ஸ்ரீகாந்த் பொல்லா: கண் பார்வை இழந்தாலும் ரூ. 480 கோடி மதிப்பு நிறுவனத்தின் சிஇஓ – யார் இவர்?

ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கைக் கதை இந்தியில் சினிமாவாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த இளம் முதன்மைச் செயல் அதிகாரி 480 கோடி ரூபாய் (48 மில்லியன் பவுண்ட்) மதிப்புள்ள நிறுவனத்தை கட்டியெழுப்பியுள்ளார்.

ஸ்ரீகாந்துக்கு கண் தெரியாது என்பதால், பதின்ம வயதில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்பது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது. அதை எதிர்த்து ஒரு மாநிலத்தின் மீது வழக்கு தொடுத்து, படித்துக் காட்டினார்.

ஸ்ரீகாந்த் ஆறு வயதாக இருக்கும் போது, கிராமப்புறத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு தினமும் பல கிலோ மீட்டர் நடந்து பள்ளிக்குச் சென்றார். கண் தெரியாததால் அவரது சகோதரர் மற்றும் அவரோடு பள்ளியில் படிப்பவர்கள் வழிகாட்டி உதவினர்.

சேறும் சகதியுமான பாதையில், மழை பெய்தால் வெள்ளப் பெருக்கெடுக்கும். அது ஸ்ரீகாந்துக்கு அத்தனை மகிழ்ச்சிகரமான காலமல்ல.

நான் ஒரு கண் பார்வையற்ற குழந்தை என்பதால் யாரும் என்னிடம் பேசவில்லை” என்கிறார் ஸ்ரீகாந்த்.

படிக்காத, ஏழை பெற்றோருக்குப் பிறந்ததால் சமூகத்தால் அவர் ஒதுக்கப்பட்டார்.

“என் சொந்த வீட்டுக்குக் கூட என்னால் காவலாளியாக இருக்க முடியாது, காரணம் வீட்டுக்குள் ஒரு தெரு நாய் புகுந்தால் கூட என்னால் பார்க்க முடியாது என என் பெற்றோரிடம் கூறினர்.

“பலரும் என்னை தலையணை வைத்து கொன்று விடுமாறு கூறுவர்” என தற்போது தன் 31 வயதில் ஒரு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த் பொல்லா கூறுகிறார்.

இதை எல்லாம் கண்டு கொள்ளாத இவரது பெற்றோர், ஸ்ரீகாந்துக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். மேலும் ஸ்ரீகாந்துக்கு எட்டு வயதான போது அவர் தந்தை, அவருக்கோர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஹைதராபாதில் கண் பார்வையற்றவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் படிக்க இடம் கிடைத்தது. அது அவர் வீட்டிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

அவர் குடும்பத்தை விட்டு வெகு தொலைவுக்கு பயணிக்க வேண்டி இருந்தாலும், ஸ்ரீகாந்த் எளிதாக புதிய இடத்துக்கு மாறிக் கொண்டார். அவர் நீச்சலடிக்கவும், சதுரங்கம் விளையாடவும், ஒலி எழுப்பும் பந்தில் கிரிக்கெட் விளையாடவும் கற்றுக் கொண்டார்.

இந்த பொழுதுபோக்குகளை எல்லாம் அவர் ரசித்தாலும், தன் எதிர்காலம் குறித்தும் எண்ணிப் பார்க்கத் தொடங்கினார்.

பொறியாளர் ஆக வேண்டும் என அவர் எப்போதும் கனவு கண்டார். அதற்கு கணிதம் மற்றும் அறிவியல் படிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்.

சரியான நேரம் வந்த போது ஸ்ரீகாந்த் கணிதம் மற்றும் அறிவியல் படிப்பைத் தேர்வு செய்தார். ஆனால் பள்ளி, அதை மறுத்து, அது சட்ட விரோதமானது என்று கூறியது.

இந்தியாவில் உள்ள பள்ளிகள் பல அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு அமைப்பும் தனக்கென சொந்த விதிகளைக் கொண்டிருக்கின்றன. சில பள்ளிகள் மாநில அரசுகளின் கீழும், சில மத்திய பாட திட்டத்தின் கீழும், சில பள்ளிகள் தனியார் நிர்வாகத்தின் கீழும் இயங்குகின்றன

ஸ்ரீகாந்தின் பள்ளி ஆந்திர பிரதேச மாநில கல்வி வாரியத்தின் கீழ் வருகிறது. அவ்வமைப்பு கண் பார்வையற்ற ஒருவர் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் உள்ள விளக்கப் படங்கள் மற்றும் வரைபடங்கள் போன்ற பார்வை தொடர்பான சவாலான விஷயங்கள் இருப்பதால், அதைப் பயிற்றுவிக்க அனுமதிக்கவில்லை. எனவே, அறிவியல் மற்றும் கணிதத்துக்கு மாற்றாக அவர்கள் கலை, இலக்கியம், சமூக அறிவியல் படிக்கலாம்.

இந்த சட்டம் எல்லா பள்ளிகளிலும் ஒரே போல் கடைபிடிக்கப்படவில்லை என்பதை அறிந்த ஸ்ரீகாந்த் விரக்தியடைந்தார். ஸ்ரீகாந்தைப் போலவே, அவரது ஆசிரியர்களில் ஒருவரான சுவர்ணலதா தக்கிலபதி என்பவரும் விரக்தியடைந்திருந்தார். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தன் இளம் மாணவரை ஊக்கப்படுத்தினார்.

தங்கள் தரப்பு வாதத்தை முறையிட ஆந்திர பிரதேச மாநில கல்வி வாரியத்திடம் சென்றனர். எதுவும் செய்ய முடியாது என்று கூறினர்.

பள்ளி நிர்வாகத்தின் உதவியோடு, ஒரு வழக்குரைஞரைக் கண்டுபிடித்து, ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில், பள்ளியில் பார்வையற்றோர் கணிதம் மற்றும் அறிவியல் படிக்க அனுமதிக்குமாறு சட்டத்தை மாற்ற வேண்டும் எனக்கோரி வழக்கு தொடுத்தனர்.

“எங்கள் சார்பில் வழக்குரைஞர் போராடினார்” என்கிறார் ஸ்ரீகாந்த். மாணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை.

இந்த வழக்கு காரசாரமாகப் போய்க் கொண்டிருக்க, ஹைதராபாத்தில், ஆந்திர பிரதேச மாநில கல்வி வாரியத்தின் கீழ் செயல்படாத சின்மயா வித்யாலயா என்கிற பள்ளி, பார்வையற்றோரை கணிதம் மற்றும் அறிவியல் படிக்க அனுமதிப்பதாகக் கேட்டறிந்தார். அப்பள்ளியில் இடமிருப்பதையும், அவர்கள் ஸ்ரீகாந்துக்கு வழங்கத் தயாராக இருப்பதையும் அரிந்து மகிழ்ச்சியோடு சேர்ந்தார்.

ஸ்ரீகாந்த் வகுப்பில், அவர் மட்டுமே கண் பார்வையற்ற ஒரே மாணவர். இருப்பினும் தன்னை அனைவரும் வரவேற்றதாகக் கூறுகிறார்.

“என் வகுப்பு ஆசிரியர் மிகவும் நட்போடு இருந்தார். எனக்கு உதவி செய்ய அவரால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தார். பார்வையற்றோர் தொட்டுணரும் டாக்டைல் வரைபடத்தை (Tactile diagram) வரைய அவர் கற்றுக் கொண்டார்,” என்கிறார் ஸ்ரீகாந்த்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, வழக்கில் ஸ்ரீகாந்த் தரப்பு வெற்றி பெற்றதாகச் செய்தி வந்தது. ஆந்திர பிரதேச மாநில கல்வி வாரியத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் பார்வையற்றோர் கணிதம் மற்றும் அறிவியல் படிக்கலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

“நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்” என்கிறார் ஸ்ரீகாந்த். “என்னால் செய்ய முடியும் என்பதை உலகத்துக்கு நிரூபிக்க, எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. இளைய தலைமுறை வழக்கு தொடுப்பது மற்றும் நீதிமன்றத்தில் போராடுவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்று கூறுகிறார்.

மீண்டும் நிராகரிப்பு

ஸ்ரீகாந்த் மீண்டும் மாநில வாரியப் பள்ளிக்குத் திரும்பினார். அவரது விருப்பமான கணிதம் மற்றும் அறிவியலைப் படித்தார், அவரது தேர்வுகளில் சராசரியாக 98% மதிப்பெண் பெற்றார்.

ஐஐடி (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) எனப்படும் இந்தியாவின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது அவரது திட்டமாக இருந்தது.

அக்கல்லூரியில் சேர போட்டி கடுமையாக இருக்கும். மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளுக்கு முன்னதாக தீவிர பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெறுவர். ஆனால் பயிற்சி பள்ளிகள் எதுவும் ஸ்ரீகாந்தை சேர்த்துக் கொள்ளவில்லை.

“பாடச் சுமை, ஒரு சிறிய மரக்கன்றின் மீது மழை பொழிவது போலிருக்கும் என ஒரு முன்னணி பயிற்சி நிறுவனம் என்னிடம் கூறியது,” என்று அவர் கூறுகிறார்.

ஸ்ரீகாந்த் ஐஐடிக்கான கல்வித் தரத்தை எட்டமாட்டார் என அவர்கள் கருதினர்.

“எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஐஐடி என்னை (ஸ்ரீகாந்த்) வேண்டாமென நிராகரித்தால், எனக்கும் ஐஐடி வேண்டாம்,” என்று ஸ்ரீகாந்த் கூறுகிறார்.

அவர் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தார். அவருக்கு ஐந்து இடத்திலிருந்து படிக்க அழைப்பு வந்தது. அமெரிக்காவில் உள்ள மாசாசூட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியைத் தேர்வு செய்தார். அங்கு அவர் தான் முதல் சர்வதேச பார்வையற்ற மாணவர். 2009ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற ஸ்ரீகாந்த் தன் ஆரம்ப நாட்களைப் பகிர்கிறார்.

“அதீத குளிருக்கு பழக்கமில்லாததால், அது தான் முதல் அதிர்ச்சியாக இருந்தது. அந்த நாட்டு உணவின் மணமும் சுவையும் வித்தியாசமாக இருந்தது. முதல் மாதம் முழுக்க நான் சாப்பிட்டது பிரென்ச் ஃபிரைஸ் மற்றும் ஃபிரைடு சிக்கன் ஃபிங்கர் தான்.”

இந்த சிக்கல், ஸ்ரீகாந்துக்கு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை, வெகு சில நாட்களில் அதற்குப் பழகிக் கொண்டார்.

எம்ஐடியில் இருந்த நாட்கள் என் வாழ்வின் மிக அழகான காலகட்டம்.

“பாடத் திட்டம் கடினமாக இருந்தது. அவர்களின் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகள் என்னை ஆதரிப்பதிலும், எனக்கு போதுமான இடமளிப்பதிலும், என் வேகத்தை அதிகரிப்பதிலும் பெரும் பங்காற்றின.”

அவர் படித்துக் கொண்டிருக்கும் போதே ஹைதராபாதில் இளம் மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கவும், கல்வி கற்பிப்பதற்குமென சமன்வாய் மையம் என்கிற லாப நோக்கற்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அவர் திரட்டிய பணத்தில் பிரெய்லி நூலகம் ஒன்றையும் திறந்தார்.

வாழ்க்கை சிறப்பாகச் சென்று கொண்டிருந்தது. எம்ஐடியில் மேலாண்மை அறிவியலைப் படித்த பிறகு, அவருக்குப் பல வேலை வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் அவர் அமெரிக்காவில் தங்குவதில்லை என முடிவு செய்தார்.

ஸ்ரீகாந்தின் பள்ளி அனுபவம் ஓர் அடையாளத்தை விட்டுச் சென்றது, மேலும் அவர் தனது சொந்த நாட்டில் செய்ய வேண்டிய வேலை நிறைய இருப்பதாக உணர்ந்தார்.

“வாழ்க்கையில் எல்லா விஷயத்துக்கும் நான் மிகவும் போராட வேண்டியிருந்தது, ஆனால் எல்லோரும் என்னைப் போல போராட முடியாது அல்லது எனக்கு அமைந்ததைப் போல எல்லோருக்கும் நல்ல வழிகாட்டிகள் அமையமாட்டார்கள்.” என்று அவர் கூறுகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இல்லை எனில், நியாயமான கல்விக்காக போராடுவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்தேன் என்கிறார்.

எனவே “நான் ஏன் சொந்தமாக ஓர் நிறுவனத்தைத் தொடங்கி, மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடாது?” என்று ஸ்ரீகாந்த் கருதினார்.

ஸ்ரீகாந்த் 2012 இல் ஹைதராபாத் திரும்பிய கையோடு, பொல்லன்ட் இன்ஸ்டஸ்ட்ரீஸை (Bollant Industries) நிறுவினார். பேக்கேஜிங் நிறுவனமான இது, உதிர்ந்த பனை ஓலைகளில் இருந்து சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான பொருட்களை உற்பத்தி செய்கிறது. அந்நிறுவனத்தின் மதிப்பு, சுமார் 480 கோடி ரூபாய் (£48 மில்லியன்).

இது முடிந்தவரை பல மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநல குறைபாடுள்ளவர்களைப் பணிக்கு அமர்த்துகிறது.

கொரோனா பெருந்தொற்றுநோய்க்கு முன், அந்நிறுவனத்தின் 500 ஊழியர்களில், 36% பேர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல குறைபாடுள்ளவர்களாக இருந்தனர்.

கடந்த ஆண்டு, ஸ்ரீகாந்த் உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகளாவிய தலைவர்கள் (2021) பட்டியலில் இடம்பிடித்தார்,

மேலும் மூன்று ஆண்டுகளுக்குள் தனது நிறுவனமான Bollant Industries உலகளாவிய முதல் பங்கு வெளியீட்டை (IPO) வெளியிடுமென அவர் நம்புகிறார். அதாவது அந்நிறுவன பங்குகள் ஒரே நேரத்தில் உலகின் பல சர்வதேச பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.

ஸ்ரீகாந்துக்கு பாலிவுட்டில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. பிரபல நடிகர் ராஜ்குமார் ராவ், அவரது வாழ்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. தன்னை முதலில் சந்திக்கும் போது மக்கள் தன்னை குறைத்து மதிப்பிடுவதை இது நிறுத்தும் என ஸ்ரீகாந்த் நம்புகிறார்.

“ஆரம்பத்தில் மக்கள், ‘ஓ, அவர் பார்வையற்றவர்… பாவம்’ என்று கருதுவர், ஆனால் நான் யார், நான் என்ன செய்கிறேன் என்பதை விளக்கத் தொடங்கும் போது எல்லாம் மாறிவிடும்.” என நம்பிக்கை உணர்வைப் பாய்ச்சுகிறார் ஸ்ரீகாந்த்.

%d bloggers like this: