கிரிப்டோகரன்சி என்றால் என்ன? – எளிமையான விளக்கம்

அனைத்து கடந்த சில ஆண்டுகளில், கிரிப்டொகரன்சிகள் பல மடங்கு பிரமாண்டமாக வளர்ந்திருக்கின்றன.

எனவே இயல்பாகவே நம் மனதில் கிரிப்டொ குறித்துப் பல கேள்விகள் இருக்கும். சில முக்கிய மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்.

கிரிப்டோகரன்சிகள் என்றால் என்ன?

கிரிப்டோகரன்சிகள் என்பது ஒரு வகையான டிஜிட்டல் கரன்சி, அதைத் தொட்டு உணரவோ, பார்க்கவோ முடியாது. ஆனால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. இந்த கிரிப்டோகரன்சிகள் பிளாக்செயின் என்கிற தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. இத்தொழில்நுட்பம் தான் கிரிப்டோகரன்சிகளின் பரிமாற்றங்களைக் கண்காணிக்கின்றன. இக்கரன்சியை எந்த ஒரு மத்திய வங்கியோ, அமைப்போ இயக்குவதில்லை.

பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சி என்கிற இரண்டும் ஒன்று தானா?

இல்லை, பிளாக்செயின் என்பது கிரிப்டோகரன்சிகளை இயக்க பயன்படுத்தப்படும் ஒரு வகையான தொழில்நுட்பம். இரண்டும் வெவ்வேறானவை.

இந்தியாவில் உள்ள ஒருவர் எப்படி பிட்காயினை வாங்க முடியும்?

ஒருவர், பிட்காயின் பரிவர்த்தனை சந்தைகளிலிருந்து (எக்ஸ்சேஞ்ச்) எளிதில் வாங்கலாம். பங்குச் சந்தைகளில் ஒரு நிறுவனப் பங்கை வாங்குவது போல அது எளிதானது. நீங்கள் கிரிப்டோ பரிவர்த்தனை சந்தைகளில் உங்களைப் பதிவு செய்து கொண்டு, அடிப்படை விவரங்களை எல்லாம் வழங்கிவிட்டு, பிட்காயினை வாங்கவோ விற்கவோ தொடங்கலாம்.

பிட்காயினில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் வரிகளுக்கு உட்பட்டவைகளா?

கடந்த பிப்ரவரி 2022-ல் இந்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், அனைத்து வகையான கிரிப்டோகரன்சிகளிலிருந்து பெறப்படும் வருமானத்துக்கும் 30% வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு குறித்த முழு விளக்கங்கள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. கூடிய விரைவில் இது குறித்த தெளிவான சட்ட வரையறைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அதே நேரத்தில், கிரிப்டோகரன்சிகளை, சட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கரன்சிகளாக இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி இன்னும் அங்கீகரிக்கவில்லை.

கிரிப்டோகரன்சியை எப்படி ரொக்கமாக மாற்றுவது?

உங்களிடம் இருக்கும் கிரிப்டோகரன்சிகளை, கிரிப்டோ பரிவர்த்தனை தளத்தில் விற்று டிஜிட்டல் பணமாகவும், பிறகு அதை ரொக்கமாகவும் மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் கே ஒய் சி விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் மேற்கொள்ள ஏதாவது தனி கால நேரம் உண்டா?

கிரிப்டோகரன்சிகளை நிர்வகிக்க பிரத்தியேகமாக எந்த ஒரு அமைப்பும் இல்லை என்பதால், வாரத்தில் ஏழு நாட்களிலும், ஒரு நாளின் 24 மணி நேரத்திலும் கிரிப்டோவில் வர்த்தகம் மேற்கொள்ளலாம்.

உலகின் முன்னணி கிரிப்டோகரன்சிகளை எவை?

பிட்காயின், எதிரியம், எக்ஸ் ஆர் பி, டெதெர், லைட் காயின் ஆகியவை உலக கிரிப்டோ சந்தையில் சுமார் 80% வர்த்தகமாகின்றன. உலகில் சுமாராக 7,000 கிரிப்டோகரன்சிகள் வர்த்தகமாகி வருகின்றன.

கிரிப்டோகரன்சிகளை ஹேக் செய்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா?

இது ஒரு டிஜிட்டல் கரன்சி என்பதால், ஹேக் செய்வது மற்றும் ஏமாற்றப்படுவதற்கான அபாயங்கள் அதிகமாக இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் கிரிப்டோ கரன்சிக்கான தளத்தை உருவாக்கி, கிரிப்டொகரன்சிகளை விற்கத் தொடங்கலாம். ஒரு தளத்தில் கிரிப்டோ வர்த்தகத்தைத் தொடங்குவதற்கு முன், அவர்களைக் குறித்து விரிவாக அலசி ஆராய்வது நல்லது.

கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தி, இணைய தளங்களிலிருந்து பொருட்களையோ சேவைகளையோ பெற முடியுமா?

ஒரு சில வெளிநாடுகளில் இது போன்ற பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் இதுவரை அப்படிப்பட்ட வசதிகளை எந்த ஒரு நிறுவனமும், இ காமர்ஸ் வலைத்தளங்களிலும் கொண்டு வரப்படவில்லை.

ஒரு கிரிப்டோகரன்சியை வேறு ஒரு கிரிப்டோகரன்சியாக மாற்ற முடியுமா?

இல்லை. இதுவரை அப்படியொரு வசதி கொண்டு வரப்படவில்லை. கிரிப்டோ பரிவர்த்தனை தளங்கள், எந்த ஒரு டிஜிட்டல் கரன்சியையும் டோக்கன்களாக மாற்றிக் கொள்ள அனுமதிக்கும். அந்த டோக்கன்களைக் கொண்டு கிரிப்டோகரன்சிகளை வாங்கிக் கொள்ளலாம்.

கிரிப்டோகரன்சிகளின் விலை எப்படி மாற்றமடைகின்றன?

பங்குச் சந்தைகளில் எப்படி பங்குகளின் விலை மாற்றமடைகிறதோ, அப்படி கிரிப்டோ கரன்சிகளின் விலையும் பல்வேறு காரணிகளால் மாற்றமடைகின்றன. ஒரு கிரிப்டோகரன்சியின் தேவை (டிமாண்ட்), விநியோகம், போட்டி, அது தொடர்பான செய்திகள் எனப் பல காரணிகள் இருக்கின்றன. கிரிப்டோகரன்சிகள் அதீதமாக விலை மாற்றங்களைக் காணக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: