அளவுதான் இருக்கும். உள்ளே சிக்கிய, நிலக்கடலையின் அளவு 4 மி.மீ., இருந்தது. உள்ளே சென்ற நிலக்கடலை, ஊறியதால் அளவு பெரிதானது.

சிகிச்சை அளிக்க சற்று தாமதித்திருந்தாலும், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். குழந்தை நலமுடன் உள்ளது, அடுத்த ஓரிரு தினங்களில் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படும்,” என்றார்.பெற்றோர் கவனத்திற்கு! பெற்றோர் குழந்தைகளிடம் விளையாட சிறு பொருட்களை கொடுக்கும்போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சாப்பிட நிலக்கடலை, சீத்தாபழம், பட்டாணி, பொட்டுக்கடலை போன்றவை கொடுக்கும்போது, மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குழந்தை பேசும்போதோ, சிரிக்கும் போதோ சாப்பிடுவதற்கு எதையும் தரக்கூடாது. அவ்வாறு கொடுக்கும்போது, உணவுக்குழாய்க்கு பதில் மூச்சுக்குழாய் விரிவடைந்து, உள்ளே உணவு சிக்கிவிட அதிக வாய்ப்புள்ளது. என்றைக்கும் இல்லாமல், குழந்தைக்கு இருமல், மூச்சு திணறல் ஏற்பட்டால், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எந்நேரமும் குழந்தைகளை, கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும்.-அலிசுல்தான், துறை தலைவர், காது மூக்கு தொண்டை பிரிவு.

%d bloggers like this: