5G சேவையால் ஏன் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன? என்ன காரணம்?

ஏர் இந்தியா, எமிரேட்ஸ், லுஃப்தான்ஸா, ஜப்பான் ஏர்லைன்ஸ், கொரியன் ஏர்லைன்ஸ் எனப் பல சர்வதேச விமான நிறுவனங்கள் நேற்று அமெரிக்காவிற்கு செல்லும் அல்லது அமெரிக்காவுக்குள் இயங்கும் தங்கள் விமான சேவைகளில் பலவற்றை (சரக்கு விமானங்கள் உள்பட) ரத்து செய்திருக்கின்றன. சில விமானங்களின் நேரத்தை திடீரென மாற்றியிருக்கின்றன.

ஏர் இந்தியா மட்டும் மொத்தம் 8 விமானங்களை நேற்றும் இன்றும் ரத்து செய்திருக்கிறது. ஏன் நேற்று ஒரே நாளில் இவ்வளவு குழப்பம்? காரணம், அமெரிக்காவில் நேற்று செயல்பாட்டுக்கு வந்த 5G சேவை.

இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு? 🤔

இந்தியாவில் ஏர்டெல், ஜியோ எப்படியோ, அதேபோல அமெரிக்காவில் டெலிகாம் துறையில் பெரிய தலைக்கட்டுகள், AT&T மற்றும் Verizon Communications.

  • அந்நாட்டில் 5G சேவையைத் தொடங்குவதற்கான பணிகளைக் கடந்த சில ஆண்டுகளாக செய்துவந்த இந்நிறுவனங்கள், இறுதியாக எல்லா உள்கட்டமைப்பு பணிகளையும் முடித்து, நேற்றைக்கு அவற்றை `On’ செய்வதற்கு தயாராக இருந்தன. எப்படி இப்போது 4G இருக்கிறதோ, அதேபோல 5G-யை அமெரிக்க வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கான முதல் படி இது.

  • ஆனால், “டெலிகாம் நிறுவனங்கள் 5G சேவையை ஆன் செய்தால், அது விமான போக்குவரத்துக்கே ஆபத்தாகப் போய் முடியும்” எனப் போர்க்கொடி உயர்த்தின விமான நிறுவனங்கள். இதையடுத்து, ஆபத்து இருப்பதாகக் கூறி, பல விமானங்களை ரத்தும் செய்துவிட்டன; இதுதான் நேற்றைய குழப்பத்திற்கு காரணம்.

ஏன் 5G-யைப் பார்த்து பயப்படுகின்றன விமான நிறுவனங்கள்? 🛩

காரணம், C band.

5G சேவையை வழங்க அமெரிக்க டெலிகாம் நிறுவனங்கள், பல லட்சம் கோடிகள் கொட்டி C band ரேடியோ அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்திருக்கின்றன. இது இப்போது விமான நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயம். 5G மூலம் டெலிகாம் நிறுவனங்களின் கைக்கும் சென்றுள்ளது.

  • தற்போது டெலிகாம் நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்திருக்கும் அலைவரிசை, 3.7 – 3.98 GHz வரை. விமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருபவை, 4.2 – 4.4 GHz வரை.

  • இரண்டிற்கும் இடைவெளி மிகக்குறைவு என்பதால், 5G சேவைகளின் C band ஆனது, விமான நிறுவனங்களின் C band-ஐ பாதிக்கலாம்; இதன்மூலம் விமானங்களின் தகவல் தொடர்பு பாதிக்கப்படலாம்” என்பது விமான நிறுவனங்களின் வாதம்.

  • அதிலும் மிக முக்கியமாக விமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டுவது, விமானங்களின் Radar altimeter-களை; விமானங்கள் தரையிலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என விமானிக்குச் சொல்வதும், மோசமான வானிலையின்போது அவர் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க உதவுவதும் இந்த altimeter-தான். 5G சேவைகளின் C band இவற்றை நேரடியாக பாதிக்கலாம் என அஞ்சுகின்றன விமான நிறுவனங்கள். விஞ்ஞானிகளும் இப்படி நடக்க சாத்தியம் இருப்பதாகவே கருதுகின்றனர்.

  • ஆனால், டெலிகாம் நிறுவனங்கள் இவற்றை முற்றிலுமாக மறுக்கின்றன. “அமெரிக்காவில் மட்டுமல்ல; இதற்கு முன்பே சுமார் 40 நாடுகளில் 5G சேவைக்கான C band இயக்கத்தில் இருக்கிறது; அங்கேயும் விமான நிலையங்கள் இருக்கின்றன; அமெரிக்க விமானங்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் வராத பிரச்னை அமெரிக்காவில் மட்டும் எப்படி வரும்?” என்கின்றன அவை. நியாயம்தானே? அப்படித்தான் தெரியும். ஆனால், இதற்கும் அதற்கும் சின்ன வித்தியாசம் இருக்கிறது.

பிற நாடுகளில் நடந்தது என்ன? 📶

  • ஐரோப்பிய யூனியனை எடுத்துக்கொண்டால் அது 5G C band-டிற்காக ஒதுக்கியிருக்கும் அலைவரிசை 3.4-3.8 GHz.

  • தென் கொரியாவை எடுத்துக்கொண்டால், 3.42-3.7 GHz. பிரான்ஸை எடுத்துக்கொண்டால் 3.6-3.8 GHz. இவையனைத்துமே அமெரிக்காவை விடக் குறைவு (3.7 – 3.98 GHz). அமெரிக்காவை தவிர 4-க்கு அருகில் வேறு எதுவும் வரவில்லை. அமெரிக்க விமான நிறுவனங்களின் அலைவரிசையும் 4.2 – 4.4 GHz.

  • இப்படி, அமெரிக்காவில்தான் டெலிகாம்களின் அலைவரிசையும் அதிகம்; விமான நிறுவனங்களின் அலைவரிசைக்கும் அது மிக நெருக்கமும் கூட. எனவே, இங்கு பிரச்னையே வேறு என்கின்றன விமான நிறுவனங்கள்.

  • மேலும், அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வரும் 5G-யை விடவும் இந்த நாடுகளில் 5G-யின் ஆற்றலும் குறைவுதான். வேறு எந்த நாடுகளில் இருந்தும் இதுவரைக்கும் 5G சேவைகளால் விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எதுவும் புகார்கள் இல்லை. இருப்பினும் அமெரிக்காவின் கதையே வேறு என்பது இவர்கள் வாதம். யார் சொல்வதுதான் சரி? அரசு என்னதான் செய்கிறது?

அதிகாரிகள் செய்த பஞ்சாயத்து

டெலிகாம் நிறுவனங்கள் முதன்முதலாக 5G சேவைகளை நாடெங்கும் தொடங்க திட்டமிட்டது கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி. ஆனால், அப்போதும் இதே பாதுகாப்பு பிரச்னைகளை எழுப்பி, டெலிகாம் நிறுவனங்களை 5G சேவையைத் தள்ளிவைக்குமாறு கேட்டுக்கொண்டன விமான நிறுவனங்கள் பின்னர், இந்த மாத தொடக்கத்தில் தொடங்கலாம் என இருக்கையில், மீண்டும் இதே பிரச்னை; இதே கோரிக்கை. இறுதியாக நேற்று எப்படியும் தொடங்கிவிடலாம் என இருந்தன டெலிகாம் நிறுவனங்கள்.

  • ஆனால், மீண்டும் விமான நிறுவனங்கள் ஒன்றாக, நேற்று முன்தினம் அமெரிக்க அதிகாரிகளிடம் போய் நிற்க, அவர்களும் டெலிகாம் நிறுவனங்களிடம் பேச, “இப்போதைக்கு விமான நிலையங்களுக்கு அருகில் 2 மைல் தூரத்திற்கு மட்டும் 5G சேவைகளைத் தொடங்க மாட்டோம்; ஆனால், பிற இடங்களில் 5G செயல்பாட்டுக்கு வரும்” என இறுதியாக அறிவித்தனர். இந்த முடிவுக்காக அமெரிக்க அதிபர் பைடனும் டெலிகாம் நிறுவனங்களுக்கு நன்றி சொன்னார். அப்படியிருந்தும் ஏன் நேற்று ஏன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன?

இரண்டு காரணங்கள்

  1. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை. இந்தப் புதிய மாற்றங்களால் சிக்கல் ஏற்படலாம் எனக் கருதப்பட்ட போயிங் 777 வகை விமானங்கள் மட்டுமே பெருமளவில் ரத்து செய்யப்பட்டன. இதேபோல பழைய வகை altimeter வைத்திருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

  2. இரண்டாவது, எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் டிம் கிளார்க் சொல்லும் காரணம்.

“அமெரிக்காவின் 5G ஆன்டனாக்களில் ஆற்றலானது, பிற நாடுகளில் உள்ளதைவிடவும் இருமடங்கு அதிகம் என எங்களுக்கு நேற்றுதான் தெரியவந்தது. இதனால் altimeter மட்டுமல்ல; விமானத்தின் மொத்த தகவல் தொடர்புமே பாதிக்கப்படலாம் என நாங்கள் சந்தேகிப்பதால்தான் திடீரென நேற்று விமானங்களை நிறுத்தினோம்” எனச் சொல்கிறார் அவர்.

இதனால்தான், பலமுறை வாய்தா வாங்கியும்கூட, இறுதி நேரத்தில் பஞ்சாயத்து செய்து, டெலிகாம் நிறுவனங்களின் முடிவை மாற்றியிருக்கின்றனர்.

எப்போதுதான் பிரச்னை சரியாகும்? 🧐

அது அமெரிக்க அரசின் கைகளில்தான் இருக்கிறது. இப்போதைக்கு விமான நிறுவனங்கள் இரண்டு விஷயங்களை உறுதி செய்யவேண்டும்.

  1. அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வரும் 5G சேவை, விமானங்களில் தகவல் தொடர்பை பாதிக்கிறதா, இல்லையா?

  2. அப்படி, பாதித்தால் அதற்கேற்ப விமானங்களின் தொழில்நுட்பங்களை அப்டேட் செய்ய முடியுமா?

இந்த இரண்டிற்கும் அமெரிக்க அரசு அதிகாரிகளும், விமான நிறுவனங்களும் உறுதியான விடைகாணும் வரையில் பிரச்னை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

%d bloggers like this: