மூன்றாவது அணி.. ரஜினி தலைமை..! பாஜகவின் சட்டமன்ற தேர்தல் பிளான் B

அதிமுகவுடனான கூட்டணி எந்த நேரத்திலும் முறியலாம் என்கிற நிலையில் 3வது அணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பிளான் பி திட்டத்தை பாஜக வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாமரை இலை தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமல் இருந்து வரும் அதிமுக – பாஜக கூட்டணி

சட்டமன்ற தேர்தல் வரை நீடிப்பது சந்தேகமே. அதிமுகவை பாஜக நிர்வாகிகள் மிகவும் மோசமாகவும், பாஜக நிர்வாகிகளை அதிமுக நிர்வாகிகள் மிக மிக மோசமாகவும் விமர்சித்து வருவது நீடித்து வருகிறது. நோட்டாவுடன் போட்டியிடும் பாஜக என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த ட்வீட், இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் கடந்த சில மாதங்களாக அதிமுக தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. உதாரணமாக விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வீடு தேடிச் சென்று கோரிக்கை விடுத்தார். மிக விரைவாக முடிவெடுத்து நல்ல முடிவை கூறுவதாக முதலமைச்சர் தன்னிடம் கூறியதாக எல்.முருகன் தெரிவித்திருந்தார். ஆனால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இதனை தொடர்ந்தே பாஜக – அதிமுக இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் இன்னும் மேலும் பல விஷயங்களில் நீடிக்கும் என்கிறார்கள். மும்மொழிக் கொள்கை விவகாரத்திலும் அதிமுக அரசு பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது போல் தேர்தல் சமயத்தில் அதிமுக மேலும் பல அதிரடி முடிவுகளை எடுக்ககூடும். மேலும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் கூட போகலாம் என்கிறார்கள். எனவே தற்போதே பிளான் பி என்ன என்பதை பாஜக திட்டமிடத் தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள். கடந்த தேர்தலில் பாஜக தனித்து களம் இறங்கியது.

ஆனால் இந்த முறை தங்களுடன் தேமுதிக இருப்பதாக பாஜக நம்புகிறது. இதே போல் தேசியத்தை முன் வைத்து அரசியல் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படும் ரஜினியையும் பாஜக நம்புகிறது. ஒருவேளை ரஜினி கட்சிஆரம்பித்தால் அவரை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்று அவரது அணியில் இணைய பாஜக முடிவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் தங்கள் கூட்டணிக்கு வாய்ஸ் மட்டும் கொடுத்து பிரச்சாரத்திற்கு வந்தால் போதும் என்று பாஜக அழைப்பு விடுக்கும் என்கிறார்கள். இது போன்ற நிலையில் ரஜினி கூறியது போல் ஒரு இளமையான முதலமைச்சர் வேட்பாளரை பாஜக முன்னிறுத்தும் என்கிறார்கள்.

பாமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க பாஜக முயலும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த 3வது அணி வியூகம் என்பது ரஜினி எடுக்கும் முடிவை பொறுத்தே சாத்தியமாகும் என்பதையும் பாஜக உணர்ந்து வைத்துள்ளது. அந்த வகையில் இதற்காக டெல்லியில் இருந்து தலைவர்களை சென்னை வரவழைத்து ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி, 234 தொகுதிகளிலும் போட்டி என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் கமலும் கூட ரஜினியுடன் கூட்டணி வைக்க தயார் என்று கூறியுள்ளார். எனவே ரஜினி – கமல் போன்றோரை சேர்த்து3,வ து அணியை உருவாக்கிவிட்டால் தேர்தலில் திமுக, அதிமுகவிற்கு நெருக்கடி தர முடியும் என்று பாஜக போடும் பிளான் பி எந்த அளவிற்கு வெற்றியை தரும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

%d bloggers like this: