ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (கன்னி – உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்)

தியாக உணர்வும், திடசிந்தனையும் உள்ளவர் நீங்கள். இந்த ராகு – கேது மாற்றத்தில், ராகுவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், கேதுவால் வீடு-மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு 10 வது வீட்டில் அமர்ந்துகொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமையையும், உத்தியோகத்தில் இடமாற்றங்களையும், சிறுசிறு அவமானங்களையும் தந்த ராகுபகவான், இப்போது 9-ம் வீட்டில் வந்தமர்கிறார். செயற்கரிய காரியங்களையும் இனி முடித்துக் காட்டுவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். இனி குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். வீடு கட்டவும், வாங்கவும், தொழில் தொடங்கவும் வங்கிக் கடன் கிடைக்கும். என்றாலும் ராகு 9 – ம் வீட்டில் நுழைந்திருப்பதால், தந்தையாரின் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். கொஞ்சம் சிக்கன மாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். சிலருக்குப் பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருள்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயம் அடைவீர்கள். புரோக்கரேஜ், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், பிளாஸ்டிக், கன்சல்டன்ஸி வகைகளால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் ஓர் அடிமைபோல் வேலை பார்த்தீர்களே… உங்களின் பணியில் திருப்தியில்லை என்று அடிக்கடி உயரதிகாரி புலம்பித்தள்ளினாரே… இனி, உங்கள் கை ஓங்கும். உங்களைப் புரிந்து கொள்ளும் அதிகாரி வந்துசேருவார். உங்களைப் பற்றிய தவறான கருத்துகள் விலகும். புது வாய்ப்புகள் தேடி வரும்.

எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பளப் பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புதிய வேலை அமையும். சக ஊழியர்களின் தொந்தரவுகள் விலகும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் திருதியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் ஒருவித படபடப்பு, பயம், வீண் செலவுகள், முன்கோபம் வந்து விலகும்.

இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மற்றவர்கள் விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். கடன் தொகையில் வட்டிப் பணத்தை மட்டுமே தர முடிகிறது என்று ஆதங்கப்படுவீர்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை, லாபாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு, நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர் வலிய வந்து பேசுவர்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை, ராகுபகவான் உங்களின் விரயாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், திடீர் பயணங்களால் செலவுகள் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மனஉளைச்சலால் ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும். அரசாங்க விஷயங்கள் அலைச்சலின் பேரில் முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கேதுவின் பலன்கள்:

கேது பகவான் இப்போது 3-வது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

மனோபலம் அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனத்தில் நிழலாடும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். ஷேர் மூலமாகப் பணம் வரும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு பெருகும்.

சொந்த ஊரில் மதிப்பு கூடும்.சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

பாதிப் பணம் தந்து முடிக்கப் படாமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை, உங்களின் ராசி நாதனும் தசமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத் திரத்தில் கேதுபகவான் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.

சாத்விகமான எண்ணங்கள் வரும். புது வேலை அமையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். புது பதவி, பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வழக்கு சாதகமாகும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை, உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். காலி மனையை விற்றுப் புது வீடு வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை, கேதுபகவான் சுக சப்தமாதிபதியான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், பண இழப்புகள், வந்து விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

சொத்து வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். தாயாருடன் கருத்து மோதல்களும் வரும். வாழ்க்கைத் துணைவரின் உடல் நலத்தில் அக்கறை தேவை.

வியாபாரம் செழிக்கும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரர், மீண்டும் வந்து இணைவார். வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில், உங்களுடைய கடும் உழைப்பை மூத்த அதிகாரிகள் உணர்ந்து கொள்வார்கள். சக ஊழியர் கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்துசேரும்.

பரிகாரம்

ரோடுக்கு அருகேயுள்ள கொடுமுடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள ஊஞ்சலூர் எனும் தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநாகேஸ்வரரை வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள். நினைப்பதெல்லாம் நிறைவேறும்.

Leave a Reply

%d bloggers like this: