பயிர்க் காப்பீடு என்றால் என்ன? பயிர்க் காப்பீடு எங்கு எப்படிச் செய்வது?

பயிர்க் காப்பீடு

நெல், கடலை போன்ற ஆண்டு பயிர்களை (Annual Crops) திடீர் மழை, வெள்ளம் அல்லது வறட்சியினால் சாகுபடி செய்ய முடியாமல் போகலாம். அப்படி பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் மகசூல் இழக்க நேரிடும்போது அல்லது முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் போது அதை ஈடுகட்ட அரசு உதவியுடன் வழங்கப்படுவது தான் பயிர்க் காப்பீடு தொகை.

தனி ஒரு விவசாயியின் இழப்புக்குப் பயிர்க் காப்பீடு வழங்கப்படுவதில்லை. ஒரு பகுதியில் பருவநிலை மாற்றம் அல்லது இயற்கை சீற்றத்தால் இழப்பு ஏற்பட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தால் மட்டுமே அவருக்குக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

பயிர்க் காப்பீட்டிற்கென திட்டங்கள் பல உள்ளன. எந்தெந்த திட்டங்கள் எந்தெந்த பயிர்களுக்குக் காப்பீடு வழங்குகிறது என்பன போன்ற திட்டம் சார்ந்த விபரங்களை அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயத் துறை அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அங்குக் கொடுக்கப்படும் காப்பீடு திட்டத்திற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து இதற்கென்று அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். கூடவே அதற்கான பிரீமியம் தொகையையும் கட்ட வேண்டும். காப்பீடு திட்டத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும். பிரீமியம் தொகையானது, நிலத்தின் பரப்பளவு மற்றும் அங்கு விதைக்கப்பட்டிருக்கும் பயிர் வகையைக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. காப்பீட்டுத் திட்டத்தைப் பொருத்து பிரீமியம் தொகையும் மாறுபடும். மத்திய மாநில அரசுகள் பிரீமியம் தொகைக்கு மானியமும் வழங்கும். காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் அந்தத் திட்டத்தில் எப்போது இணைய வேண்டும் என்ற விபரங்களை அறிந்துகொண்டு, கொடுக்கப்பட்ட தேதிக்குள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிர்க் காப்பீடு குறித்த மேலும் தகவல்களுக்கு அதற்குரிய தமிழக அரசின் இணையதளத்தை அணுகலாம். இணையப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு வேளான் துறை, வருவாய்த் துறை மற்றும் புள்ளியியல் துறை அதிகாரிகள் சென்று அறுவடை செய்து மகசூல் இழப்பைக் கணக்கெடுப்பார்கள். இழப்பைப் பொருத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மகசூலே இல்லாத நிலைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குத் தகுந்த அளவு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். நடவு செய்து இயற்கை பேரிடர்களால் பயிர் செய்ய முடியாமல் போனாலோ அல்லது அறுவடை செய்த தானியங்கள், பயறு போன்றவற்றை உலர்த்த வைத்திருக்கும் பொழுது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அதற்கும் தக்க காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இவை காப்பீடு திட்டங்களைப் பொருத்து மாறுபடும்.

ஒரு விவசாயி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்து, அவர் இருக்கும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவருக்குக் காப்பீடு தொகை கிடைக்கும். மொத்த பகுதியில் பாதிப்பு ஏற்படாமல், ஒரு தனி விவசாயிக்கு மட்டும் மகசூலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர் காப்பீடு திட்டத்தில் இணைந்திருந்தாலும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியாது. பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் விவசாயி இருந்து, காப்பீடு திட்டத்தில் இணையாமல் இருந்தாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்காது.”

%d bloggers like this: