முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு இனி காத்திருக்கும் சவால்கள்.. என்னென்ன? சமாளிப்பாரா?

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுவும் ஓ பன்னீர்செல்வமே முன்மொழிந்து அறிவித்திருக்கிறார். இனி அவருக்கு கட்சியில் சிக்கல் இருக்காது என்றாலும் அடுத்த முறை ஆட்சியைபிடிப்பதில் தான் இருக்கிறது மிகப்பெரிய சவால். திமுகவிடம் இருந்து மிகப்பெரிய சவாலை அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியும் வரும் தேர்தலில் சந்திப்பார்கள் என்பதால் களநிலவரம் கடுமையாக இருக்கும்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த செப்டம்பர் 27ம் தேதி செயற்குழுவில் வெடித்தது. அதற்கு அடுத்த 10 நாட்களில் விடை கிடைத்துள்ளது.

தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியே அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்களிடம் அதிருப்தி

ஆனால் இனி தான் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய சவாலை சந்திக்க போகிறார். இந்த முறை சட்டசபை தேர்தல் எளிதாக இருக்காது. திமுகவிடம் இருந்து கடும் சவாலை சந்திக்க வேண்டியது வரலாம். ஏனெனில் பொதுவாக ஆளும் கட்சிகள் ஐந்து ஆண்டுகள் ஆண்டுவிட்டாலே அதன்பிறகான தேர்தலில் மக்களிடம் அதிருப்தியை சந்திக்கும். மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வை அரசு தரவில்லை என நினைத்து ஆட்சிக்கு எதிராக திரும்பி எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பார்கள். அப்படித்தான் இதுவரை நடந்தது.

கூட்டணியில் சொதப்பல்

ஆனால் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தான் பல ஆண்டுக்கு பிறகு ஆட்சி செய்த கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தது. வெறும் ஒரு சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை திமுக ஆட்சியை பறிகொடுத்தது. தனித்து பல தொகுதிகளில் நின்ற அதிமுக அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்தது. ஆனால் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை விட்டுக்கொடுத்ததால், தோல்வியை சந்தித்துடன், ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் இழந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தேமுதிக, மதிமுக கம்யூனிஸ்ட்டுகளை அரவணைத்து கூட்டணி அமைத்திருந்தால் திமுக வென்றிருக்கும். மக்கள் நலக்கூட்டணியே அமைந்திருக்காது. இதுவும் அன்றைக்கு திமுக தோற்க காரணமாக இருந்தது.

2021 சட்டசபை தேர்தல்

ஆனால் 2021 சட்டசபை தேர்தலில் அப்படியல்ல… ஏனெனில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க மோடி ஆதரவு அலை இருந்த நேரத்தில் திமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வென்றுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட இந்த சூழலில் கடந்த ஓராண்டாக பொருளாதார முடக்கம், கொரோனா பிரச்சனை ஆகியவற்றால் மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஆளும் அதிமுகவிற்கு பின்னடைவை தரும் நிகழ்வு ஆகும்.

ஜிஎஸ்டி நிலுவை தொகை

இது ஒருபுறம் எனில் இப்போதில் இருந்தே திமுக கூட்டணி ஸ்டாலின் தலைமையில் தீவிரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்துவிட்டது. வேளாண் சட்டங்கள், தொழிலாளர் நல சட்டங்கள், உள்பட மத்தியஅரசு கொண்ட வந்த பல்வேறு சட்டங்களை அதிமுக ஆதரித்தது. இதை முன்னிறுத்தி இப்போதே திமுக அதிமுக மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. மத்திய அரசின் கைப்பாவை என்று அதிமுக அரசை, திமுக விமர்சித்து வருகிறது. இதற்கு அதிமுக தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. ஜிஎஸ்டி நிலுவை தொகை விவாரத்திலும் திமுக அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. மாநில நலன் சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து திமுக போராடி வருவதால் அதற்கும் பதிலடி கொடுக்க வேண்டிய நிலையில் எடப்பாடி தலைமையிலான அதிமுக உள்ளது.

அக்னி பரீட்சை

இன்னும் தேர்தலுக்கு 7 மாதங்கள் உள்ள நிலையில் கட்சிக்குள் அதிருப்தி ஏற்படாமல் அரவணைத்து செல்ல வேண்டியது ஒருபுறம் எனில், திமுகவின் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த 7 மாதத்தில் நிறைய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டிய சவால் எடப்பாடிக்கு உள்ளது. ஆனால் அதற்கு உரிய நிதி ஆதாரங்கள் இல்லை என்பதால் அதில் உள்ள சவால்களை களைத்து வெற்றி பெற்றாக வேண்டும். ஜெயலலிதா கருணாநிதி இல்லாமல் சந்திக்கும் தேர்தல் என்பதால் ஸ்டாலின், எடப்பாடி ஆகிய புதிய தலைமையின் கீழ் திமுக, அதிமுக சந்திக்க போகும் முதல் தேர்தல் ஆகும். இது இருவருக்குமே அக்னி பரிட்சையாகும்.

Leave a Reply

%d bloggers like this: