வியர்வை சிந்தினாலே உப்பு வெளியேறும்!

சோடியம் என்றவுடன், நாம் பொத்தாம் பொதுவாக, உப்பு என்று நினைத்து விடுகிறோம். சோடியம் என்பது, சமையல் உப்பில் கலந்திருக்கும் ஒரு வேதிப்பொருள். ஒரு டீ ஸ்பூன் உப்பில், 2,300 மி.கி., சோடியம் உள்ளது. நாம், உணவில் சேர்க்கும் உப்பில் இருந்து தான், நம் உடம்பிற்கு முக்கியமான சோடியம் கி

டைக்கிறது.

உடம்பில் உள்ள திரவத்தை சீராக வைக்க, தசைகள், இதய செயல்பாட்டிற்கு என்று, உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு, சோடியம் மிகவும் அவசியம். அதேநேரம், சோடியத்தின் அளவு அதிகமாகி விட்டால், சிறுநீரக செயலிழப்பு, இதய கோளாறு, பக்கவாதம் என்று, பல பிரச்னைகள் வரும்.உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள சோடியம் அளவு, நபர் ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, 5 கிராம் மட்டுமே. ஆனால், நாம் சராசரியாக இந்த அளவை விடவும், இரண்டு மடங்கு அதிகமாக, 11 கிராம் சாப்பிடுகிறோம்.இதன் அளவு அதிகரிக்கும் போது, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதய கோளாறு ஏற்படுகிறது. இப்பிரச்னையால் ஏற்படும் இதய கோளாறு பாதிப்பில், சர்வ தேச அளவில், இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் தவிர, பக்கவாதம் வரலாம்.

ரத்தத்தில், சோடியம் அளவு அதிகமாகும் போது, அருகில் உள்ள திரவத்தை எல்லாம் ரத்தத்திற்குள் இழுத்துக் கொள்ளும்;இதனால், ரத்த அழுத்தம் அதிகமாகிறது.தினசரி சாப்பிடும் கீரை, பால் இவற்றில் இயற்கையாகவே சோடியம் உள்ளது. 100 மி., பாலில், 44 மி.கி., சோடியம் உள்ளது.இதுவே, பாலை பதப்படுத்தி, பாலாடை அதாவது, ‘சீஸ்’ செய்தால், 100 கிராம் சீசில், 620 மி.கி., இருக்கிறது. பதப்படுத்தும் போது, நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக, நிறைய உப்பு சேர்ப்பதால், சோடியத்தின் அளவும் அதிகமாகி விடுகிறது.

காய்கறிகளை நறுக்கி, வீட்டிலேயே சூப் செய்து, லேசாக உப்பு துாவி குடித்தால், 200 மி., சூப்பில், 2 மி.கி., மட்டுமே சோடியம் உள்ளது.இதுவே, கடைகளில்விற்கப்படும் பாக்கெட் சூப்புகளை வாங்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்தால், இதில், 10 மடங்கு அதிகமாக, 20 மி.கி., உள்ளது.உப்பு போட்டு பாக்கெட்டுகளில் விற்கப்படும் மோர், சிப்ஸ் இவற்றிலும் அதிகமாகவே உள்ளது.எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை குறைத்தால், சோடியத்தின் அளவையும் எளிதாக குறைக்கலாம்.

வீட்டில் சமைக்கும் உணவில் சோடியத்தை குறைக்க…

* சாம்பார், பொரியல் என்று அனைத்திலும் உப்பு போடுவதால், சாதம் வடிக்கும் போது, அதில் உப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
* சப்பாத்தி மாவில் உப்பு சேர்த்து பிசைய வேண்டாம். காரணம், பக்க உணவான, ‘சப்ஜி, பருப்பு, சென்னா, ராஜ்மா’ என்று, அனைத்திலுமே உப்பு உள்ளது.
* தோசை, இட்லி மாவில் வழக்கத்தை விடவும் உப்பை குறைத்து பயன்படுத்தலாம். உப்பு போடா விட்டால், மாவு சரியாக புளிக்காது என்பது, தவறான அபிப்ராயம். வெளியில் நிலவும் வெப்பநிலையைப் பொருத்தே, மாவு புளிக்கும்; உப்புக்கும், புளிப்பிற்கும் தொடர்பில்லை. இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ளும் சட்னி, சாம்பார், பொடி இவற்றில் உப்பு உள்ளதால், மாவில் மிகக் குறைவாக உப்பு சேர்த்தால் போதும்.
* வெள்ளரி, பச்சை காய்கறிகளில், ‘சாலட்’ செய்து சாப்பிடும் போது, உப்பு சேர்ப்பதை தவிர்க்கலாம்.
* நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதால், கருவாடு, வடாம், வற்றல் இவற்றில் உப்பு அதிகம் சேர்க்கிறோம். நிலத்தில் வேலை செய்பவர்கள் இவற்றை சாப்பிடும் போது, அதிக அளவு வியர்த்து, அளவிற்கு அதிகமான உப்பு, வியர்வையில் வெளியேறி விடும்.வியர்வை வழிய நாம் எந்த வேலையும் செய்வதில்லை; எனவே, இவற்றை தவிர்க்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: