ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (சிம்மம் – மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

நிர்வாகத் திறமையும், அதிரடித் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றும் வல்லமையும், உதவும் குணமும், எதிரிக்கும் நல்லது செய்யும் மனோபாவமும் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு இந்த ராகு – கேது மாற்றம், ஓய்வெடுக்க முடியாத அளவுக்குப் பரபரப்பையும் அதிக நேரம் உழைக்க வேண்டிய நிலையையும் தருவதாக அமைந்தாலும் அந்தஸ்தை உயர்த்துவதாகவும் இருக்கும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு 11 – ம் வீட்டில் அமர்ந்து வாழ்வில் ஓரளவு வசதி வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும், புதிய தொடர்புகளையும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் வந்தமருகிறார். கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஓர் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சி பலிதமாகும்.

தொழிலதிபர்கள், ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அவசரத்திற்குக் கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். கமிஷன், துணி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டேபோகும். மூத்த அதிகாரிகளைத் திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். விமர்சனங்கள் அதிகமாகும்.

வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங் களும் வரக்கூடும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பது தாமதமாகும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் பாக்கியாதிபதியும் சுகாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், மனஇறுக்கங்கள் குறையும். எதிர் பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே… நல்ல பதில் வரும்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை உங்களின் விரயாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத் திரத்தில் ராகுபகவான் செல்வதால், அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம்.

எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகு பகவான் உங்களின் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசாங்க அனுமதி கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரையில் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்ந்து சின்னச் சின்ன சந்தோஷங்களைக்கூட அனுபவிக்க விடாமல், பல விதமான பிரச்னைகளில் சிக்க வைத்து, சொந்த பந்தங்கள் மத்தியில் மனக்கசப்பையும், அவமானத்தையும் ஏற்படுத்திய கேது, இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள்.

புதிய முடிவுகள் எடுப்பதில் இருந்த தயக்கம் மாறும். வாழ்க்கைப் பாதையைச் சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும். குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்று வீர்கள். மகளின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத் தில் வேலை கிடைக்கும்.

கேது 4 – ம் வீட்டில் அமர்வதால் தாயார் உடல் நலனில் அக்கறை தேவை. வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

எந்தச் சொத்து வாங்கினாலும் தாய்ப் பத்திரத்தைச் சரி பார்ப்பது நல்லது. விலை உயர்ந்தப் பொருள்கள், தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம்.

வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் கடையைப் பிரபலமான இடத்திற்கு மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச் சுமையுடன் செல்வாக்கும் கூடும். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் தனாதி பதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் பணவரவு திருப்தி கரமாக இருக்கும்.

குடும்பத்தில் சலசலப்புகள் குறையும். உறவினர்களில் ஒரு சிலர் உங்கள் நிலைமை புரியாமல் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். ஆன்மிகம், யோகா, தியானம் ஆகியவற்றில் மனம் லயிக்கும். வேற்று இனத்தவர், மாற்றுமொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் சஷ்டம சப்தமாதிபதியான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் வீண் விமர்சனங்கள், மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும்.

கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைந்தாலும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். திருமணப் பேச்சு வார்த்தை தாமதமாகும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேதுபகவான் பூர்வ புண்யாதிபதியும் அஷ்டமாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்கு உயரும்.

இதுவரை நீங்கள் எதிர்பார்த்து ஏமாந்த தொகை, இனி உங்களைத் தேடி வரும். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட சிலர், இப்போது உங்கள் பக்கம் ஆதரவாகத் திரும்புவர்.

கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கி, மனம் விட்டுப் பேசுவீர்கள். இல்லத்தில் நிம்மதி பெருகும். சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது வாங்கிவிட வேண்டுமென்று நினைப்பீர்கள்.

உங்களின் இந்த எண்ணம் நிறைவேற ஏதுவான சூழல் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு-மரியாதை உயரும். உங்களின் கருத்துக்கு ஆதரவு பெருகும். உங்களில் சிலர், புதிய பொறுப்புகளுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவீர்கள்.

பரிகாரம்:

திருவாரூர் – நாகை பாதையில் உள்ள கீழ்வேளூரிலிருந்து சுமார் 3 கி.மீ, தொலைவில் உள்ள திருக்கண்ணங் குடி எனும் ஊரில், சுயம்பு லிங்கமாக அருளும் காளத்தீஸ்வரரை வணங்கி வாருங்கள். ஏழை தொழிலாளிக்கு உதவுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

Leave a Reply

%d bloggers like this: