வெளிப்படையான வரி விதிப்பு’ (Transparent Taxation – Honoring the Honest’) திட்டம்

வரி சீர்திருத்தங்கள்!

வரி நிர்வாகத்தில் முக்கிய சீர்திருத்தமாக, வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடக்கி வைத்தார். அதன்படி, அதிகாரிகளின் இடையீடு இன்றி நேரடியாக வரி செலுத்துவது நடைமுறைக்கு வரும். வரி செலுத்துவோரின் உரிமைகளும் உறுதிசெய்யப்படும்.

இந்தத் திட்டத்திற்கு, `வெளிப்படையான வரி விதிப்பு’ (Transparent Taxation – Honoring the Honest’) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியாவை மறுகட்டமைப்பு செய்வதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது.

முதல் கட்டமாக, வரி செலுத்தவோரின் உரிமைகள் உறுதிசெய்யப்படும். இரண்டாவதாக, அதிகாரிகளின் குறுக்கீடு எதுவுமின்றி நேரடியாக வரி செலுத்த முடியும். இந்த நடைமுறை, ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

இதுவரை, ஏதேனும் ஒரு நகரத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் இருந்து வரி செலுத்துவோரின் வரி கணக்குகள் சரிபார்க்கப்படும். வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இனிமேல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தகவல் பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம் மையப்படுத்தப்பட்ட கணினி வழியாக வரி செலுத்துவோரின் கணக்குகள் பரிசீலிக்கப்படும்.
இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை!2.5 கோடி

கணினி மூலமாகவே வரி செலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வாறு அனுப்பப்படும் நோட்டீஸுக்கு வரி செலுத்துவோர், அலுவலகத்துக்கு வராமல், அதிகாரி யாரையும் சந்திக்காமல் நேரடியாக மின்னஞ்சல் மூலமாக பதிலளிக்கலாம். இதில், வரி செலுத்துவோருக்கும் வருமான வரித்துறைக்கும் இடையே அதிகாரிகளின் தலையீடு எதுவும் இருக்காது.

இதேபோல், வரி செலுத்துவோரை கௌரவமாக நடத்த வேண்டும் என்று வருமான வரிச் சட்டம் கூறுகிறது. வரி செலுத்துவோரின் உரிமைகள் இனி உறுதிசெய்யப்படும்.

கடந்த சில ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.5 கோடியாக அதிகரித்துள்ளது. 130 கோடி பேர் வசிக்கும் இந்தியாவில், இந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவு. வரி செலுத்த தகுதியுடையவர்கள் தாமாக முன்வந்து நிலுவையில் உள்ள வரித் தொகையை செலுத்தி தேசத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும். நேர்மையாக வரி செலுத்துவோரால்தான் தேசம் வளர்ச்சியடைகிறது.

கடந்த காலங்களில் கட்டாய மற்றும் நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் எதிர்பார்த்த பலன்கள் இல்லை. எங்களைப் பொறுத்தவரை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை வகுத்து சீர்திருத்தங்களை மேற்கொள்கிறோம். இத்தகைய சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

முகமறியா கணக்காய்வு மற்றும் முறையீடு (Faceless Assessment & Appeal)

இந்த வழிமுறையின்படி இனிமேல், வரி செலுத்துவோர் யாருக்கும் அவரது `மதிப்பீட்டு அதிகாரி’ யாரென்று தெரியாது. இதேபோல், தன்னுடைய அதிகார வரம்பு எது என்பதும் வருமான வரி அலுவலருக்குத் தெரியாது.

உதாரணத்துக்கு, தற்போதுள்ள நடைமுறையின்படி, சென்னையில் தனியார் துறையில் பணிபுரியும் ஒருவருக்கு அவரது `ரிடர்ன்’, யாரிடம் போகும்; யார் மதிப்பீடு செய்கிறார் என்கிற விவரம் தெரியும். இனி அது சாத்தியம் இல்லை.


Income Tax

ஒரு `ரிடர்ன்’, எந்த அதிகாரியால் மதிப்பீடு செய்யப்படும் என்று தொழில்நுட்பம் தேர்வு செய்யும்; அவர் முதலில் `வரைவு மதிப்பீடு’ செய்வார். இந்த வரைவு, வேறொரு நகரில் உள்ள இன்னொரு அலுவலருக்குச் செல்லும். இவர் மதிப்பீட்டு ஆணை வழங்குவார்; இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு நகரில் உள்ள ஒரு அலுவலர் அதனை ரிவ்யூ செய்வார். இதே வழியில்தான் `முகமறியா முறையீடு’ (Faceless appeal) இருக்கும்.

கண்ணியம் காக்கப்படும்!

கடந்த பிப்ரவரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையில், “வரி செலுத்துவோரின் உரிமைகள் காக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. `முகமறியா கணக்காய்வு’ திட்டத்தை அறிமுகம் செய்த பிறகு, வரி செலுத்துவோருக்கான சாசனம் (Tax Payers’ Charter) என்கிற ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, குற்றங்களைக் கண்டுபிடிக்கும் காவல்துறை பணியைச் செய்துகொண்டிருக்கும் வருமான வரித்துறை, வரி வசூலிப்பதற்கான பணியை மட்டுமே இனி செய்யும். வேண்டிய விவரங்களை சேகரித்துக்கொண்டு, அதன் அடிப்படையில் அவருக்கு வரிக் கடப்பாடு (tax liability) எவ்வளவு என்று நிர்ணயிப்பது மட்டுமே வரித்துறையின் பணியாக இருத்தல் வேண்டும். மாறாக, குற்றவாளியைப் போல் ஒருவரை நடத்துதல், அவரின் தன்மானத்துக்கு இழுக்கு சேர்ப்பதாகும்; இயற்கை நீதிக்கும் முரண் ஆகும். இதனை இந்த சாசனம் நன்கு தெளிவுபடுத்தி இருக்கிறது.

இதில் சொல்லப்பட்டுள்ள மிகமுக்கியமான அம்சம் – `வரி செலுத்துவோர் நேர்மையாளராகப் பார்க்கப்படுவர்’. ஒருவரை மோசடி நபராக, தவறு செய்தவராக அனுமானித்துக்கொண்டு விசாரிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட நபர் முறையாக வரி செலுத்துபவர் என்கிற நம்பிக்கையுடன் அவரிடம் விசாரிப்பதே ஆரோக்கியமான நடைமுறையாக இருக்க முடியும்.

வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்!

“வரித்துறையில் கொள்கை சார்ந்த நிர்வாகம், மக்களின் நேர்மைக்கு மதிப்பளித்தல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், திறமையான நடவடிக்கைகள் ஆகிய 4 முக்கிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அதனால்தான், தற்போதைய வரிச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நடைமுறையில் இருக்கும் தற்போதைய வரி விதிப்பு முறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. எனவே, வரி விதிப்பு முறையில் அடிப்படையிலும் அமைப்பிலும் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாக, வரி செலுத்துவதில் உள்ள பிரச்னைகளுக்கு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் நடைமுறை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பலனாக, குறுகிய காலத்தில் 3 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய வரிச் சீர்திருத்தத்தினாலுல் முறைகேடுகள் நீங்கி, வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும்” என்பது வருமான வரித்துறை அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

ஆக, இந்தப் புதிய சீர்திருத்தத்தால் வரி செலுத்துவோரின் சிரமங்கள் குறைவதுடன், நேர்மையாக வரி செலுத்துபவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். அதை சரிவர சாத்தியமாக்குவது அரசின் கைகளில்தான் இருக்கிறது.

%d bloggers like this: