இதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்!

கையில் யாரிடமும் காசு தங்குவதில்லை. கடைசி வரை மக்கள் வறுமையிலேயே வாழ்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் மது. குடிப்பழக்கத்தால் உடல் நலன் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பபட்டு ஏழை குடும்பங்கள் நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கின்றன.

துரதிஷ்டவசமாக பெரிய அளவில் யாரும் அதை பற்றி கவலைப்படுவதில்லை. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டில் குடிப்பழகத்தால் ஏற்பட்டு சீரழிவுகளை குறிப்பிட்டு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டி காலம் நெருங்கிவிட்டதாக கூறினார்கள்.

மதுவால் அரசுக்கு 30 ஆயிரம் கோடி வந்துள்ளதாக ஆய்வு அறிக்கைகள் சொல்கின்றன. ஆனால் அந்த வருவாய்க்காக அரசு 90 ஆயிரம் கோடியை செலவிட வேண்டியது உள்ளதாக கூறப்படுகிறது. சுகாதாரத்திற்கும்,. மனித உழைப்பு வீணாவதற்கும் சேர்த்து சுமார் 90 ஆயிரம் கோடியை அரசு இழக்க வேண்டியுள்ளது. 90 ஆயிரம் கோடியை இழந்து 30 ஆயிரம் கோடியை பெறுகிறோம் என்பதே கசப்பான உண்மை.

குடிகாரர்கள்
கட்டிட வேலை செய்வோர். ஆட்டோ ஓட்டுபவர்கள், ஐடி ஊழியர்கள், ஓட்டல் தொழிலாளர்கள்., மில்லில் வேலை செய்பவர்கள், பல்வேறு வகையான போக்குவரத்து தொழிலாளர்கள் என பாராபட்சம் இல்லாமல் குடிப்பழகத்திற்கு பெரிய அளவில் அடிமையாகி உள்ளனர். குடிப்பவர்களை மூன்று வகைப்படுத்தலாம். தினமும் குடிப்பவர்கள். இவர்கள் நாள்தோறும் வருவாயை பொறுத்து 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை சர்வசாதாரணமாக செலவு செய்கிறார்கள். வாரம் ஒருமுறை குடிப்பவர்கள் 500 ரூபாய் முதல் 1000 வரை வாரத்திற்கு செலவு செய்கிறார்கள். மாதம் ஒரு முறை குடிப்பவர்கள் மாதம் ஒரு முறை 500 முதல் 1000 வரை செலவு செய்கிறார்கள்.

கிராமத்தில் மட்டும்
ஒரு கிராமத்தில் 3000 வீடு உள்ளது என்றால் அதில் 800 பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் 400 பேர் தினமும் குடிப்பார்கள் என்று வைத்துக்கொண்டாலும் ஒரு நாளைக்கு 80000 முதல் 100000 ரூபாயை அந்த கிராம மக்கள் இழப்பார்கள். இப்படி ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் இழந்த தொகை என்பது ஆண்டுக்கு பல கோடியை தாண்டும்.

மரணம்
மதுபழக்கம் காரணமாக அடுத்த நாள் வேலைக்கு செல்லாத காரணத்தாலும் பலர் வருவாயை இழக்கிறார்கள். அந்த வகையிலும கிட்டத்தட்ட இதேபோன்றே இழப்பை சந்திக்கிறார்கள். 40 வயதிலேயே உடல் ரீதியாக பிரச்சனைகளை சந்தித்து வேலைக்கு முறையாக செல்ல முடியாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகி, கடைசியில் உடல் நலத்திற்கு பணத்தை செலவழிக்க கூடிய வழியில்லாமல் சிறுவயதிலேயே இறந்து போகிறார்கள்.

பல வீடுகளில் நிலை
இதே நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படாத குடும்பங்களை பார்ப்பது அரிது என்ற நிலை வரலாம். ஒரு ஏழை கட்டிட தொழிலாளி ஒரு நாள் 700 ரூபாய் வாங்குகிறார். அவர் வாங்கிய சம்பளத்தில் 200 முதல் 300 ரூபாயை தினமும் செலவு செய்கிறார். அதேநேரம் சம்பளம் வாங்கிய வாரத்தின் முதல் இன்னும் கூடுதலாக 500 வரை செலவு செய்யவும் தயங்குவது இல்லை. இப்படி செலவு செய்பவருக்கு மாதத்தில் 20 நாள் தான் வேலையும் இருக்கிறது. 10 நாள் வீட்டில் இருக்கும் நாளில் மீதமுள்ள பணத்தையும் குடித்தும் அழிக்கிறார். அந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண் வேலைக்கு சென்று தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். பல வீடுகளில் இதுதான் நிலை.

அவநிலையில் மக்கள்
அரசுகள் நினைத்தால் நொடிப்பொழுதில் இதை சரி செய்ய முடியும், ஆனால் துரதிஷ்டவசமாக மதுவுக்கு அதிக வரி மற்றும் அதிகமாக குடிப்பழக்கம் காரணமாக மக்கள் கூடுதலான பணத்தை ஒவ்வொரு நாளும் இழக்கிறார். கையில் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் டாஸ்மாக் கடையில் கொடுத்துவிட்டு, அரசின் ரேசன் அரிசியையும், அரசின் உதவித்தொகையையும் எதிர்பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். கண் முன்னே அழியும் ஏழை குடுமபங்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply

%d bloggers like this: