குழந்தைகளுக்கு ஆதார் கார்டு கட்டாயமா!

ஆதார் மையங்களில் புதிய பதிவிற்காக, தகவல் மாற்றத்திற்காக என இன்றும் மக்கள் கூட்டத்தைக் காண முடிகிறது. டிஜிட்டல் மயமாகும் இந்தியாவில் அரசின் பல நலத்திட்டங்களைப் பெற ஆதார் ஒரு முக்கிய ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது

ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு, பிஎஃப் கணக்கு மற்றும் பான் கார்டு ஆகியவற்றுடன் இணைக்க அரசு வலியுறுத்தி வருகிறது. பெரியவர்களுக்கு ஆதார் கட்டாயம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு எடுக்க வேண்டுமா என்ற குழப்பம் இருக்கிறது. குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு வாங்க வேண்டும் என்றால் அதனை எந்த வயதில் வாங்க வேண்டும் எனப் பல குழப்பங்கள் இருக்கிறது. “பொதுவாக புதிய ஆதார் கார்டைப் பெற, ஆதார் மையத்திற்குச் சென்று குறிப்பிட்ட விண்ணப்பப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் தமது இருப்பிடச் சான்றாக வருமான வரி, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் ஓர் ஆவண நகலையும் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு மையத்தில் நம்முடைய புகைப்படம், கை ரேகைகள், கருவிழி அமைப்பு ஆகியவை பதிவு செய்யப்பட்டுப் பதிவு நகல் வழங்கப்படுகிறது. 60 முதல் 90 நாட்களுக்குள் நமது வீட்டு முகவரிக்கே ஆதார் அனுப்பப்படும். ஆதார் கார்டு தொலைத்தவர்கள் கூட ஆன்லைனில் புதிய ஆதாரை எளிதில் பெறலாம். ஆதார் இணையதளத்தில் , ‘ download aadhaar ‘ பிரிவிற்கு சென்று, அங்கு கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை முழுவதும் பூர்த்தி செய்து, நமது மொபைல் எண்ணையும் கொடுத்து புதிய ஆதார் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.”

மேலும் ” குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை. அரசு எந்த ஒரு குறிப்பிலும் குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம் என்று குறிப்பிடவில்லை. குழந்தைகளுக்கும் ஆதார் எடுக்க விரும்பினால், 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்குப் பால் ஆதார் வழங்கப்படுகிறது. அவர்களுக்குப் பெற்றோர்களின் பயோமெட்ரிக் உடன் ஆதார் வழங்கப்படுகிறது. 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் நீல நிறத்தில் இருக்கும். அந்த நீல நிற அட்டையைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தைக்கு 5 வயது நிறைவடைந்த பின் ஆதார் மையத்திற்குச் சென்று பயோமெட்ரிக் அதாவது புகைப்படம், கைரேகை மற்றும் கருவிழி அமைப்பு ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேல் குழந்தையின் பயோமெட்ரிக் உடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆதார் வழங்கப்படுகிறது. பின் 15 வயதுக்கு மேல் ஒரு முறை ஆதாரை பயோமெட்ரிக் உடன் புதுப்பிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெறுவதற்கு, ஆதார் மையத்திற்குச் சென்று அதற்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கி நிரப்பி வழங்க வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் ஆகியவற்றையும் குழந்தைக்கான ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளிச் சேர்க்கையில் ஆதார் கட்டாயம் இல்லை அதேபோல் அரசின் எந்த ஒரு குறிப்பிலும் குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம் என்று குறிப்பிடவில்லை. ஆயினும் ஸ்மார்ட் கார்டுகளில் பெயர் இணைக்க ஆதார் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. நிதித்துறையின் கீழ் மக்களுக்குக் கிடைக்கும் பல மானியங்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகையால் பெரும்பாலானோர் அரசின் மானியங்களைப் பெறவும், குழந்தையின் பெயரை ஸ்மார்ட் கார்டில் இணைக்கவும் குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்கின்றனர்.

%d bloggers like this: