ரயிலில் போனில் பாட்டு கேட்டால்.. சத்தமாக பேசினால்.. இரவு லைட் போட்டால் அபராதம்! அதிரடி உத்தரவு

ரயில் பயணத்தின் போது சத்தமாக பேசவோ, சத்தமாக பாட்டு போடவோ செய்தால் அபராதம் வசூலிக்க இருக்கிறது ரயில்வே நிர்வாகம்.
இந்திய ரயில்களில் பயணம் செய்வது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. குடும்பங்களுடன், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பயணங்களுக்கு எப்போதும் ரயில் பயணம் ஏதுவாக இருக்கும்.

ஆனால், பாட்டுப்பாடிக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு பயணிக்கும் வழக்கத்துக்கு தடை போடுகிறது இந்திய ரயில்வே. சக ரயில் பயணிகளுக்கு பயணத்தை மிகவும் வசதியாகவும், இனிமையானதாகவும் மாற்ற, இந்திய ரயில்வே புதிய விதிகளை உருவாக்கியுள்ளது.

ரயில் பயணம்

இந்திய ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக இசைப்பதையும், சத்தமாக தொலைபேசியில் பேசுவதையும் தடை செய்வதன் மூலம் ரயில் பயணிகளின் பயணத்தை இனிமையாக்க முடியும் என்று தெரிவிக்கிறது இந்திய ரயில்வே. பயணம் செய்யும்போது சத்தமாகப் பேசினாலோ அல்லது சத்தமாக இசையை வாசித்தாலோ பிடிபடும் பயணி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

விதிமுறை

மேலும், இரவில் பத்து மணிக்கு மேல் மின்விளக்குகளை எரியவிடவும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவுள்ளன. பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டால், ரயில் ஊழியர்களே பொறுப்பாவார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததால், இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நடவடிக்கை

ரயில் பயணிகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதில் ரயில்வே நிர்வாகம் உறுதியாக உள்ளது. ரயில்வே போலீஸார், டிக்கெட் பரிசோதகர்கள், கோச் உதவியாளர்கள் மற்றும் கேட்டரிங் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள், பயணிகள் ஒழுங்கையும் கண்ணியமான பொது நடத்தையையும் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொந்தரவு இல்லாமல்

இந்த அறிவிப்பை மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ரயில்வே அறிக்கையின்படி, பயணிகள் இயர் போன் இல்லாமல்,மற்றவர்களை தொந்தரவு செய்யும் வகையில் இசையைக் கேட்டாலோ அல்லது சத்தமாக தொலைபேசியில் பேசுவதையோ தவிர்க்குமாறு பயணிகளுக்கு அறிவுரை வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விதிகளை பின்பற்றாத பயணிகள் மீது ரயில்வே சட்ட விதிகளின்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

%d bloggers like this: