ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (-ரிஷபம் – கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்

கொள்கையை விட்டுக்கொடுக்காத உங்களுக்கு, இந்த ராகு கேதுப் பெயர்ச்சி, நிம்மதியையும் மன மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை வீண் சச்சரவுகளையும் செலவு களையும் ஏற்படுத்திய ராகு, இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் இனி பக்குவமாகவும், இதமாகவும் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். பணவரவு சரளமாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பீர்கள்.

 

அவசரத்திற்குக் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள். ஆனால் உங்கள் ஜன்ம ராசியிலேயே ராகு அமர்வதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். ரத்த அழுத்தத்தையும் சர்க்கரையின் அளவையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பேசவோ, பழகவோ வேண்டாம். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படிச் செய்வது நல்லது. பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம்.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். இருப்பதைக் கொண்டு வியாபாரத்தை பெருக்கப் பாருங்கள். போட்டிகள் அதிகமாகும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வேலையாட் களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். மருந்து, கட்டுமானம், கன்சல்டன்ஸி, கமிஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் பழைய பிரச்னைகளைத் தூர்வாரிக் கொண்டிருக் காமல், தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கப் பாருங்கள். அதிகமாக உழைத்தும் அங்கீகாரம் இல்லையே என்று அலுத்துக் கொள்வீர்கள். அவசரப்பட்டு வேலையை விடுவதோ, புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை. பதவி உயர்வு, சம்பள உயர்வைப் போராடிப் பெறுவீர்கள். உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் சப்தம மற்றும் விரயாதிபதியான செவ்வாயின் மிருக சீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், எதிலும் பிடிப்பற்றப் போக்கு, தலைச்சுற்றல், தூக்கமின்மை, பயணங்களால் அலைச்சல், செலவுகள் ஆகியன ஏற்படலாம்.

வாழ்க்கைத்துணையுடன் ஈகோ பிரச்னை ஏற்படுவதைத் தவிருங்கள். அடகிலிருந்த நகையை மீட்க உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சகோதர வகையில் மோதல்கள் வந்தாலும் பாசம் குறையாது.

5.1.2021 முதல் 12.9.2021 வரை , ராகுபகவான் சேவாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் செல்வதால் சவால்கள், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு உண்டு.

13.09.2021 முதல் 21.03.2022 வரை, உங்கள் சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.

வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அரசால் அனுகூலம் உண்டு. தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் உட்கார்ந்து கொண்டு பலவிதமான இன்னல்களையும், அவஸ்தைகளையும், கொடுத்து வந்த கேது இப்போது ராசிக்கு 7-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். வீண் பயம் விலகும். எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.

உங்களைக் குற்றம், குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். தவணை முறையில் பணம் செலுத்திப் புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பை சரியாகப் பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி களின் ஆதரவு கூடும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் தனாதிபதியும் பூர்வ புண்யாதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேது பகவான் செல்வதால், வராது என்றிருந்த பணம் வரும். நகை வாங்குவீர்கள். பூர்விகச் சொத்தால் வருமானம் வரும்.

பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை, உங்கள் பாக்கியாதிபதியும் ஜீவனாதிபதியுமான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது பயணிப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். புது வேலை கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அரசாங்க விஷயம் உடனடியாக முடிவடையும். பழைய காலி மனையை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள்.

இயக்கம், சங்கம் ஆகியவற்றில் புதுப் பதவிகள் வரும். வேற்று மொழியினர், மாநிலத்தவரால் பயனடைவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெரிய பதவியில், நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேது பகவான் அஷ்டம மற்றும் லாபாதிபதியான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்கிறார்.ஆகவே, இக்காலக் கட்டத்தில் வீண் அலைச்சல், இரக்கப்பட்டு ஏமாறுதல், பண இழப்புகள், ஹார்மோன் பிரச்னை ஆகியவை வந்து செல்லும்.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் எந்த உதவிகள் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சொந்த பந்தங்களில் ஒருசிலரின் போக்கு, உங்களுக்கு மனவருத்தத்தைத் தரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்:

நாகப்பட்டினத்தில், ஸ்ரீஆதிசேஷனின் பூஜையால் மகிழ்ந்து அருள்பாலித்த ஸ்ரீகாயாரோகணேஸ்வரரையும், ஸ்ரீ நீலாயதாட்சி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட அன்பர்களின் வாழ்க்கைக்கு உதவுங்கள்; நிம்மதி உண்டாகும்.

Leave a Reply

%d bloggers like this: