`யார் இந்துக்களின் நண்பன்?’ – அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க – பா.ஜ.க!

`தமிழக அரசின் தடை உத்தரவை மீறி, விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவோம்’ என்று ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக பா.ஜ.க எடுத்துள்ளது. இது, கூட்டணிக்கு இடையிலான மோதலை அதிகப்படுத்தியுள்ளது.

`விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியே தீருவோம்’ என்று சூளுரைத்திருக்கிறது இந்து முன்னணி. சில மாதங்களாக அ.தி.மு.க-வுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் பா.ஜ.க., இந்த விவகாரத்திலும் மோதலை உருவாக்கி, `இந்துக்களின் நண்பன் நான்தான்’ என்ற அஜெண்டாவை தூக்கிப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அரசியல்ரீதியாக இதன் தாக்கம் என்ன?

கொரோனா அச்சுறுத்தலால் பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் `கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஹோலி சம்பந்தமான எந்த நிகழ்விலும் நான் கலந்துகொள்ள மாட்டேன்’ என்று மோடியே ட்வீட் செய்திருந்தார். பூரி ஜகந்நாதர் தேரோட்ட அனுமதி வழக்கில், ஒடிசாவில் கொரோனா தாக்கம் குறைவாக இருப்பதாக வாதிடப்பட்டதால், கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.

ராமர் கோயில் அடிக்கல்நாட்டும் நிகழ்வுக்குக்கூட நூற்றுக்கும் குறைவான நபர்களே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று பரவலில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இதன் காரணமாகவே அரசு, விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதித்தது. ஆனால், இந்து அமைப்புகள் இதை அரசியலாகப் பார்க்கின்றன.

`இந்துக்களின் நண்பன் யார்?’ என்ற சண்டை பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் நெருக்கத்தில், இதன் வீச்சு இன்னும் அதிகமாகலாம்.

இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்திடம் பேசினோம். “தமிழ்நாட்டில், 36 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்திவருகிறோம். குறிப்பாக இந்த வருடம் கொரோனா பேரிடரிலிருந்து தங்களைக் காக்க, முழுமுதற் கடவுளான விநாயகரை தரிசிக்க மக்கள் விரும்புகிறார்கள். எனவே ஊர்வலம், பொதுநிகழ்ச்சிகள் இல்லாமல் மாநிலம் முழுக்க ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலையைவைத்து வழிபடுவோம். ஒவ்வொரு சிலையையும் ஐந்து பேர் கொண்ட குழுவினர் எடுத்துச் சென்று நீர்நிலையில் கரைக்க நாங்கள் ஆயத்தமாகிவருகிறோம்.

கொரோனா காலகட்டத்தில்தான் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவை நடத்த அரசு அனுமதி வழங்குகிறது. பக்ரீத் பண்டிகையின்போதும் கூட்டமாக முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்தியதைப் பார்த்தோம். அப்படியிருக்கும்போது, இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் தமிழக அரசு தடை போடுவது ஏன்? டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்து வியாபாரம் செய்யும்போது வராத கொரோனா, விநாயகர் சதுர்த்தியால் மட்டும் வந்துவிடுமா என்ன? எனவே, தமிழக அரசு தடைவிதித்தாலும்கூட, தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை சிலைவைத்துக் கொண்டாடுவோம்” என்றார்.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கிறது கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.

பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறுகையில், “சாலைப் போக்குவரத்தை அனுமதித்து, டாஸ்மாக் கடைகளையும் திறந்துவைத்துவிட்ட தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுகள் விதிப்பதென்பது இந்துக்களின் குரல்வளையை நசுக்க விரும்பும் முயற்சியாகவே தெரிகிறது. கொரோனா தொற்றைத் தடுப்பதுதான் அரசின் நோக்கம் என்றால், கும்பல் கும்பலாக டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களைவிடவுமா இது பாதிப்பை ஏற்படுத்திவிடப் போகிறது… நம்பிக்கையோடு வருகிற எங்கள் மக்களை நீங்கள் கொச்சைப்படுத்துகிறீர்களா?

கொரோனா காலகட்டத்தில், அனைவரையும் பாதுகாக்க வேண்டியது பொறுப்புள்ள ஓர் அரசின் கடமை. எனவே, குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் – நிபந்தனைகளை அரசு விதிப்பதில் தவறில்லை. ஆனால், ஊரடங்கைத் தளர்த்திவிட்ட இந்த காலகட்டத்திலும்கூட, `ஒட்டுமொத்தமாகப் பண்டிகையை கொண்டாடவே கூடாது’ என்று சொல்வது எந்தவிதத்தில் சரி? இது மதச் சுதந்திரத்தைத் தடுப்பதாக ஆகாதா? எனவே, அ.தி.மு.க அரசின் இந்த நடவடிக்கை மொத்தமாக ஏமாற்றத்தைத்தான் அளிக்கிறது” என்றார்.

குருவாயூர் கோயிலுக்கு யானைக்குட்டியை ஜெ. பரிசளித்ததாக இருக்கட்டும். மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடும்போது செருப்பைக் கழற்றிவிட்டு பயபக்தியோடு எடப்பாடி மலர் தூவியதாக இருக்கட்டும்… எந்த நிலையிலும் தங்களுடைய கடவுள் பக்தியை அவர்கள் மறைத்துக்கொண்டதில்லை.

`அ.தி.மு.க-வைவிட ஒருபடி அதிகமாக, இந்துக்களின் அடையாளமாகத் தங்களை நிலைநிறுத்த பா.ஜ.க முயல்கிறது’ என்கிற விமர்சனம் அண்மைக்காலத்தில் பரவலாக வைக்கப்படுகிறது. ஏற்கெனவே கந்த சஷ்டி விவகாரத்தை கையிலெடுத்து வேல் பூஜை நடத்தியது. அது தி.மு.க-வுக்கு எதிரான காய் நகர்த்தல் என்றாலும், `அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று அ.தி.மு.க-வையும் சாடியிருந்தது பா.ஜ.க. இப்போது விநாயகர் சதுர்த்தி விழாவையும் அவர்கள் ஓர் ஆயுதமாக எடுத்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம். “தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா வருடந்தோறும் விமர்சையாக நடைபெறும். ஆனால், இம்முறை அரசு அனுமதியோடு கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி மிகக்குறைவான மக்களோடு எளிமையாக விழா நடந்து முடிந்துள்ளது. வேளாங்கண்ணி ஆலய விழாவிலும் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இஸ்லாமிய மக்களும்கூட பக்ரீத், ரம்ஜான் பண்டிகைகளின்போது மசூதி மற்றும் மைதானங்களில் கூட்டமாகக் கூடி நின்று தொழுகை நடத்தாமல், அவரவர் வீடுகளிலேயே எளிமையான முறையில்தான் பண்டிகையைக் கொண்டாடியிருக்கின்றனர்.

இதேபோல், இந்துக்களும் அவரவர் வீடுகளிலேயே விநாயகரைவைத்து வழிபடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. மக்களும் இந்த சூழலைப் புரிந்துகொண்டு அரசோடு ஒத்துழைக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட ஒரு சில அமைப்பினர்தான் அரசியல் நோக்கத்தோடு ரோட்டிலேயே கொட்டகை போட்டு, `அதில் விநாயகர் சிலையை வைப்போம், ஊர்வலமாக எடுத்துச் செல்வோம்’ என்று அரசியல் செய்துவருகிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? விநாயகப் பெருமான், இந்து முன்னணியினருக்கோ அல்லது பா.ஜ.க-வுக்கோ மட்டுமே சொந்தமானவர் அல்ல. அவர் இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான கடவுள்! எனவே, தனிப்பட்ட வகையில், `எங்களுக்கு மட்டுமே விநாயகர் சொந்தம்’ என்று குறிப்பிட்ட அமைப்பினர் சொல்வதே மன்னிக்க முடியாத குற்றம். தவறான நோக்கத்தோடு செயல்பட நினைப்பவர்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் துணைபோகாது!” என்றார்.

இதற்கிடையே, விநாயகர் சதுர்த்தி விழா நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். மனுதாரர் மனுவைத் திரும்பப் பெறாவிட்டால், அதிக அபராதம் விதித்து மனுவைத் தள்ளுபடி செய்ய நேரிடும்” என்றும் எச்சரித்துள்ளது.

இதேபோல், `கொரோனா காலத்தில், இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முற்படுவதைத் தடை செய்ய வேண்டும்’ என்று பத்திரிகையாளர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், `தமிழக அரசின் தடை உத்தரவை மீறி, சிலை ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள இந்து முன்னணியினரைக் கைது செய்யத் தடையில்லை’ என்று கூறி வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

 

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமாரதேவன் இது குறித்துப் பேசும்போது, “கோயில், சர்ச், மசூதி என பொதுமக்கள் கூடும் எந்தவொரு நிகழ்வுக்குமே கடந்த ஆறு மாதங்களாக அரசின் தடை இருந்துவருகிறது. வரும் 31-8-2020 வரை இந்தத் தடை நீடிக்கிறது. இதற்கிடையே கடந்த 13-8-2020 அன்றைய அரசு செய்திக் குறிப்பிலும் `பொதுஇடங்களில் பிள்ளையார் சிலைகளைவைத்து பொதுமக்கள் வழிபடுவதற்கும், சிலைகளை நீர் நிலைகளிலும் கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்து முன்னணியினரோ சிலைக்கு ஐந்து பேர்கொண்ட குழுவை அமைத்திருப்பதாகவும், தமிழ்நாடு முழுக்க ஒன்றரை லட்சம் சிலைகளை அமைக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், இவர்களது எண்ணிக்கை மட்டுமே ஏழு லட்சம்வரை ஆகிறது. தொற்று பரவிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இது மிகவும் ஆபத்தான போக்கு. கொரோனா பரவுவதோடு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

அரசின் உத்தரவுகளை மற்ற மதத்தினர் அனைவரும் ஏற்றுக்கொண்டு ஒத்துழைக்கும் நிலையில், ஒரு சாரார் இதுபோலப் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இப்படிக் கலவரத்தை உருவாக்கும் இயக்கங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

மேலும், விநாயகர் சதுர்த்தி அன்று தமிழக அரசின் தடையை மீறி செயல்படுவோர்மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், தமிழக அரசின் தடை உத்தரவை மீறியிருக்கிறார்கள் என அவமதிப்பு வழக்கு தொடருவோம்” என்கிறார் தடாலடியாக.

இதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், “விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில், இந்து முன்னணி நிலைப்பாட்டை தமிழக பா.ஜ.க பின்பற்றும்” என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழக முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, “தடையை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைக் கைது செய்ய காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. தயங்காமல் நடவடிக்கை எடுங்கள்” என காத்திரமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தக் கட்டுரையைப் பதிவேற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். `ஆண்மையில்லாத அரசு’ என்று ஹெச்.ராஜா சொன்னது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்க, “மக்கள்நலனைக் கருத்தில்கொண்டே விநாயகர் சதுர்த்தி விஷயத்தில் அரசின் நடவடிக்கை உள்ளது. ஹெச்.ராஜா ஒரு ட்வீட் போட்டுவிட்டு, `அட்மின் போட்டார்’ என்று ஒளிந்துகொண்டதையும், பொதுவெளியில் ஒன்றைப் பேசிவிட்டு நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அவருக்கெல்லாம் அரசைக் குறை சொல்லத் தகுதியில்லை. தமிழக அரசு ஆண்மையுள்ள அரசுதான். காங்கேயம் காளையை உரசிப் பார்த்தால் என்ன ஆகும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை’’ என்றார் அவர்.

கட்சிகளுக்கு இடையேயான இந்த விநாயகர் சதுர்த்தி சர்ச்சை, எந்த வில்லங்கத்துக்கு வழிவகுக்கப்போகிறதோ!

Leave a Reply

%d bloggers like this: