முதலமைச்சர் வேட்பாளர்… முதல் சுற்றில் கெத்து காட்டிய ஓபிஎஸ்.. எடப்பாடி வெள்ளைக் கொடி காட்டியதன் பின்னணி?

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான அதிமுகவின் உட்கட்சி போரின் முதல் சுற்றில் ஓபிஎஸ் கைகள் ஓங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமி சமாதான நிலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே ஆயத்த பணிகளை துவக்கிவிட்டது. தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரங்களை முன்னெடுக்க வியூக வகுப்பாளர் சுனிலுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுனிலின் டீம் கடந்த 3 மாதங்களாக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்க தயாராக உள்ளனர். ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த அமைச்சர் கூட எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க தயார் என்று கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னிறுத்த ஓபிஎஸ் முட்டுக் கட்டையாக உள்ளார்.

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் அல்லது முதலமைச்சர் வேட்பாளரே இல்லாமல் அதிமுகவை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது தான் ஓபிஎஸ்சின் நிலைப்பாடு என்கிறார்கள். கட்சியில் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆதரவு ஓபிஎஸ்க்கு இல்லை என்றாலும் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் ஆற்றல் ஓபிஎஸ்க்கு உண்டு என்கிறார்கள். இதன் மூலம் மீண்டும் கட்சியை அவர் உடைக்கும் பட்சத்தில் தேர்தல் சமயத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

இவற்றை எல்லாம் மனதில் வைத்து தான் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தால் அதிருப்தியில் இருந்த ஓபிஎஸ்சை சமாதானம் செய்ய அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் எடப்பாடியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும்எ ன்று ஓபிஎஸ்சிடம் மறைமுகமாக எடுத்துரைத்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் அவர்களிடம் வெளிப்படையாகவே தற்போது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஓபிஎஸ் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்கிறார்கள்.

மேலும் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்தால் தானும் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கம் தொனியில் ஓபிஎஸ் கெத்தாக கூறிய நிலையில் பிரச்சனை வேண்டாம் என்று எடப்பாடி தரப்பு சமாதானத்திற்கு இறங்கி வந்ததாகவும் சொல்கிறார்கள். எது எப்படியோ? முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் அதிமுகவில் நீரு பூத்த நெருப்பாகவே இருப்பதால் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திக் திக் மனநிலையிலேயே உள்ளனர்.

Leave a Reply

%d bloggers like this: